ஆஹா எத்தனை அழகு - மிதுன், சார்மி |
சத்யராஜ் நடித்த ‘மாறன்’ படத்தை தொடர்ந்து,
ஜே.எஸ்.பங்கஜ் மேத்தா தயாரித்த இரண்டாவது படம், ‘ஆஹா எத்தனை அழகு’. சரண் இயக்கிய
பல படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்த கண்மணி, இந்தப் படத்தின் கதை, திரைக்கதை,
வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமானார்.
சேது படத்தை தயாரித்த கந்தாசாமி
தயாரிப்பில் சுகி மூர்த்தி இயக்கிய, ‘கும்மாளம்’ படத்தில் அறிமுகமான மிதுன், ‘ஆஹா
எத்தனை அழகு’ படத்தில் கதாநாயகனாக நடித்தார். அவருக்கு ஜோடியாக ‘காதல் அழிவதில்லை’
படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த சார்மி நடித்தார். இன்னொரு நாயகியாக சோனியா
அகர்வால், வில்லனாக ரகுவரன் ஒப்பந்தம் ஆனார்கள்.
இயக்குநர் கண்மணி |
ரஞ்சிதா, ராஜன் பி.தேவ், தேவன், கருணாஸ்,
தாமு, வையாபுரி, மதன்பாப், பாண்டு, எம்.எஸ்.பாஸ்கர், கிரேன் மனோகர், பல்லவி,
பாத்திமா பாபு, ஒரு பாடலுக்கு அபிநயாஸ்ரீ ஆகியோர் ஒப்பந்தமாகி, படப்பிடிப்புக்கு
செல்ல இருந்த நிலையில் சோனியா அகர்வால் கால்ஷீட் குழப்பம் செய்திருந்தார்.
செல்வராகவன் இயக்கிய ‘காதல் கொண்டேன்’
படத்தில் கதாநாயகியாக சோனியா அகர்வால் நடித்து வந்தார். அவர் இந்தப் படத்திற்கு
பொருத்தமாக இருப்பார் என்று அவரை நேரில் சென்று சந்தித்து ஒப்பந்தம் செய்தோம்.
சோனியா அகர்வால் |
ஆனால், சோனியா அகர்வாலை தமிழுக்கு கொண்டு
வந்த மும்பையை சேர்ந்த கோ-ஆர்டினேட்டர் சுஷ்மா, அதே தேதிகளில் துஷ்யந்த் நடிக்க
இருந்த ‘சக்சஸ் சக்சஸ்’ படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருந்தார்.
சோனியா அகர்வால் எங்களுக்கு கால்ஷீட்
கொடுத்து ஒப்பந்தம் செய்து கொண்டார்.
நீங்கள் எப்படி வேறு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் செய்தீர்கள் என்று அவரிடம்
கேட்டதற்கு, எனக்கும் சோனியா அகர்வாலுக்கும் ஒப்பந்தம் இருக்கிறது. அவர் எந்தப்
படத்தில் நடிப்பது என்பதை நான்தான் முடிவு செய்வேன் என்று அவர் தெரிவித்ததுடன்,
அந்த ஒப்பந்தத்தின் நகலை எங்களுக்கு அனுப்பி வைத்தார்.
இது குறித்து சோனியா அகர்வாலிடம்
கேட்டதற்கு, விழிக்க ஆரம்பித்தார். வேறு வழியில்லாமல் அவரை நீக்கிவிட்டு, மும்பை
சென்று இரண்டு நாள் தங்கி பல மாடல் அழகிகளை வர வைத்து பார்த்தும் ஒருவரும் அந்தப்
பாத்திரத்திற்கு தகுந்த மாதிரி கிடைக்கவில்லை. அதன் பிறகு நடந்த தேடுதல்
வேட்டையில் பெங்களூருவை சேர்ந்த பாவனா கிடைத்தார். அவரை ஒப்பந்தம் செய்தோம்.
பாவனா |
படப்பிடிப்புக்கு முதல் நாள்
ரகுவரனுக்கும், ரோகிணிக்கும் இடையே மண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு
பிரிந்தனர். இதனால், மகளிர் காவல் நிலையம் செல்ல வேண்டிய நிலைக்கு ஆளானார்,
ரகுவரன்.
இதை அறிந்ததும், ரகுவரனின் மேனேஜர் கிரி
அவர்களை தொடர்பு கொண்டு விசாரித்த போது, ‘‘சார் இருக்கும் நிலையில் நாளைக்கு
படப்பிடிப்புக்கு வருவது நடக்காத ஒன்று. அதனால், வேறு நடிகரை யோசியுங்கள்’’
என்றார்.
உடனே வேறு நடிகர் என்றால் கிடைப்பார்களா? இயக்குநர்
கண்மணி அதிர்ச்சிக்கு ஆளானார். படப்பிடிப்பு நினைத்த மாதிரி துவங்குமா என்று
குழப்பத்திற்கு ஆளானார்.
ரோகினி, ரகுவரன், ரிஷிவரன் |
நாசருக்கும் கிரி தான் மேனேஜராக
இருக்கிறார். அவரை கேட்கலாமே என்று நான் கூறினேன்.
நிர்வாக தயாரிப்பாளர் விவேகானந்தன் மூலமாக உடனே
கிரியிடம் பேசி நாசர் ஒப்பந்தம் ஆனார். படப்பிடிப்புக்கு வந்த பிறகே கதை கேட்டார் என்பது,
தனி கதை.
மறுநாள் படப்பிடிப்பு துவங்கியது.
இந்தப் படத்திற்கு ஏ.வெங்கடேஷ் ஒளிப்பதிவு
செய்ய, கலை இயக்குனராக கே.கதிர் பணியாற்றினார். சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பை
கவனிக்க, மணிவண்ணன் புகைப்பட கலைஞராக பணிபுரிந்தார்.
படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போதே,
ராஜன் பி.தேவ் கால்ஷீட் பிரச்சனையால், ஒதுங்க அந்தப் பாத்திரத்திற்கு பிரமிட் நடராஜன்
ஒப்பந்தமானார்.
ராஜன்.பி.தேவ் |
சென்னையில் ஐயப்பன்தாங்கல் உட்பட சில
இடங்களில் முதல் கட்ட படப்பிடிப்பும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஊட்டியிலும்
நடைபெற்றது. ஊட்டியில் கிளிங்கர்த் ஹவுஸ் என்ற இடத்தில் பெண்கள் ஹாஸ்டல் ஒன்றை
உருவாக்கி அதில் ஐம்பது பெங்களூர் மாடல் அழகிகளுடன் கதாநாயகி சார்மியும் இருக்க, வார்டனாக
பல்லவி நடித்த காட்சிகள் படமானது. அங்கு படப்பிடிப்பு நடைபெற்ற போது, நானும்
சென்றிருந்தேன்.
அப்போது கதாநாயகி சார்மி, இயக்குநர்
கண்மணியிடம் நெருக்கமாக பழகினார். இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக படக்குழுவில்
சிலர் தெரிவித்தனர்.
நான் சார்மியிடம், உங்களைப் பற்றி கிசுகிசு
செய்திகள் நிறைய வருகிறதே என்று கேட்டேன்.
வாழ்க்கையில் கிசுகிசு இல்லை என்றால்
சுவராஸ்யமே இருக்காது. அதுவும் புகழ் மரியாதையோடு இருப்பவர்களின் கிசுகிசு என்றால்
திகில் கதை போல ஆர்வமாக இருக்கும். என்னைப் பற்றி கிசுகிசு வருகிறது என்றால், நான்
வளர்ந்து கொண்டு இருக்கிறேன் என்றுதான் அர்த்தம் என்று நகைச்சுவையோடு கூறினார்.
பிரமிட் நடராசன் |
இந்த தகவலை பிரஸ் மீட்டில் கேட்கும் போது
சொல்வீர்களா என்று கேட்டதும் ஆடிப் போனார். அதே போலதான் சென்னையில் நடந்த பத்திரிகையாளர்
சந்திப்பிலும் கேட்டனர்.
இந்தப் படத்திற்கு வித்யாசாகர் இசையில் உருவான
ஐந்து பாடல்களை பா.விஜய், யுகபாரதி, நா.முத்துகுமார், கபிலன் ஆகியோர் எழுதி இருந்தனர்.
‘ஆஹா எத்தனை அழகு’ என்கிற பாடலை ஸ்ரீநிவாஸ், அனுராதா ஸ்ரீராம், ‘நிலவிலே’ என தொடங்கும்
பாடலை உதித் நாராயணன், மதுஸ்ரீ, ‘ஆட்டுக்குட்டி எல்லாம்’ பாடலை திப்பு, ‘காடு பத்திக்கிச்சி’
பாடலை கங்கை அமரன், பாப் ஷாலினி, ‘கண்ணு ரெண்டும்’ பாடலை கோபால் ஷர்மா, அனுராதா ஸ்ரீராம்
ஆகியோர் பாடி இருந்தனர். பாடல் காட்சிகளுக்கு ரவிதேவ், கூல் ஜெயந்த் இருவரும் நடனம்
அமைத்தனர்.
ஆர்ட் டைரக்டர் கதிர் |
சூப்பர் சுப்பராயன் சண்டைக் காட்சிகளை வடிவமைத்தார்.
தயாரிப்பு நிர்வாகத்தை சதீஷ், சசி இருவரும் கவனிக்க, அலுவலக நிர்வாகத்தை காரைக்குடி
கே. மோகன், வியாபர உதவிளை பி.எல்.எஸ்.பழனியப்பனும் பார்த்துக் கொண்டனர்.
பவர் மீடியா நிறுவனம் சார்பில் ஜே.எஸ்.பங்கஜ்
மேத்தா தயாரித்த இந்தப் படம் 2003 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பதினெட்டாம் தேதி வெளியானது.
No comments:
Post a Comment