Friday, October 23, 2015

71. கிங் படத்தில் நடந்த மாற்றம்

ஜி.பாலன்

பிரசாந்த் நடித்த ‘சாக்லேட்’ படம் இயக்கிக் கொண்டிருந்த போது, மியாவ் படத்தின் கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தார் இயக்குனர் ஏ.வெங்கடேஷ். அப்போது அவருக்கு நடிகர் விஜய்யிடம் இருந்து அழைப்பு வந்தது.

ஏற்கனவே விஜய்யை சந்தித்து ‘பகவதி’ படத்தின் கதையை சொல்லி இருந்தாராம் ஏ.வெங்கடேஷ். அந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை அவருக்கு அப்போது விஜய் கொடுத்துவிட்டார். இதனால் ‘மியாவ்’ படத்தை துவங்கவில்லை. 

உமாபாலன் படமும், ஏ.வெங்கடேஷ் படமும் துவங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், வேதனை அடைந்தார் முருகானந்தம்.

இந்த நிலையில் அவரை சந்தித்த இயக்குனர் பிரபு சாலமன், நடிகர் விக்ரமிடம் கதை சொல்லி இருக்கிறேன். அவர் நடிக்க தயாராக இருக்கிறார் என்கிற தகவலை தெரிவித்தார்.

கிங் - விக்ரம், சினேகா 
கிண்டியில் குதிரை பந்தயம் நடக்கும் மைதானத்தில், ‘தில்’ படத்தின் படப்பிடிப்பில் இருந்தார் விக்ரம். அவரை நானும், முருகானந்தமும் நேரில் சென்று சந்தித்தோம்.

முதலில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தவர், பிறகு முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள், ‘தில்’ படம் வெளியானதும் எவ்வளவு சம்பளம் என்பதை சொல்கிறேன்ம், என்றார்.

அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் விக்ரம் நடித்த ‘கிங்’ படம்.

மிடில் கிளாஸ் மாதவன் படத்திற்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் தினா. அவரை ஒப்பந்தம் செய்து ஒன்பது பாடல்களை கலசா ஒளிப்பதிவு கூடத்தில் பதிவு செய்தார் முருகானந்தம். பாடல்களை கவிஞர் வைரமுத்து, ஜீவன் இருவரும் எழுத, சங்கர் மகாதேவன், உன்னிகிருஷ்ணன், திப்பு, கிளிண்டன், சுஜாதா, மகாலட்சுமி ஐயர், மாதங்கி ஆகியோர் பாடி இருந்தனர்.

இயக்குநர் பிரபு சாலமன் 
அலுவலக நிர்வாகத்தை என்னுடைய அக்காள் மகன் சங்கர், ரங்கராஜ், ராமநாதன் ஆகியோர் கவனித்துக்கொள்ள, மூர்த்தி, விமல் ஆகியோர் உதவியாளர்களாக இருந்தார்கள். தயாரிப்பு நிர்வாகத்தை கே.கே.ரவி தலைமையில், லோகு, அண்ணாமலை, முருகன் ஆகியோர் கவனிக்க, படப்பிடிப்பு துவங்கியது.

பிரபு – கார்த்திக் கூட்டணியில் கண்ணோடு காண்பதெல்லாம் படத்தை பிரபு என்கிற பெயரில் இயக்கிய பிரபு சாலமன், ‘கிங்’ படத்தை ஏ.எக்ஸ். சாலமன் என்கிற பெயரில் இயக்கினார்.

இந்தியன் தியேட்டார் புரொடக்சன் என்கிற பட நிறுவனத்தை துவங்கி, தனது பெயரை எஸ்.கே.கிருஷ்ணகாந்த் என்று மாற்றிக் கொண்டார், முருகானந்தம்.  

ஸ்டான்லி, பருத்தியூர் லட்சுமணன் இருவரும் இணை இயக்குனர்களாக பணிபுரிய, பிரகாஷ், ஜெயவேல், ரமேஷ், பாலகுரு, பாலசங்கர் ஆகியோர்  உதவி இயக்குனர்களாக பணிபுரிந்தனர். 

இசையமைப்பாளர் தினா 
ஜெயபாரதி ஹவுசில் பொன்னம்பலம் குழுவை விக்ரம் பழிவாங்குவது போன்ற காட்சியை எடுத்தார்கள். காசிமேடு நடுக்கடலில் மகாநதி சங்கரை அடித்து கல்லை கட்டி கடலுக்குள் போடுவது போன்ற பரபரப்பான காட்சியை படமாக்கினார்கள்.

ஒவ்வொரு எதிரியையும் விக்ரம் பழி வாங்கும் போல எடுக்கப்பட்ட பல காட்சிகள், பல நாட்கள் படமாக்கப்பட்டது. ஆனால், அதிரடியான காட்சிகளை கொண்ட அந்த கதையை, திடீர் என ஓரம்கட்டிவிட்டு, பிறகு வேறு ஒரு கதையை படமாக்க, படக்குழுவுடன் காரைக்குடி, அம்பாசமுத்திரம் போன்ற இடங்களுக்கு சென்றார் பிரபு சாலமன்.

ஆனால், முதலில் எடுத்த கதைக்கு வைத்த பெயரையே இரண்டாவதாக எடுத்த கதைக்கும் வைத்திருந்தார்கள். 

விக்ரம் ஜோடியாக சினேகா நடிக்க, இவர்களுடன் நாசர், ஜனகராஜ், வடிவேலு, சந்தானபாரதி, அனுமோகன், மதன்பாப், சுமித்ரா, சபீதா ஆனந்த், ஸ்ரீகாமு உட்பட பலர் நடித்த அந்தப் படத்திற்கு ரமேஷ்.ஜி ஒளிப்பதிவு செய்தார்.

எம்.சுகுமார், புகைப்பட கலைஞர் 
மைனா, கும்கி படங்களின் மூலம் புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார், இந்தப் படத்தில் புகைப்பட கலைஞராக அறிமுகமானார். கலை இயக்குநர் எஸ்.ஏ.சி.ராம்கி, அவரது உதவியாளர் பாபு, எடிட்டர் லான்சி மோகன், நடன இயக்குனர்கள் சின்னி பிரகாஷ், தினேஷ், ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் என பலர் பணியாற்றிய இந்தப் படத்தின் மூன்று பாடல்களை, புரமோஷன் பாடலாக உருவாக்கி இருந்தார், ‘மச்சி’ படத்தின் இயக்குனரான கே.எஸ்.வசந்த்.

இந்தப் படத்தில் மக்கள் தொடர்பாளராக நான் பணிபுரிவேன் என்று நம்பினேன். ஆனால், தனது மக்கள் தொடர்பாளர் ஜான்சன் என்பவரை விக்ரம் அனுப்பி இருந்தார். அதனால், நான் தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்தின் நண்பராகவே இருக்க வேண்டியதாகி விட்டது. இப்போதும், அவரது நல்ல நண்பராக இருக்கிறேன்.

2002 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி வெளியான கிங் படம், எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

கிங் - ஜனகராஜ், நாசர், விக்ரம், சினேகா 
படப்பிடிப்பு துவங்கும் முன்பே, தயாரிப்பாளர் எஸ்.கே.கிருஷன்காந்த் திருமணம், அவரது சொந்த ஊரான தருமபுரில் எளிமையாக நடைபெற்றது. சென்னையில் இருந்து இரண்டு கார்கள் மூலம் படக்குழுவினர் மட்டுமே சென்று வந்தோம்.  

‘கிங்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, ‘மியாவ்’ படத்திற்கு உதவி இயக்குனர்களாக பணிபுரிய வந்த சுப்பிரமணியம் சிவா, கே.எஸ்.வசந்த் இருவருக்கும் தனித்தனியாக அறைகள் கொடுத்து, சிவா, தனுஷ் நடித்த ‘திருடா திருடி’ கதையை உருவாக்கவும், வசந்த், துஷ்யந்த் நடித்த ‘மச்சி’ கதையை உருவாக்கவும் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார், தயாரிப்பாளர் எஸ்.கே.கிருஷ்ணகாந்த்.

அந்தப்பட அனுபவங்களைப் பற்றி அடுத்த கட்டுரைகளில் சொல்கிறேன்.

Thursday, October 22, 2015

72. பொள்ளாச்சியில் உருவான ‘தென்காசிப்பட்டணம்’

எஸ்.எஸ்.துரைராஜ் 
திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பில் வி.சேகர் இயக்கிய பல குடும்ப செண்டிமெண்ட் கலந்த நகைச்சுவை படங்களை செ.கண்ணப்பனுடன் இணைந்து தயாரித்த, எஸ்.எஸ்.துரைராஜு, கமர்சியல் படங்களை தயாரிக்க முடிவு செய்தார்.

இதற்காக தயாரிப்பாளர்கள் சங்கிலி முருகன், எடிட்டர் மோகன் ஆகியோருடன் இணைந்து மலையாளத்தில் வெளியான ‘தென்காசிப்பட்டணம்’ படத்தை விலைக்கு வாங்கினார்.

மலையாளத்தில் வெளியான ‘தென்காசிப்பட்டணம்’ படத்தை இயக்கிய ராஃபி, தமிழிலும் இயக்க வேண்டும் என்று கேட்ட போது, அவர், தனது தம்பி ஷாஃபி இயக்குனராக அறிமுகமாகும் ‘ஒன் மேன் ஷோ’ படத்திற்கு திரைக்கதை எழுதவும், அவருக்கு உதவியாக இருக்கவும் முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.

அதனால், தமிழில் யாரை இயக்க வைப்பது, யாரை கதாநாயகனாக நடிக்க வைப்பது என்று ஆலோசனைகள். நடந்தன.

என்னை அழைத்து கேட்ட போது, டி.பி.கஜேந்திரன் ‘பட்ஜெட் பத்மநாபன்’ படத்தை சொன்ன மாதிரியே இயக்கி கொடுத்தார். அதனால், கே.ஆர்.ஜி. அவர்கள் லாபம் அடைந்தார். அது போல அவரை இயக்க வைக்கலாம் என்று தெரிவித்தேன்.

ஆனாலும், தொடர்ந்து ஆலோசனைகள் நடந்தன. தனது மகன் ராஜாவை இயக்குனராக தெலுங்கு மொழியில் அறிமுகப்படுத்த முடிவு செய்த எடிட்டர் மோகன், அந்த கூட்டணியில் இருந்து விலகி, ‘தென்காசிப்பட்டணம்’ படத்தை தெலுங்கு மொழியில் ‘அனுமான் ஜங்க்ஷன்’ என்கிற பெயரில் தயாரித்தார். அதில் அர்ஜுன், ஜெகபதி பாபு இருவரும் நடித்தனர்.

தமிழில் சரத்குமார் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமான பிறகு, அவரது சம்பளம் அதிகமாக இருக்கிறது என்று சங்கிலி முருகனும் விலகிக் கொண்டார். அதன் பிறகு சரத்குமார், நெப்போலியன் இருவரும் நடிக்க படத்தை துவங்குவது என்று முடிவு செய்து, இயக்குனராக மனோஜ்குமாரை ஒப்பந்தம் செய்தார் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.துரைராஜு.

என்னிடம் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய சொன்னார், வடபழனியில் உள்ள ஆதித்யா ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து அறிவிப்பும் வெளியானது.  

மறுவாரம், இயக்குனர் மனோஜ்குமாரை விஜயகாந்த் அழைத்து ‘ராஜ்ஜியம்’ பட வேலைகளை உடனே துவங்க சொன்னதால், மனோஜ்குமார் ‘தென்காசிபட்டணம்’ படத்தை தனது இணை இயக்குனர் ஆர்.எஸ்.ராம்நாத் என்பவரை வைத்து துவங்க விரும்பினார். அதற்கு தயாரிப்பாளர் துரைராஜு சம்மதிக்கவில்லை.

அதனால், கே.எஸ்.ரவிகுமார் உட்பட சில இயக்குனர்களிடம் ஆலோசனை நடத்தியவர், பிறகு மலையாளத்தில் இயக்கிய ராஃபி ‘ஒன் மேன் ஷோ’ வேலைகளை முடித்துவிட்டார் என்பதை அறிந்து, அவரையே ஒப்பந்தம் செய்தார்.

செ.கண்ணப்பன், எஸ்.எஸ்.துரைராஜ்
அவர் மூலமாக மலையாளத்தில் கதாநாயகியாக நடித்த சம்யுக்தாவர்மாவையும் ஒப்பந்தம் செய்தார்.

ஏவி.எம். ஸ்டுடியோவில் பட துவக்க விழாவும், கோயம்புத்தூர் பீளமேட்டில் உள்ள ஒரு பங்களாவில் படப்பிடிப்பும் என பட வேலைகள் தீவிரமானது.

மலையாளத்தில் சுரேஷ் கோபி நடித்த வேடத்தில் சரத்குமார் நடிக்க, லால் நடித்த வேடத்தில் நெப்போலியன் நடித்தார். திலீப் நடித்த வேடத்தில் விவேக் நடிக்க, சம்யுக்த வர்மா, தேவயானி, அஸ்வதி, சார்லி, வினுசக்கரவர்த்தி, டெல்லிகணேஷ், பாண்டு, குமரிமுத்து, கோவைசரளா, ஸ்ரீவித்யா, கல்பனா, தியாகு, மயில்சாமி என பலர் நடித்தனர்.

கோயம்புத்தூரை தொடர்ந்து பொள்ளாச்சியை சுற்றிய பல இடங்களில் படப்பிடிப்பு நடந்தது.

எடிட்டர் மோகன் 
மலையாளத்தில் கலை இயக்குனராக பணிபுரிந்த போபன், ஒளிப்பதிவு செய்த சுகுமார், படத்தொகுப்பு செய்த ஹரிஹரபுத்திரன், இசையமைத்த சுரேஷ் பீட்டர் ஆகியோர் தமிழிலும் பணிபுரிந்தார்கள். பாடல்களை கவிஞர் வாலி எழுத, வசனங்களை வி.பிரபாகர் எழுதினார்.

மனோ, ஸ்ரீனிவாஸ், மாணிக்க விநாயகம், ஸ்ரீராம், சித்ரா, சுவர்ணலதா, சுஜாதா, சுரேஷ் பீட்டர் ஆகியோர் பாடல்களை பாடி இருந்தனர். நடனக் காட்சிகளை பிருந்தா, கலா, கூல் ஜெயந்த் ஆகியோர் அமைக்க, சண்டைக் காட்சிகளை படமாக்கினார் ஜாக்குவார் தங்கம்.

பொள்ளாச்சி மார்க்கெட்டில் தொடர்ந்து இருபத்தி நான்கு மணி நேரம் சண்டைக் காட்சிகள் படப்பிடிப்பு நடைபெற்றது.

சங்கிலி முருகன் 
இந்தப் படத்திற்கு புகைப்பட கலைஞராக எல்.மூர்த்தி பணியாற்ற, நெல்லை சுந்தராஜனும், நானும் மக்கள் தொடபாளராக பணியாற்றினோம். சேத்தூர் தவகுரு ஒப்பனை, கணேசன் காஸ்டியூம், தயாரிப்பு மேற்பார்வை வி.எம்.பாபுஜி, தயாரிப்பு நிர்வாகம் எஸ்.முருகன், அலுவலக நிர்வாகம் எஸ்.தனலிங்கம், அண்ணாத்துரை, சேகர், ஐயப்பன் ஆகியோர் கவைக்க, தயாரிப்பு நிர்வாக ஆலோசனையை நாராயணன் ஏற்றிருந்தார். மேக்ஸ் டிசைனராக பணியாற்ற அவருக்கு உதவியாக இருந்தாரா, டி.வேலு

மாஸ் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.எஸ்.துரைராஜு அவர்கள் தயாரித்த ‘தென்காசிப்பட்டணம்’ படம், 2002 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தேதி வெளியானது.

படத்தில் விவேக், சார்லி இருவரும் மாடு தொலை போர்த்திக் கொண்டு நடித்த நகைச்சுவை காட்சிக்கு திரையரங்கில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒரு லட்சம் செலவில் மோல்டரால் அந்த மாடு உருவாக்கப்பட்டது.

இயக்குநர் மனோஜ்குமார் 
‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் போது, ரயில் எஞ்சின் போன்ற செட் தமிழகம் எங்கும் சென்று வரவேற்பை பெற்றது போல, பிரத்யேகமாக ஒரு வேனில் மேடை அமைத்து அதில் அலங்காரம் செய்து அந்த மோல்டு மாட்டை நிற்க வைத்து முக்கிய நகரங்களில் சுற்றி வர ஏற்பாடு செய்தார், தயாரிப்பாளர் எஸ்.எஸ்.துரைராஜு . 

இயக்குநர் ராஃபி 
அதே போல கோயம்புத்தூரில் படப்பிடிப்பு நடந்த போது, படப்பிடிப்பை காண தினம் ஆயிரக் கணக்கானோர் திரண்டதால், படப்பிடிப்புக்கு இடையூறு இல்லாமல், ரசிகர்கள் நடிகர்களை பார்க்கும்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்த தயாரிப்பாளர் எஸ்.எஸ்.துரைராஜு மதியம் ஒரு மணிக்கும், மாலை ஆறு மணிக்கும் நடிகர்களை சந்திக்கலாம் என்று ஒரு போர்டு வைத்து அதன் படி ஒரு மேடையில் நடிகர்கள் தோன்றி ரசிகர்களுடன் பேச ஏற்பாடு செய்தார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது பிஜூ மேனனை திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்தார் சம்யுக்த வர்மா.
தென்காசிப்பட்டணம் பட துவக்க விழாவில் நான் எழுதிய குடிமகன் நூலை தயாரிப்பாளர் எஸ்.எஸ்.துரைராஜ் வெளியிட, இயக்குநர் வி.சேகர் பெற்றுக் கொண்ட போது எடுத்த படம் 


73. இன்னொரு தாய்?

அக்கா வைரக்கண்ணுவுடன் ஜி.பாலன்
லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரித்த மிஸ்டர் மெட்ராஸ், தர்மச்சக்கரம், கொகுலத்தில் சீதை, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், உன்னை நினைத்து, உனக்காக எல்லாம் உனக்காக, உள்ளம் கொள்ளை போகுதே, ஒருவன், தாஸ், பிரியமுடன், வீரம் வெளஞ்ச மண்ணு ஆகிய படங்களில் அலுவலக உதவியாளராக இருந்த குமார், விஜய் நடித்த பகவதி படத்தின் மூலம் ’உதவி தயாரிப்பு நிர்வாகியாக’ பதவி உயர்வு பெற்றார்.

திருப்பதி, பஞ்சாமிர்தம், அனேகன், சண்டிவீரன், உட்பட பல படங்களுக்கு உதவி தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியவர், அழகேசன், ஆடுபுலி, மருதன் போன்ற படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக வேலை செய்திருக்கிறார்.

வீ.குமார் 
அவரது தம்பி பாலகிருஷ்ணன் அருணா ஆடியோ நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வந்தார். சின்ன தம்பி சங்கர் முந்தைய கட்டுரையில் சொன்னது போல எஸ்.கே.கிருஷ்ணகாந்த் தயாரித்தப் பல படங்களில் வேலைப் பார்த்து வந்தார்.

எனது அக்காவுக்கு குமார், பாலகிருஷ்ணன், சங்கர் என்று மூன்று மகன்கள். மூன்று மகன்களும் திரையுலகில் வேலைப் பார்த்தனர். அவர்களுக்கு உதவியாக இருக்கிறேன் என்று எனது அக்காவும் சென்னை வருவதாக தெரிவித்தார்

நான் வசித்த வீடு இருந்த தெரு அருகில் ஒரு வீடு பார்த்து அக்காவையும், அத்தானையும் அழைத்து வந்தேன். இரண்டு வருடங்கள் நன்றாக இருந்தார். அதன் பிறகு உடல்நிலை சரியில்லாமல் கஷ்டப்பட்டார். சொந்தமாக டீக்கடை நடத்திய போது பணம் இல்லாமல் வருபவர்களுக்கும் கூட நல்ல உணவு அளித்து வயிறு நிறைய சாப்பிட வைத்து அனுப்பியவர், தனது வயிற்றை கவனிக்க மறந்தார்.

நெருப்பிலும், அதன் அனலிலும் கிடந்து உழைத்தவர், வயிற்றை காயப் போட்டாதால், அல்சர் வந்து அமர்ந்து கொண்டது. காலமெல்லாம் கஷ்டப்பட்டவர், நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் போது நோயின் தாக்குதலுக்கு ஆளானார். 

வீ. பாலகிருஷ்ணன் 
மருத்துமனைக்கு அழைத்து சென்றேன். வயிற்றில் இருக்கும் வியாதிக்கு மருத்துவம் பார்க்காமல் வாயுக்கும், தொண்டைக்கும் மட்டுமே மருத்துவம் பார்த்தார்கள். பல மருத்துவர்களிடம் அழைத்து சென்றேன். வைத்தியம் நடந்ததே தவிர குணமடையவில்லை.

நாள் ஆக ஆக நோயின் தீவிரம் எனக்கு பயத்தை அதிகப்படுத்தியது. தினமும் வேதனையும் அழுகையும் அதிகமானது. ஏற்கனவே ஒரு சகோதரியை இழந்தவன். மீண்டும் ஒருவரை இழக்க போகிறோமோ என்கிற பயம் மனதை கொன்றது.

என்னுடைய சகோதரி எனக்கு அக்கா மட்டும் அல்ல. அவர் எனக்கு இன்னொரு தாய். நான் பிறந்த போது என்னுடைய அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாம். அதனால், பிறந்த அறையில் இருந்து என்னை தூக்கியவர், நான் வளர்ந்து பெரியவன் ஆனது வரை என்னை தனது மகனைப் போலவே பாவித்து வளர்த்தவர். 

வீ. சங்கர் 
அவருக்கு மூன்று மகன்கள் இருந்தாலும் என்னை மூத்த மகனாக இன்றும் கருதுபவர். அதே போல நானும் என் உயிராகத்தான் அவரை நினைப்பேன். எனது அத்தான் ஒரு சிறு விஷயத்திற்காக அவரது கவனக் குறையால், அக்கா மீது கோபப்பட்டு அக்காவை முரட்டுதனமாக அடித்தார். சிறு வயதில் அதை நேரில் பார்த்து அதிர்ந்து போனேன்.

இன்றும் அந்த அடியும், அதன் வலியும் என் இதயத்தின் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டு ஞாபகப்படுத்துகிறது. அன்றிலிருந்து இன்று வரை எனது அத்தானை எனக்கு பிடிக்காது. அவரைப் பார்த்தாலே அவர் எனது அக்காவை அடித்த அந்த காட்சி ஞாபகத்திற்கு வந்துவிடுகிறது. தவிர்க்கவே முடியவில்லை. 

என் அக்காவின் அறிவுக்கும், திறமைக்கும், உழைப்புக்கும் தகுந்த சரியான துணையை என் தந்தை அமைத்துக் கொடுக்கவில்லையே என்கிற ஆதங்கம் கோபம் இன்றும் என்னிடத்தில் இருக்கிறது. இந்த கட்டுரையை பதிவு செய்யும் போது கூட வெம்பி வெடிக்கிறேன்.

க.வீரப்பசாமி 
எனக்கு அத்தான் மீது மரியாதை வர காரணமாக இருந்தது, அவர் கொண்டு வந்து கொடுத்த ஒரு மருத்துவரின் முகவரி. அந்த முகவரி மட்டும் கிடைக்காமல் இருந்திருந்தால் என அக்காவை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே இழந்திருப்பேன்.

அவர் கொடுத்த முகவரியில் இருந்த மருத்துவரை சந்தித்த போதுதான் என்னுடைய அக்காவின் உண்மையான நோய் பற்றிய விபரம் தெரிந்து. குடலில் அல்சர் முற்றி கேன்சருக்கு செல்லப் போகும் அபாய கட்டத்தை நெருங்கும் போது அந்த மருத்துவரை சந்தித்தோம்.

மருத்துவர் என்னை அழைத்து விபரத்தை சொன்ன போது அதிர்ந்துவிட்டேன். எனக்கு தலை சுற்றியது. மயக்க நிலைக்கு ஆளானேன்.  மருத்துவமனையை விட்டு வெளியே வரும் போது கூட பாதி மயக்க நிலையிலேயே இருந்தேன். புத்தி சுவாதீனம் இல்லாதவனாக அன்று முழுவதும் இருந்தேன். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள எனக்கு வடிகாலாக இருந்தவள் என மனைவி தமிழ்ச் செல்வி.

இது பற்றி என் மனைவியிடம் தெரிவித்த போது அவளும் அழுதுவிட்டாள். அவளை தேற்ற கஷ்டப்பட்டேன். பிறகு அக்காவை வேலை செய்ய விடக் கூடாது. வீட்டு வேலைகள் அனைத்தையும் நீதான் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

மருத்துவர் கொடுத்த மாத்திரைகள் வேலை செய்ய ஆரம்பித்தது. அதன் தீவிரம் தாங்க முடியாமல் படாத பாடுபட்டார் என அக்காள். அந்த நாட்களை நினைத்தாலே கண்கள் குளமாகிறது.

நோய் பற்றிய எந்த விவரத்தையும் அக்காள் மகன்களிடம் உடனே தெரிவிக்கவில்லை. கூட பிறந்த நானே ஒரு நாள் முழுக்க நொறுங்கி போனேன். அவர்களுக்கு தெரிந்தால் உடைந்து போவார்கள் என்று மறைத்தேன். இரண்டு நாட்களுக்கு பிறகு மூத்தமகன் குமாரிடம் தெரிவித்தேன். அவரும் ஆடிப் போனார்.

அக்காவுக்கு என் மனைவியும், என் தம்பி மனைவியும் உதவியாக இருந்து வீட்டு வேலைகளை பகிர்ந்து கொண்டனர். இருந்தாலும் எத்தனை நாளைக்கு இப்படி செல்வது?.


அதனால், மூத்தவர் குமாருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தேன்.

74. காதலுக்கு காது போனது?


ஜி.பாலன் 
சிறு வயதில் அண்ணனின் காதலுக்காக கடிதம் கொடுக்க சென்றேன். அந்த கடிதம் பெண்ணின் தந்தைக்கு எப்படியோ கிடைத்துவிட்டது. அதை பற்றி விசாரித்தவர், என்னை அழைத்து பேசினார். நான் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ’பளார்’ என்று அறைந்து விட்டார்.

அவருடைய கோபமும், வேகமும் கலந்த அழுத்தமான அந்த உணர்வு என் கன்னத்தில் விழுந்த போது காது சவ்வு கிழிந்து போனது.

ஒரு கன்னத்தில் அறைந்தால், இன்னொரு கன்னத்தைக் காட்டுகிற எண்ணமெல்லாம் எனக்கு இருந்ததில்லை. ஒரு கன்னத்தில் ஒருத்தன் அறைந்தால் அவனது இரண்டு கன்னத்தையும் பேத்திருவேன்.

தவறு நம் மீது என்பதாலும், அவர் மீது வைத்திருந்த மரியாதை காரணமாகவும் அப்படியே அவர் எதிரில் நின்றேன். காதல் கடித்ததை ஊருக்கே உறக்க சொல்லிக் கொண்டிருந்தார் அந்த பெரிய மனிதர்.

அதன் பிறகு அங்கிருந்து சென்றுவிட்டேன் 

அந்த பெண்ணின் பெற்றோர் வேலை வேலை என்று எந்நேரமும் சம்பாதிப்பதிலே குறியாக இருந்தார்கள், அந்த பெண்ணுக்கு ஒரு நோய் வந்த போது கூட, வயசு பையன் கூட வயசு பெண்ணை அனுப்புகிறோமே என்று நினக்கவில்லை. எனது அண்ணனை மருத்துவமனைக்கு அழைத்து செல்லச் சொன்னார்கள். வாரம் தோறும் மருத்துவமனை அழைத்து செல்ல வேண்டிய சூழல் அமைந்தது. வாலிப வயது அவள் மீது காதல் கொள்ள வைத்தது.

நோய் தீர்ந்த பிறகு அவளை அவரால் சந்திக்க முடியவில்லை. அவளைப் பார்க்க வேண்டும் பேச வேண்டும் என்கிற தவிப்பு அவருக்குள் அதிகமானது. அவளை திருமணம் செய்து கொள்ள ஆசை பிறந்தது. அதே சமயம் அவள் மீது அன்பும் மரியாதையும் அதிகம் இருந்தது. அதனால், அவளுடைய விருப்பத்தை தெரிந்து கொள்ள அந்த கடிதம் எழுதப்பட்டது.

அந்த கடித்தத்தை புத்தகத்தில் வைத்து கொடுத்து அனுப்பும் போது என்னிடம் சொல்லி அனுப்பி இருக்கலாம். என்னிடம் அவர் சொல்லவில்லை. நான் புத்தகத்தை ஆட்டிக் கொண்டு சென்றதில் கடிதம் தவறி கீழே விழுந்திருக்கிறது.

அது எப்படியோ யார் மூலமாகவோ அவளின் தந்தை கைக்கு சென்றதும் ஆத்திரத்தில் என்னை அழைத்து அறைந்து விட்டார். காதும் காதும் வைத்த மாதிரி முடிக்க வேண்டிய ஒரு விஷயத்தை காது சவ்வு கிழியும் அளவிற்கு அடித்துவிட்டார். அது மட்டுமல்லாது ஊரைக் கூட்டி என் பொண்ணுக்கு கடிதம் கொடுத்துவிட்டார்கள் என்று சத்தம் போட்டார்.

அவரது தம்பி, அண்ணனுக்காக எனது அண்ணனிடம் மல்லுக்கு வந்தார். எனது அண்ணனை அடிக்க திட்டம் போட்டார்கள்.

வெளியூர் சென்றிருந்த எந்து அண்ணன், என்னை அறைந்ததை கேள்விப்பட்டு கொதித்து போனார். உடனே திருத்துறைப்பூண்டிக்கு சென்று ஒரு கத்தியை வாங்கிக் இடுப்பில் சொருவிக் கொண்டு வந்தார். வாய்ப்பு கிடைக்கும் போது தன்னை காப்பாற்றிக் கொள்ளவும், தம்பியை அறைந்தவனை காலி பண்ணவும் முடிவு செய்திருந்தார்.

அவர்களுக்கு நான்கு பேர் முன் வந்தது போல, எங்களுக்கு நான்கு பேர் முன் வந்தார்கள். ‘’சண்முகத்து மேலே கை வைத்துப் பாருங்கள். அப்புறம் நடக்குறதே வேற’’ என்று வெளிப்படையாக பேசினார் க.உலகநாதன்.

பிரச்சனை பெரிதானது. பெண்ணின் வாழ்க்கை பிரச்சனை ஆகிவிடும் என்று பயந்தவர்கள், பிறகு சண்டை வேண்டாம் சமாதானம் ஆகிவிடாலாம் என்று சுமுகமாக பேசி முடிக்க இறங்கி வந்தார்கள்.

மூன்றாவது ஆட்கள் வேண்டாம் என்று எங்களுக்குள் பேசி முடித்துக் கொள்கிறோம் என்று எனது பங்காளிகள் பிரச்சனையை முடித்து வைத்தார்கள்.

அவசர அவசரமாக அந்தப் பெண்ணை சிறு வயதிலேயே வெளியூரில் திருமணம் செய்து வைத்தார்கள்.

ஆனால், அந்த வாலிப வயதில் எழுந்த அண்ணனின் காதலுக்கு எனது காது பஞ்சர் ஆனதுதான் மிச்சம்.

அப்போது அதன் பாதிப்பு தெரியவில்லை. காலம் கடந்து காது வலி காரணமாக வைத்தியம் பார்த்த போது, காது டிரம் ஓட்டையாக இருக்கிறது என்று ‘காது மூக்கு தொண்டை’ மருத்துவத்தில் கோல்டு மெடல் பரிசு பெற்ற டாக்டர் கருப்பையா பரிசோத்தித்து பதில் சொன்னார். அதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
தயாரிப்பாளர் சங்க அறக்கட்டளைக்கு உதவி கேட்டு விண்ணப்பித்தேன். உனக்கு செய்யாமல் யாருக்கு உதவுவது. சங்கத்திற்காக நிறைய உழைத்திருக்கிறாய் என்று சொல்லி கேயார் உடனடியாக  கையெழுத்துப் போட்டார். அதே போல கே.ஆர்.ஜியும் உதவினார்.

அறுவை சிகிச்சைக்கு செல்லும் முன்பு எனக்கு இருந்த பெரிய கவலை, எனது அண்ணன் மகளுக்கு திருமணம் செய்து வைக்காமல் எனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்கிற அச்சம். அதனால், எனது மனைவியை அழைத்து எனக்கு எதாவது ஆகிவிட்டால், அண்ணன் மகளை நீதான் கூட இருந்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

என் அண்ணன் எங்களுக்காக உழைத்தவர். அவரை விட்டுவிடக் கூடாது என்கிற விசுவாசம் அக்கரை அதிகம் இருந்தது.

காது அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி இருந்த போது என் நலத்தை விசாரிப்பதற்காக எனது அண்ணன் ஊரில் இருந்து வந்திருந்தார். பேசிக் கொண்டிருக்கும் போது, அக்காவின் உடல் நிலைப் பற்றியும், மகளை குமாருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டிய சூழல் பற்றியும் அண்ணனிடம் தெரிவித்தேன்.

மகள் செல்விக்கு சிறு வயது என்பதால் அண்ணன் யோசித்தார்.

அக்காவுக்கு ஏதாவது ஆகிவிட்டால், அந்த குடும்பத்தை எடுத்துச் செல்ல ஒரு பெண் வேண்டும். வெளியில் இருந்து பெண் எடுத்தால், அவள் தனிக் குடித்தனம் என்று ஒதுங்க ஆரம்பித்தால், பசங்க, அத்தான் நிலமை என்ன ஆகும் என்கிற கவலையாக இருக்கிறது என்பதை எடுத்துச் சொன்னேன்.  அதனால், நம்மவீட்டு பெண் என்றால் உரிமையோடு பார்த்துக் கொள்வாள் என்று சொன்ன போது ‘உன் இஷ்டம்’ எனறார்.

அக்கா வந்ததும் இது விஷயமாக பேசுவோம் என்று முடிவு செய்தேன்.

அப்போது எனது அண்ணனின் காதலுக்காக என் காது சவ்வு கிழிந்தது. இப்போது அண்ணன் மகளை திருமணம் செய்து வைக்க முடிவான போது என் காது சரியாகி இருந்தது. 

இடையில் இத்தனை வருட வாழ்க்கையில், சொல்லும் தகவல் சரியாக காதில் விழாத போது, திரும்ப சொல்லுங்க என்று கேட்டால்,  ’’செவிட்டு பயலுக்கு மறுபடியும் சத்தமா சொல்லுங்க என்பார் அண்ணன்.

அவருடைய காதலுக்கு என் காது செவிடாகி போனது அவருக்கு தெரியாதே?

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...