ஜி.பாலன் |
பொய் கேசு போட்டு
கணக்கு காண்பிக்க நினைத்த சப் இன்ஸ்பெக்டர், வேறு வழியின்றி, மறுபடியும் இரவு
நேரத்தில் வெளியில் திரியக் கூடாது என்று எச்சரித்து அனுப்பினார்.
சேத்துப்பட்டு பாலம்
வழியாக ஸ்டெர்லிங் ரோடு வந்த போது, எனக்கு பசி வயிற்றை பிசைந்தது. உணவுக்கும், வேலைக்கும் என்ன
செய்வது என்று யோசித்த போது, டீக்கடை அல்லது ஹோட்டலில் வேலை செய்யலாம் என்று
மனதிற்கு தோன்றியது.
வள்ளுவர்கோட்டம்
சாலையில் நடந்து வந்த போது, வெங்கடேஸ்டேவரா என்கிற ஹோட்டல் தெரிய, அங்கு சென்று வேலை
கேட்டேன். அந்த கடையின் முதலாளி, என்னைப் பற்றி விசாரித்து பிறகு வேலைக்குச் சேர்த்துக் கொண்டார்.
காலையில் எழுந்தது
முதல் இரவு வரை வேலை. இரவு பிளைட்பாரத்தில்தான் படுக்க வேண்டும். கடை பொருளை
களவாடி சென்ற சில புதியவர்கள் கொடுத்த அனுபவம் அது. அதனால், நானும் அனுபவித்தேன்.
பேப்பர் விரித்து பிளைட்பாரத்தில் படுத்தால்தான் போலீஸ் பிடிக்கும். பாய் விரித்து
படுத்தால் பிரச்சனை கிடையாது என்பதை அறிந்து, சம்பள முன் பணத்தில்
பாய் ஒன்றை வாங்கினேன்.
ஒரு மாதம் இப்படியே
ஒடியது. சாப்பிடவும், தூங்கவுமா சென்னை வந்தோம். சினிமா வாய்ப்பு தேடுகிற
மாதிரி வேலை கிடைத்தால் நல்லது என்று நினைத்தேன். அதனால், வேறு வேலைப்
பார்க்கலாம் என்று முடிவெடுத்து அங்கிருந்து கிளம்பினேன். சில கம்பெனிகளில் வேலைக்
கேட்டு அலைந்த நான், கடைசியில் கடற்கரைக்கு சென்றேன்.
அங்கு அலைகளையே வெகு
நேரம் பார்த்துக் கொண்டிருந்த நான், பொழுது சாய்வதற்குள் வேலையும், தங்குமிடமும் வேண்டுமே
என்கிற கவலையில் திரும்பினேன்.
திருவல்லிக்கேனி, ஐஸ்ஹவுஸ் வழியாக வந்து
கொண்டிருந்த போது இருட்டத் தொடங்கியது. இனிமேல் கம்பெனி வேலைக்கு வாய்ப்பு தேட
முடியாது என்கிற சிந்தனையோடு, டாக்டர் நடேசன் சாலையில் திரும்பிய நான், அங்கு உள்ள ஒரு டீ கடையில் தண்ணீர் குடிக்க சென்றேன்.
அந்த கடையின்
உரிமையாளர் ராகவன், நான் தண்ணீர் கேட்டு நின்றதையும், தண்ணீர் வாங்கி
குடிப்பதையும் பார்த்தவர், என்ன நினைத்தாரோ? சாப்பிட்டியா? என்று கேட்டார்.
சென்னையில் என்னை முதன்
முதலில் சாப்பிட்டியா? என்று கேட்ட முதல் நபர் அவர். நான் இல்லை என்று
சொன்னதும், முதலில் சாப்பிடச் சொன்னார். பிறகு, காலையில் எழுந்து
சினிமா வாய்ப்பு தேடு. மதியம் இரண்டு மணிக்கு மேல் வந்து, இரவு பதினோரு மணி வரை
கடையில் வேலை செய் என்று எனக்கு வேலை கொடுத்து, தங்குவதற்கு மாடியில்
உள்ள அறையில் இடமும் கொடுத்தார். அந்த மலையாளி ராகவன், மனதில் உயர்ந்து
நின்றார்.
சினிமா உலகினரின்
முகவரிகள் தெரியாததால், காலை எழுந்ததும் வடபழனி, சாலிகிராமம் போன்ற
ஸ்டுடியோ ஏரியாக்களுக்கு சென்று விடுவேன். அப்போதெல்லாம் ஸ்டுடியோவுக்குள் நுழைவது
என்பது எளிதான காரியமல்ல. அப்படி மீறி சென்றாலும், வேலை கொடுக்க, சிபாரிசு செய்ய ஆட்கள்
இல்லை.
பட கம்பெனி முகவரிகள்
கிடைத்து வேலை தேடி அலைந்தேன். பல இயக்குனர்களை சந்தித்து வாய்ப்பு கேட்டு கம்பெனி
வாசலிலும், வீட்டு வாசலிலும் தவம் கிடந்தேன். எங்கும் சினிமா
கதவுகள் திறக்கப்படவில்லை.
ஒரு முறை கடற்கரைக்கு
சென்ற போது, திருவள்ளுவர் சிலைக்கு பின்புறம் கவியரங்கம்
நடைபெற்றது. அங்கு வேடிக்கைப் பார்த்துக் கொண்டு உட்காந்திருந்த நான், மனதில் இருந்த ஒரு
கவிதையை அசைப் போட்டு பாடியும் காட்டினேன். அப்போது இரு நண்பகள் அறிமுகமானார்கள்.
அவர்கள் வீடு, நான் தங்கி இருந்த ஏரியாவில் இருந்தது. அதனால், மாலை வேலைகளில்
அடிக்கடி என்னை சந்திக்க வருவார்கள். அவர்கள் எனக்கு புத்தகங்களை கொடுத்து படிக்க
வைத்தார்கள்.
அந்த புத்தகங்கள் மூலம்
பெரியார், மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், மாவோ, பிடல் கேஸ்ட்ரோ, சேகுவாரே என பலர்
அறிமுகமானார்கள்.
சினிமாவே வாழ்க்கை
என்று இருந்த எனக்குள், போராட்டமே வாழ்க்கை என்கிற அளவுக்கு என் சிந்தனையை
மேம்படுத்தினார்கள்.
இட ஒதுகீட்டுக்கான
போராட்டம், மண்டல் குழு பரிந்துறையை அமுல் படுத்தக் கோரி
போரட்டம் என பல போரட்டங்களில் பங்கெடுத்து கைது, சிறை என்று என்
வாழ்க்கை முறை மாறிப் போனது.
கம்யூனிஸ்ட் இயக்கம்
என்றால் அது கீழ் சாதி கட்சி என்று நினைத்திருந்த எனக்குள், அது பொதுவுடமை இயக்கம்
என்கிற சிந்தனையை உணர்த்தியது. நண்பர்களாக அறிமுகமான அவர்கள் தோழர்கள் ஆனார்கள்.
1986 ஆம் ஆண்டு
சினிமாவை தேடி சென்னை வந்த நான் 1990 வரை சினிமாவுக்கு வேளியே வாய்ப்பு
தேடுபவனாகவும், பெரியார், மார்க்ஸிய இயக்கங்களில் பங்கெடுக்க கூடியவனாகவும்
என்னை மாற்றிக் கொண்டேன். அப்போது கிடைத்த அனுபவங்களை எழுதினால், ஒரு புத்தகம் போடும்
அளவுக்கு செய்திகள் இருக்கிறது. அதனால், என் அரசியல் அனுபவங்களை அதில் சொல்கிறேன்.
மறுபடி சினிமாவுக்குள்
எப்படி நுழைந்தேன் என்பதை நினைத்து பார்க்கும் போது எனது முயற்சிகள் பெரும்
போராட்டங்களை சந்தித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
No comments:
Post a Comment