Sunday, April 22, 2018

16. தாம்பரம் ஏர்போர்ட்


மன்னன் - ரஜினி, விஜயசாந்தி 
பொங்கலுக்கு முதல் நாள் போகி அன்று உட்லண்ட்ஸ் திரையரங்கில் மாலை ஆறு மணிக்கு மன்னன் படம் பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. படம் முடிந்த பிறகு ஊருக்கு செல்வதாக இருந்தால் ’சென்று வா’ என்று குருநாதர் திரு டைமண்ட் பாபு தெரிவித்தார்.

அறைக்கு சென்று உடைகளை எடுத்துக் கொண்டு பாரிமுனைக்கு விரைந்தேன். பஸ் கிடைக்கவில்லை. ஒவ்வொரு ஊராக சென்று மாறி மாறி செல்லலாம் என்றாலும் ஒவ்வொரு பஸ்ஸிலும் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது.

தாம்பரம் ஏர்போர்ட்டுக்கு சென்றால் விடிவதற்குள் ஊருக்கு சென்றுவிடாலாம் என்று என்னோடு பஸ் ஏற நின்று கொண்டிருந்தவர்கள் பேசிக் கொண்டார்கள்.

தம்பரத்தில் ஏர்போர்ட்டா?. மீனம்பாக்கத்தில் தானே இருக்கிறது?  என்று அவர்களிடம் கேட்க நினைத்தேன்.

சென்னைக்கு சரக்கு ஏற்றி வரும் லாரிகள், லோடு இறக்கிய பிறகு தாம்பரம் வழியாக செல்லும். பஸ் கிடைக்காத பயணிகள் குறைந்த செலவில் அதில் பயணம் செய்வார்கள். லாரி நிற்கும் இடம்தான் தாம்பரம் ஏர்போர்ட்.  அதனால், நானும் தாம்பரம் ஏர்போர்ட்டுக்கு சென்றேன்.

சிவாஜி சாரின் மூத்த மகன் ராம்குமார்
அரியலூர், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை என வெவ்வேறு ஊர்களுக்கு செல்லும் லாரிகள் வந்து பயணிகளை அள்ளி சென்றன. திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி என்று எனது ஊர் அருகில் உள்ள நகரத்திற்கு செல்லும் லாரிகள் வரும் என்று காத்திருந்ததில் ஏமாற்றமே மிஞ்சியது. அதனால், இரவு ஒரு மணிக்கு மேல், தஞ்சாவூர் செல்லும் ஒரு லாரியில் ஏறிக் கொண்டேன்.

முப்பது பேர் ஏறியதும் லாரி புறப்பட்டது. லாரியின் வேகத்தில் தள்ளாடியபடி உட்காந்திருதோம். லாரிக்குள் இருந்த தூசி முழுவதும் எழுந்து நாசியை அடைத்தது. வெள்ளை நிற சட்டை அணிந்தவர்கள் பழுப்பு நிற சட்டைக்கு மாறினார்கள். குறைந்த செலவில் செல்வது என்றால் இதையெல்லாம் அனுபவித்துதானே ஆக வேண்டும்.

லாரி கூடுவாஞ்சேரியை கடந்தது.

அங்கு ஒரு குளிர்பான பேக்டரியில் ’மன்னன்’ படத்தின் படப்பிடிப்பு நடந்தது, அங்கு பத்திகையாளர்களை ஒரு வேன் வைத்து அழைத்து சென்று சந்திக்க வைத்தது, படப்பிடிப்புக்கு வந்த சிவாஜி சாரை கண்டதும் ரஜினி சார் ஓடி வந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டது, மரத்தில் இருந்தும் கட்டிடங்கள் மீது இருந்தும் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக படப்பிடிப்பை வேடிக்கைப் பார்த்தது என பல நினைவுகள் ஞாபகத்திற்கு வந்து சென்றன
.
செங்கல்பட்டு தாம்பரம் இடையே அடிக்கடி விபத்து ஏற்படுவது அதிகமாக இருந்தது. தகவல் அறிந்து அரசு ஆம்புலன்ஸ் பறந்து வந்து அவர்களை எடுத்து செல்லும் வரை உயிருக்கு போராடுவார்களாம். சிலர் செல்லும் வழியிலேயே உயிரை விட்டிருக்கின்றனர். இந்த சம்பவங்களை அறிந்த சிவாஜி சாரின் மூத்த மகன் ராம்குமார், ரோட்டரி கிளப் 3020 தலைவராக இருந்ததால், கூடுவாஞ்சேரி அருகில் இருபத்தி நான்கு மணி நேரமும் காத்திருக்கும் ஆம்புலன்ஸ் ஒன்றை இலவசமாக வழங்கினார். அதற்கான விழாவுக்கும், பத்திரிகையாளர்கள் அழைத்து சென்றது என அந்த மாதத்தில் நடந்த பல சம்பவங்கள் மனதில் ஓடின.

’நாளைய செய்தி’ படத்தின் துவக்க விழாவுக்காக நடிகை சில்க் ஸ்மிதா வீட்டிற்கு அழைப்பிதழ் கொடுக்க சென்ற போது, “என் பேரு ஏன் போடலை பாபு’’ என்று அவர் குழந்தை குரலில் பேசியது இன்னும் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ஏவி.எம்.கார்டனில் ’நாளைய செய்தி’ படத்தின் துவக்க விழா பிரமாண்டமாக நடந்தது. பிரபு, குஷ்பு, இயக்குநர் ஜே.பி.விஜய், தயாரிப்பாளர்கள் சிவஸ்ரீ பிக்சர்ஸ் கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நான் இயக்கும் படத்திற்கும் இதே மாதிரி விழா துவக்க விழா நடக்கும் என மனதிற்குள் எண்ணங்கள் எழுந்தது. ஆனால், ஊருக்கு சென்ற எனக்கு உடனே திரையுலகிற்கு வரமுடியாத சிக்கல் உருவானது.

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...