Sunday, April 22, 2018

5 பார வண்டியில் படம் பார்க்க சென்றது


ஜி.பாலன் 
எனது வடசங்கந்தி கிராமத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இடையூர். சிறிய கடைத் தெருவுடன் கூடிய அந்த ஊரில் ‘சரவணா டாக்கீஸ்’ என்கிற திரையரங்கு இருந்தது.

சினிமாவை ஏ,பி,சி, என மூன்று சென்டர்களாக பிரிப்பார்கள். அதில் மூன்றாவது சென்டர் திரையரங்கு அது. எங்களது மாவட்டம் எப்படி கடைமடை பகுதியோ?, அதேபோல பிரிண்ட் தேய்ந்து கடைசியாக, எங்களுக்கு படம் வரும். படம் ஓடும் போது மழை மாதிரி தேய்மானம் தெரிந்தாலும், அவர்கள் புத்தம் புதிய பாலியஸ்டர் பிரிண்ட் என்று போஸ்டரில் போடுவதை மறக்க மாட்டார்கள்.

வாரம் தோறும் ஒரு படம் திரையிடுவார்கள். தினமும் மாலை, இரவு என இரண்டு காட்சிகள் திரையிடுவார்கள். எல்லாம் பழைய படங்கள்தான். பெஞ்சு டிக்கெட் அறுபது காசு. தரை டிக்கெட் நாற்பது காசு.

பெஞ்சு என்று அங்கு இருந்ததில்லை. சவுக்கு கம்பில் கால்கள் வைத்து பலகையை அதன் மீது வைத்து ஆணியால் அடித்து வைத்திருப்பார்கள். அதுதான் பெஞ்சு.

தரை டிக்கெட்டுக்கு மண்ணில் தான் அமரவேண்டும்.  கீற்று கொட்டகை என்பதால், பொங்கல், தீபாவளி காலங்களில் மட்டும் மேட்னி ஷோ போடுவார்கள். வெளிச்சம் ஊடுருவாமல் இருக்க தார் பாய் விஷேசமாக கட்டி தொங்க விட்டிருப்பார்கள். நான்கு ரீல்கள் வீதம் திரையிடுவதால், மூன்று இடைவேளை விடுவார்கள். சில நாட்களில் மின்சாரம் தடைப்பட்டால் அது வரும் வரை காத்திருக்க வேண்டும்.

திரைக்கு எதிரே ஆண்களுக்கும், வலது புறத்தில் பெண்களுக்கும் என தடுப்பு சுவருடன் பிரித்து வைத்திருப்பார்கள்.

இடைவேளையின் போது சோடா, ஆரஞ்சு கலர், கடலை மிட்டாய், பட்டாணி என்று குடிக்கவும், திண்ணவும் பொருட்கள் அமர்ந்திருக்கும் இடம் தேடி வரும். 

டிக்கெட் கவுண்டருக்கு வரிசையில் செல்ல இருபுறமும் எலந்தை முள் வேளி அமைத்திருப்பார்கள்.

திரையரங்கில் படம் மாற்றும் போது, சில சமயம் சிவப்பு கலரிலும், சில சமயம் பச்சைக் கலரிலும் போஸ்டர் ஒட்டி சொல்வார்கள். அதில் என்ன படம், யார் யார் நடிக்கிறார்கள் என்கிற தகவல் இடம் பெற்றிருக்கும்.

காலையில் சைக்கிளில் வந்து போஸ்டர் ஒட்டி சென்றால், மதியம் ஒரு கூண்டு வண்டியின் இரு பக்கமும் கலர் போஸ்டர் ஒட்டிய தட்டியை கட்டி, மேலே ஒலிபெருக்கியை கட்டி, பாட்டுப் போட்டுக் கொண்டு வருவார்கள். ஒரு பாட்டு முடிந்ததும் படத்தைப் பற்றிய அறிவிப்பை கரகர குரலில் ஒருவர் பேசுவார். அந்த சத்தம் வயல் காடுகளில் வேலை செய்து கொண்டிருக்கிற மக்கள் வரை சென்றடையும். அவரது பேச்சே, படம் பார்க்க தூண்டுகிற ஆவலை ஏற்படுத்தும்.

தூரத்தில் இருப்பவர்கள் சத்தத்தை கேட்டு, என்ன படம் போட்டிருக்காங்க? யார் நடிசிருக்கா? சிவாஜி படமா?, எம்.ஜி.ஆர்.படமா?, ஜெமினி படமா? ஜெய்சங்கர் படமா?, முத்துராமன் படமா? என்கிற கேள்வியெல்லாம் கேட்பார்கள்.

நானும் என் வயதொத்த சிறுவர்களும், அந்த கூண்டு வண்டியின் பின்னாலே ஓடிச் சென்று, துண்டு நோட்டிஸை வாங்க, எங்கள் வீரதீரத்தை காட்டுவோம். அவரும் லேசில் தரமாட்டார். கூட்டம் அதிகமானல், நோட்டீஸ் வாங்கும் போது பறித்து கிழித்து விடுவோம் என, நோட்டீஸை அள்ளி வீசுவார். அதை தாவி பிடித்த தருணத்தை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. அது ஒரு கொண்டாட்டமான அனுபவம்தான்.

அப்படி போட்டி போட்டு வாங்கி வந்த நோட்டிசை எங்கள் வீட்டு கதவில் ஒட்டி வைப்பேன்.

ஆசைப்பட்ட படத்தை நாங்கள் நினைத்த மாத்திரத்தில் பார்க்க முடியாது. எங்க வைத்தி மாமா மனைவி வனரோஜா, மனசு வைத்தால்தான் பார்க்க முடியும்?.

மாளிகை கடையிலும், மாட்டு தொழுவத்திலும், வயல் காட்டிலும் கிடந்து எப்போதும் கஷ்டப்படுவார், வனரோஜா மாமி. அலுத்து, சலித்து படுக்க கூட நேரம் இருக்காது. ஓய்வில்லாமல் உழைக்க கூடிய கடும் உழைப்பாளி அவர். எங்க மாமாவும் அப்படித்தான். அந்த குடும்பத்தை உயர்த்த அவர்கள் பாடுபட்டார்கள்.

இப்படி வருஷம் முழுவதும் கஷ்டப்படும் எங்கள் மாமி, எனது அம்மா உட்பட மற்ற பெண்மணிகள் கேட்டுக் கொண்டதற்காக படம் பார்க்க முயற்சி எடுப்பார். ஆறு மாதத்திற்கு ஒரு முறை என்பதால், மாமாவும் சம்மதிப்பார்.

வீட்டு வேலைகள் எல்லாம் முடித்து விட்டு, இரவு இரண்டாவது காட்சி பார்க்க தயாராவார்கள். தெருவில் உள்ள கிழம் கட்டையில் இருந்து பொடுசுகள் வரை பார சுமக்கும் வண்டி முழுவதும் அடைத்து அமர்ந்து இருப்பார்கள். நான் கால்களை தொங்கவிட்டபடி வண்டி ஓட்டுபவர் அருகில் அமர்ந்து கொள்வேன்.

மகிழ்ச்சியும், கூச்சலுமாக வண்டி ஆர்பாரிப்போடு செல்லும். மந்தை ரோடு கடக்கும் போதே இரண்டாவது காட்சி ஆரம்பிப்பதற்கான அறிப்பு, அதாவது மேள ரெக்கார்டு போட்டுவிடுவார்கள்.

இன்னைக்கு பாதி படம்தான் பார்க்கப் போகிறோம் என்கிற வருத்தமும், லேட்டாக கிளம்பியவர்கள் மீது ஆத்திரமும் உண்டாகும்.

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...