முதல்மரியாதை 100வது நாளில் பாரதிராஜாடன் |
கோயம்புத்தூரில் உள்ள
ஒரு பேக்கரியில் வேலை செய்து கொண்டிருந்தேன். அர்ச்சனா திரையரங்கில் முதல் மரியாதை
படம் வெளியாகி இருந்தது. முதல் நாள் இரவு காட்சிக்கு நண்பன் கிருஷ்ண குட்டியுடன்
படம் பார்க்க சென்றேன். பாட்டும், நடிப்பும் என படம் மொத்தமும் மனதில் இறங்கியது.
பாரதிராஜா எப்பேர்பட்ட
கலைஞன் என்று வியந்து போனேன். சென்னைக்கு சென்று அவரை தூக்கி தோளில் உட்காரவைத்து
சுற்றி வர வேண்டும் என்று பயங்கரமான ஆசை.
மாமன் சொன்ன ஒரு
வார்த்தைக்காக, அவர் கௌரவத்தை காப்பாற்ற தன் வாழ்க்கையை அர்ப்பணித்த ஒருவர், அவரை கிண்டலும், கேலியும் செய்து அவரையே
மனதில் ஏந்தும் ஒருவள், அவர் மீது வைத்திருக்கும் மரியாதைக்காக, காதலுக்காக, அவர் காப்பாற்றி வரும்
கௌரவத்திற்காக ஒரு கொலை செய்து சிறைக்கு செல்கிறாள்.
ஊரும், உறவும் பழி போட்டாலும்
அவளை தன் குலதெய்வம் என நினைக்கும் அவர், அவளுக்கு முதல் மரியாதை கொடுத்து, அவள் வரும் வரை உயிரை
கையில் பிடித்து காத்திருந்து உயிர் விடும் அற்புதமான கதை.
அதில் சிவாஜியின்
இயல்பான நடிப்பும், ராதாவின் அதிரடியான நடிப்பும், ராதாவுக்கு டப்பிங்
பேசிய ராதிகாவின் குரலும், சிரிப்பும், வடிவுக்கரசியின் மிரட்டும் நடிப்பும் என அத்தனை
கலைஞர்களும் வாழ்ந்து காட்டி இருந்தார்கள். கண்ணனின் ஒளிப்பதிவு என்னை அந்த
கிராமத்துக்கே அழைத்து சென்றது. இளையராஜாவும், வைரமுத்துவும் போட்டிப்
போட்டுக் கொண்டு பாடல்களில் மனைதை அள்ளிச் செல்கிறார்கள். தாலாட்டு பாடுகிறார்கள்.
அத்தனை பேரையும் வேலை
வாங்கிய பாரதிராஜா எனக்குள் மகா கலைஞனாக உயர்ந்து நிற்கிறார். முதல் மரியாதை
படத்தை பத்து தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன். வித்தியாசமான கதை. அதுவரை அந்த
மாதிரி படத்தை நான் பார்த்ததே இல்லை.
பாரதிராஜாவிடம் ஒரு
படமாவது உதவியாளராக சேர்ந்து வேலை கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆசை மனதில் வேர்
விடுகிறது. அவரிடம் வாய்ப்பு கேட்க சென்னை செல்ல வேண்டும் என்கிற எண்ணம்
ஒவ்வொருமுறை படம் பார்க்கும் போதும் தூக்கத்தை கெடுத்தது.
இந்நிலையில் நண்பன்
கிருஷ்ணகுட்டி ஓடி வந்து, ஒரு இனிப்பான தகவலை தெரிவித்தான்.
முதல் மரியாதை நூறாவது
நாள் விழா அர்ச்சனா தியேட்டரில் கொண்டாடப் போகிறார்கள். விழா இரவு நடைபெறுகிறது.
பகலில் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி கலைஅரங்கில் ரசிகர் மன்றம் நடத்தும்
விழாவில் பாரதிராஜா கலந்து கொள்கிறார்.
அவன் சொல்லி
முடித்ததுமே அவனுக்கு முத்தம் கொடுத்து நன்றியை காட்டினேன். கும்பிட போன சாமி
குறுக்கே வந்த மாதிரி, பாரதிராஜாவே வருகிறார் என்கிற போது, வானத்தில் பறப்பது போல
உணர்ந்தேன்.
குறிப்பிட்ட தேதியில்
மாநகராட்சி கலையரங்கில் ஆஜரானேன். பாரதிராஜாவை நேரில் கண்டதும் மகிழ்ச்சிக்கு அளவே
இல்லை. கூட்டம் அதிகமாக இருந்தது. அவரை நெருங்கி என்னை அறிமுகப்படுத்தி என்
ஆர்வத்தை தெரிவித்தேன். வந்த இடத்தில் வாய்ப்பு கேட்பது சரி இல்லை. சென்னை வந்து பார்க்குமாறு அவருடன் இருந்தவர்
பதில் சொன்னார். அவருடன் படம் எடுத்துக் கொள்ள அனுமதி கிடைத்தது.
பாரதிராஜா மனமெங்கும்
நிறைந்திருந்தார். சென்னைக்கு சென்று வாய்ப்பு கேட்பது போலவும், அவர் சேர்த்துக்
கொண்டது போலவும், அவரிடம் தொழில் காற்று தனியாக படம் இயக்குவது போலவும், எனது படம் மாபெரும்
வெற்றி பெற்று அந்த புகழோடு ஊர் திரும்புவது போலவும் நிறைய கனவுகள்.
பள்ளியில் தூங்கியவன்
கல்வி இழந்தவன். கடைதனில் தூங்கியவன் பொருள் இழந்தான் என்பது
போல என் கனவுகள் வேலைக்கு வேட்டு வைத்தது.
சினிமா சிந்தனை
மனதிற்குள் வருவதற்கு முன்பு எள் என்றால் எண்ணையாக இருந்தவன், இப்போது வியாபாரத்தில்
ஆர்வம் குறைந்து மந்தமானது போல ஆனேன். கதை
யோசிப்பதிலும், எழுதுவதிலும் கவனம் போனது. வியாபாரம் செய்து
கொண்டிருக்கும் போது கூட காட்சிகள் பற்றிய சிந்தனைதான். இருபது ரூபாய் வாங்கி
கல்லாவில் போட்டு விட்டு, ஐம்பது ரூபாய்க்கு பாக்கி கொடுத்தேன். இதை கவனித்த
பேக்கரி முதலாளி அபுபக்கர், ‘‘உன் மைண்ட் இங்கே இல்ல. ஏதோ ஞாபகத்தில் வேலைப்
பார்க்குறே.’’ என்று கண்டித்தார்.
அவர் சொன்னது
உண்மைதான்!. நான் சினிமா உலகில் தானே இருக்கிறேன். இங்கு இல்லையே?
சென்னைக்கு போனால்
திண்ணையில் கூட படுக்கவிடமாட்டார்கள். பிளைட் பாரத்தில் படுத்தால் கூட போலீசு
பிடிக்கும் என்று சிலர் சொல்லியதை கேட்டு
பயந்திருக்கிறேன். இருப்பினும் தைரியமாக சென்னைக்கு வந்தேன்.
எனக்கு சென்னையில்
யாரையும் தெரியாது. பாரதிராஜாவை மட்டுமே தெரியும். அவருடைய முகவரி கூட தெரியாது.
திக்கு தெரியாத காட்டில் கொண்டு போய் விட்டது போல இருந்தது. சென்னையை கண்டு
மிரண்டேன். இவ்வளவு பெரிய ஊரில் அவரது அலுவலகம் எங்கே இருக்கும் என்று யோசித்த
போது, அவர் பிரபலமானவர். மெரீனா கடற்கரைக்கு வழி கேட்டால், பதில் சொல்ல
தெரியாதவர்கள் இருப்பார்களா?. விசாரித்து சென்றேன்.
அவரது அலுவலகத்தில்
இருந்தவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். இயக்குனர் ஊரில் இல்லை என்று
பதில் சொன்னார். எப்போது வருவார் என்று கேட்டதற்கு அவருக்கே பதில் தெரியவில்லை.
உதட்டைப் பிதுக்கினார்.
சினிமாவில் எடுத்ததுமே
வாய்ப்பு கிடைக்காது. இங்கு ஒரு நீண்ட பயணம் செல்ல வேண்டும் என்பதை அப்போது நான்
அறிந்தேன். எத்தனையோ அலைச்சல், அவமானங்கள், வேதனைகள் கிடைக்கப் போகிறது என்று கூட அப்போது நினைக்கவில்லை.
ஆனால், அன்று சாப்பிடுவதற்கும், தங்குவதற்கும் இடம்
உருவாக்கி கொள்ள வேண்டும். மறுநாள் வந்து பார்க்க வேண்டும் என்கிற நினைவுகளோடு
நடந்தேன்.
அப்போது கிடைத்த
ஏமாற்றம், தோல்வி, விரக்தியோடு நான் நடந்து செல்வதை பாரதிராஜா
பார்க்கவில்லை. ஆனால், நான் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில்
மக்கள் தொடர்பாளராக வேலை செய்து கொண்டிருந்த போது, பெப்சி - படைப்பாளி என
திரையுலகம் போராட்ட களத்தில் இருந்த போது, தயாரிப்பாளர்
சங்கத்திற்கு வந்த பாரதிராஜா, அங்கு வாசலில் நாற்காலியில் அமர்ந்திருந்த
தயாரிப்பாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது நான் வேகவேகமாக
நடந்து செல்வதையும், பரபரப்பாக வேலை செய்வதையும் கவனித்த பாரதிராஜா, அந்த
தயாரிப்பாளர்களிடம் நான் எப்படி நடந்து சென்று பசங்களிடம் வேலை வாங்குகிறேன் என்று
நடித்துக் காட்டினார்.
கே.விஜயகுமார் போன்ற தயாரிப்பாளர்கள்
அவரது நடிப்பைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். திரும்பிப் பார்த்த
எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் சிரிக்கிறார்கள் என்று விளங்கவில்லை.
என்னைப் பார்த்து
‘’எப்படி எப்படி’’ என்று மீண்டும் என்னைப் போலவே நடந்து காட்டினார், பாரதிராஜா. என்னை
வைத்துதான் காமெடி நடக்கிறது என்று நான் வெட்கத்துடன் சிரித்துக் கொண்டேன்.
நான் தயாரிப்பாளர் சங்க
தலைவர் கே.ஆர்.ஜி.யின் செல்லப் பிள்ளை போல் இருந்தேன். அனைத்து
தயாரிப்பாளர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் என்னை அப்போது நன்றாக தெரியும்.
அந்த தகுதியை
வளர்த்துக் கொள்ள நான் எப்படி உழைத்தேன் என்பதை நினைத்துப் பார்க்கும் போது, பல ஆண்டுகள்
கடந்திருந்தன என்பது ஞாபகத்திற்கு வந்தது.
No comments:
Post a Comment