நான் ஊருக்கு திரும்பிய
போது, எனது சகோதரி ஒரத்தூரில் இருந்து வந்திருந்தார்.
இனிமேல் இங்குதான் இருக்கப் போகிறேன் என்று தெரிவித்தார்.
முன்பு அறுவடை
காலத்தில் கணவருடன் கருத்து முரண்பாடு காரணமாக வந்திருந்த போது, நாங்கள் இருவருமாக
வயலில் இறங்கி பாடுபட்டு தினமும் பதினெட்டு மரக்கால், இருபத்திரெண்டு
மரக்கால் என்று கூலி பெறுவோம். ஒரு மாதம் முடிந்ததும், நெல் மூட்டைகளை சமமாக
பிரித்து அவருக்கு பாதியை கொடுத்து ஊருக்கு அனுப்பி வைத்தேன்.
இப்போது ஊரோடு
வந்துவிடுவதாக சொன்னதும், எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவர் பார்த்து
வளர்ந்தவன் நான். என்னுடைய இன்னொரு தாய் அவர். என்னை வளர்க்க பெரும் உதவியாக
இருந்தவர். அதே போல அறுவடை காலங்களில் அவருடைய பிள்ளைகளை வைத்துக் கொள்ள, கவனித்துக் கொள்ள நான்
அவருக்கு உதவியாக இருந்தேன்.
அவர் அறுவடை வயலில்
நெல் கோட்டு அடிக்க, ஒரு மாதம் பள்ளியில் நான் கோட்டடித்திருக்கிறேன்.
இதனால் ஒரு வருடம் பள்ளி தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறேன்.
குடும்பத்தின் கடை
குட்டி பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் போது, மூத்த பெண் வந்து
நிற்கிறார். என்ன செய்வது?.
அவர் உழைக்க அசராதவர்.
ஆனால், இருக்க இடம் வேண்டும்? அண்ணனிடம் சென்று
நீங்கள் இருக்கும் வீட்டை அக்காவிடம் கொடுத்து விடுங்கள். புதிதாக கட்டி இருக்கும்
வீட்டில் நாம் ஒன்றாக இருப்போம் என்று தெரிவித்தேன். அதற்கு அவர் மறுத்துவிட்டார்.
அவர் வசிக்கும் இடம்
அக்காவுக்காக பிடித்து கொடுத்த இடம் என்றாலும், அவர் ஊருக்கு சென்ற
பிறகு தொடர்ந்து வரி கட்டவில்லை. அதைப் பற்றி சொன்னதற்கு போனால் போகட்டும் என்று
அவர் கண்டு கொள்ளவில்லை. சிலர் இந்த இடத்தை ஆக்கிரமித்து கொள்ள நினைத்தார்கள்.
அதனால், இந்த இடத்திற்கு நான் குச்சி வரி கட்டி பாராமரித்து
வந்திருக்கிறேன். இனி நமக்குத்தான் சொந்தம் என்றார் அண்ணன்.
இந்த இடம் எனக்கு.
வடக்கு தெருவில் உள்ள இடம் உனக்கு, மேற்கு தெருவில் மூல கடைக்காரர் வீட்டுக்கு
பக்கத்தில் இருக்கும் இடம் தம்பி நமசிக்கு என்று பிடிவாதம் பிடித்தார்.
அவரிடம் சுமுகமாக பேசி, அக்காவுக்கு அந்த
வீட்டை கொடுத்துவிட்டு, வடக்கு தெருவில் புதிதாக கட்டிய வீட்டிற்கு அண்ணன்
குடுமபத்தை அழைத்து சென்றேன்.
என் ஆத்தா ராஜாமணி
ஆச்சிக்கு ஒரு காலத்தில் நாலு வேலி நிலம் என் ஊரில் இருந்திருக்கிறது. நாலு வேலி
என்றால் இருபத்தி ஏழு ஏக்கர். அப்படி வைத்திருந்த சொத்தை என் பாட்டன் சொக்கப்ப
குடி, கும்மாளம் என்று அழித்திருக்கிறான்.
G.BALAN - TAMILSELVI |
அப்படி நாலு வேலி
நிலத்தை ஐம்பதுக்கும் நூறுக்கும் விற்று, நாலு மா நிலம் மட்டும் வைத்துவிட்டுப் போனான்
சொக்கப்பன் என்கிற சொக்கலிங்கம். எங்களுக்கு நில பத்திரங்களை மட்டும் பத்திரமாக
வைத்துவிட்டு சென்றான். அவனது வாரிசுகளான நாங்கள் தங்கையை கட்டிக் கொடுக்கவும், பிறந்த மகள்களுக்கு
உதவவும் வழியில்லாமல் போராடினோம். இதில் எனக்கு கலைத் தாகம் வேறு பிடித்து
ஆட்டியது.
எப்படியாவது தங்கை
திருமணத்தை முடித்து விட்டு, சென்னைக்கு எஸ்கேப் ஆக வேண்டும் என்று சென்ற எனக்கு, திருமணம் என்கிற
பந்ததை ஏற்படுத்தி விட்டார் அண்ணன்.
திருமணம் முடிந்ததும், கடுமையாக உழைத்து
நிலத்தை திருப்பி தங்கைக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு, ஒரு வருடத்திலோ, அல்லது இரண்டு
வருடத்திலோ சென்னை செல்ல வேண்டும் என்று மனதிற்குள் திட்டம். அதற்கு வருகிற
துணைவியும் துணையாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.
1992 ஆம் ஆண்டு ஜூலை
மாதம் இரண்டாம் தேதி மாலை நான்கு மணிக்கு எனது திருமணம் சிறப்பாக நடைபெற்றது.
திருமண விழாவுக்கு முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் நா.தர்மலிங்கம் தலைமை
தாங்கினார். திராவிடர் கழக மாநில விவசாய அணிச் செயலாளர் தோலி ஆர்.சுப்பிரமணியம், தி.மு.க.ஒன்றியச்
செயலாளர் ந.உ.சிவசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திராவிடர் கழகத்தைச்
சேர்ந்த தங்கவேலு, வீரபாண்டியன், தி.மு.க. பிரமுகர்கள் கோ.கல்யாண சுந்தரம், மங்கல் நடேசன், நா.சந்திரமோகன்
கா.கோவிந்தராசன், வீரையன், தமிழ்ச்செல்வன், கு.லாடமுத்து, சேக்தாவூது, செங்குட்டுவன், அ.தி.மு.க. பிரமுகர்
முத்து.சீதாராமன், காங்கிரஸ் பிரமுகர் ந.உ.குழந்தைவேலு, கம்யூனிஸ்ட் தோழர்
கே.வீரையன், க.உலகநாதன், புலவர் கு.மணி, வேப்பஞ்சேரி முருகேசன், வடசங்கந்தி வை. சரவணன்
என பலர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
எடையூர் வெங்கடாசலபதி
கோவில் அரங்கத்தில் திருமணம் நடந்தாலும், வடசங்கந்தி கிராமத்தில் உள்ள எனது வீட்டிலும்
வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருமணம் ஆன பத்தாவது
நாள், எனது பெரிய மாமனார் ராமையாத்தேவர், என்னை அழைத்து அவருடைய
கடையைப் பார்த்துக் கொள்ள சொன்னார்.
காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் விற்கும்
அந்தக் கடையை நானும், அவரது மகன் நாடிமுத்தும் சேர்ந்து நிர்வாகிக்
வேண்டும். வியாபாரம் லாபகரமாக நடந்தால் அந்தக் கடையை என்னிடம் லீசுக்கு
கொடுத்துவிடுவது என்று அவர் முடிவு செய்திருந்தார்.
அவர் பேச்சை என்னால்
தவிர்க்க முடியவில்லை. இதை மனதில் வைத்துதான் அவரது தம்பி மகளை எனக்கு திருமணம்
செய்து வைத்துள்ளார்?!.
No comments:
Post a Comment