ஆர்.வி.எஸ்.மாமா |
வேலைக்காக எங்களுடைய வடசங்கந்தி கிராமத்திற்கு குடும்பத்தினருடன்
வந்துவிட்டார் வடிவேலு.
என்னுடைய அப்பாவின் தம்பி அரிகிருஷ்ணன். அவருக்கு எனது அம்மாவின்
சின்னம்மாள் மகளான மருதம்பாளை திருமணம் செய்து கொடுத்திருந்தனர். அக்காவும், தங்கையும் அண்ணன், தம்பிக்கு வாக்கப்பட்ட மாதிரி.
என்னுடைய சித்தப்பாவிற்கு கௌசல்யா,
சுசீலா என்று இரு மகள்களும், முருகேசன்,
வைரமூர்த்தி என்று இரு மகன்களும் பிறந்தனர்.
இதில் கௌசல்யாவை தனது மைத்துனரான சுப்பிரமணியனுக்கு திருமணம் செய்து
கொடுத்திருந்தார் எனது சித்தப்பா அரிகிருஷ்ணன்.
அதாவது அக்காள் மருதாம்பாள் மகளையே சுப்பிரமணியன் திருமணம் செய்து
கொண்டார்.
எங்களில் முதலில் டிகிரி படித்தவர் சுப்பிரமணியன். அவரது படிப்பும், அதன் மூலம் கிடைத்த நட்பும் அவரை உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றது.
அவருக்கு நீதித் துறையில் நீதி மன்றத்தின் நிர்வாக வேலை கிடைத்தது.
திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி,
நாகப்பட்டினம் போன்ற நீதி மன்றங்களில்
வேலைப் பார்த்திருக்கிறார் அவர்.
குமார் - செல்வி |
அவருக்குள் இரு பெரும் கனவு உண்டு. ஒன்று,
தனக்கு கிராமத்தில் சொந்தமாக ஒரு மாடி வீடு கட்ட வேண்டும். இன்னொன்று தினமும்
வழிப்படுகிற விநாயகருக்கு கட்டிடம் கட்டி அதில் சிலையை வைத்து வழிபட வேண்டும்.
காலம் அவர் விரும்பியதை செய்ய வைத்தது. அதிக பொருட் செலவில் கிராமத்தில்
மாடி வீடு ஒன்றை கட்டி முடித்தார்.
அதே போல ஊர் மக்கள் ஒத்துழைப்போடு கீற்று கொட்டகையில் இருந்த விநாயகரை
கட்டிடம் எழுப்பி அதில் வைத்து வணங்கி அழகு பார்த்தார்.
மாடி வீடு கட்டி குடி போகிற அன்று, எனது
அக்காள் மகன் குமார் – அண்ணன் மகள் செல்வி திருமணத்தை நடத்த வேண்டும் என்று அவர்
விரும்பினார்.
சித்தப்பா, சின்னம்மா, அக்கா, மாமா, தம்பி, அக்கா மகள் |
மாமாவின் ஆசை எனக்கு பிடித்திருந்தது. முதல் முதலாக கட்டிய வீட்டில் ஒரு
நல்ல காரியாம் முதல் நாள் அன்றே நடக்க வேண்டும் என்று விரும்புகிறார். அது பெரிய
மகிழ்ச்சி. இன்னொன்று என் தந்தை அந்த இடத்தில்தான் உயிர்விட்டார். அவர் சுவாசம்
வெளியேறிய அந்த இடத்தில் திருமணம் செய்து வைப்பது எனக்கு கிடைத்த பெரும் வாய்ப்பாக
கருதினேன்.
அண்ணனிடமும், அக்காவிடமும் இதுப் பற்றி ஆலோசனை செய்தேன்.
அ.தி.மு.க. கட்சியில் ஒன்றிய அளவில் பிரபலமாகி இருந்தார் அண்ணன் சண்முகம். அதனால், ஒன்றிய அளவில் அ.தி.மு.க. பிரமுகர்கள் கலந்து கொள்ளும் விழாவாக நடத்த
வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்தார்.
மாமா தி.மு.க., அண்ணன் அ.தி.மு.க. இரு பிரிவுகள் ஆரம்பத்திலே
இருந்தது. அதனால், முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல அந்த
இடத்தில் திருமணம் நடத்துகின்ற முடிவு மாறிப் போனது.
எனக்கு, என் தங்கைக்கு, என் தம்பிக்கு
எடையூர் வெங்கடாஜலபதி கோவில் திருமண அரங்கில் திருமணம் செய்தது போல, இந்த திருமணத்தையும் அங்கு நடத்த முடிவு செய்தேன்.
அண்ணனின் விருப்பபடி அவர் அழைப்பது போல ஒரு அழைப்பிதழும், அக்காள் குடும்பத்தினர் அழைப்பது போல ஒரு அழைப்பிதழும் என இரு
அழைப்பிதழ்கள் அச்சடித்து வழங்கப்பட்டது.
அக்காள் குடும்பம் சென்னையில் வசித்ததால் சென்னையில்தான் வீடு இருந்தது. முதல்
அழைப்பு, மூன்றாம் நாள் அழைப்பு போன்ற சம்பிரதாயங்களை நடத்த
சென்னைக்கும், கிராமத்திற்கும் அலைய முடியாது என்பதால், அழைப்பு சம்பந்தமான வேலைகளை சென்னையில் என் வீட்டில் வைத்துக் கொள்வது
என்றும், திருமணம் முடிந்ததும் அன்று இரவே ரயிலில் சென்னை
திரும்புவது என்றும் முடிவு செய்து அனைவருக்கும் டிக்கெட் முன்பதிவு செய்து
வைத்திருந்தேன்.
6.6.2002 அன்று மாலை நான்கு மணிக்கு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஆர்.கே.பி.விஸ்வநாதன்
தலைமையில் திருமணம் நடைபெற்றது. வெகு விமர்சையாக நடந்த அந்த திருமண விழாவுக்கு
உறவினார்கள், நண்பர்கள்,
கிராமத்தினர் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அனைவரையும் சாப்பிட வைத்து சென்னைக்கு வருபவர்களை அவரசரப்படுத்தி அழைத்து
வந்து சேர்ப்பதற்குள் எனக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.
எனது தம்பி, தம்பி மனைவி, என்
மனைவி என எல்லோரும் இந்த விழாவுக்கு பெரும் ஒத்துழைப்பு கொடுத்தனர். நான் சொன்ன
வேலைகளை செய்து கொடுத்தனர். இரு குடும்பத்தினருக்கும் பொது ஆளாக நின்று எந்த
குறையும் இல்லாமல் வேலை செய்தேன்.
ஆனால், மாமா ஆர்.வி.எஸ். நினைத்தது போல அவரது வீட்டு
வாசலில் திருமணம் நடத்த முடியவில்லை. என் மீது பாசமும்,
மரியாதையும் கொண்டவர் அவர்.
வீடு மாறி இருந்தால் என் தந்தை பிழைத்துக் கொள்வார் என்று எங்கள் வீட்டை
விட்டு வந்து, எனது ஆத்தா வீடு சாய்ப்பில் குடி இருந்தார்
அம்மா. ஒரு வருடத்திற்கு பிறகு எனது தந்தையின் உயிர் அங்குதான் போனது.
அதே போல அத்தனை பெரிய வீட்டைக் கட்டிய, என் மாமாவை
என் வீட்டில் உயிரை விட வைத்தது காலம். இதை என்னவென்று சொல்வது?
கிராமத்தில் இருந்த போது தினமும் விநாயகரை வழிபட்டு வேலைக்கு செல்வார் என்
மாமா.
இப்போது சிரித்துக் கொண்டிருக்கும் ஆர்.வி.எஸ்.. மாமாவின் நிழற்படத்தை
தினம் பார்த்து, ‘’வேலைக்கு செல்கிறேன் மாமா’’ என்று கூறிவிட்டு செல்கிறேன்.
வாழ்க்கை பயணம் எத்தனையோ அனுபவங்களை நமக்கு கற்றுக் கொடுக்கிறது.
No comments:
Post a Comment