Sunday, April 22, 2018

61 படத் துவக்க விழா அழைப்பிதழில் பெயர்


கூடி வாழ்ந்தால் கோடி நன்மை துவக்க விழாவில் 
நடுத்தர, ஏழை குடும்பங்களில் நடக்கும் பிரச்சனைகளை, நகைச்சுவை படங்களாக தந்தவர் இயக்குநர் வி.சேகர். அவர் இயக்கி வெளியாகி இருந்த ‘விரலுக்கேத்த வீக்கம்’ படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது.

அடுத்து கரண், நாசர், குஷ்பு, ரோஜா, விவேக், வடிவேலு, கோவைசரளா, விஜயகுமார் ஆகியோர் நடிப்பில் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்கிற படத்தை எடுக்க இருந்தனர்.

அதற்கான துவக்க விழா அழைப்பிதழ் டிசைன் தயாராகி இருந்தது. அதை பார்த்து முடிவு செய்ய வந்திருந்த தயாரிப்பாளர் எஸ்.எஸ்.துரைராஜ், டிசைனை சரி பார்த்து அச்சடிக்க உத்தரவிட்டவர், என்னையும் திருவள்ளுவர் கலைக்கூடம் நிறுவனத்திற்கு மக்கள் தொடர்பாளராக வேலை செய்ய உத்தரவிட்டார். அந்த அழைப்பிதழில் அலுவலக பி.ஆர்.ஓ. என்று என் பெயரையும் இணைத்துக் கொள்ள சொன்னார்.

தயாரிப்பாளர் எஸ்.எஸ்.துரைராஜ் 
புதுப் படத்தின் பாடல்கள், கிளிப்பிங்க்ஸ், டிரைலர், போன்றவற்றை தயாரிப்பாளர் சங்கம் மூலமாக சாட்டிலைட் சேனல்களுக்கு வழங்கி வந்ததால், விரலுக்கேத்த வீக்கம் படத்தில் என் பெயரை சின்னத்திரை விளம்பரம் - ஜி.பாலன் என்று டைட்டில் கார்டில் இடம்பெற வைத்தவர்தான் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.துரைராஜ்.

இப்போது படத்தின் துவக்க விழா அழைப்பிதழில் என் பெயரை இடம்பெற வைக்கிறார். இவருக்கு எப்படி நன்றி சொல்வது என்று புரியாமல் நெகிழ்ந்து போய், அவரைப் பார்த்தேன். வேலையில்தான் நன்றியைக் காட்டவேண்டும் என்று முடிவு செய்தேன்.

அருகில் நின்ற அவரது மேனேஜர் அண்ணாத்துரை, என் கையைப் பிடித்துக் குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

உனக்கு நீ கேட்காமலேயே வேலை கிடைத்திருக்கிறது என்று பாராட்டினார் டிசைனர் மேக்ஸ்.

ஜி.பாலன் 
புதன் கிழமையில் இருந்து படத் துவக்க விழா பத்திரிக்கை கொடுக்கிற வேலை இருக்கிறது. அதனால், நாளை முதல் வேலைக்கு வந்துவிடு என்று சொன்னார் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.துரைராஜ்.

நன்றியோடு தலையாட்டினேன்.

இயக்குநர் வீ.சேகர் இயக்கிய படங்களுக்கு, ஆரம்பத்தில் இருந்து மக்கள் தொடர்பாளராக வேலை செய்தவர் நெல்லை சுந்தர்ராஜன். அவர் அப்போது அதிக படங்களுக்கு வேலை செய்து பிஸியாக இருந்தார். அவருக்கு எல்லா கம்பெனியும் ஒன்றுதான். அதனால், தங்களுக்கு என்று ஒரு மக்கள் தொடர்பாளர் வேண்டும் என்று விரும்பினார் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.துரைராஜ்.

நெல்லை சுந்தர்ராஜன்
அதனால், அவர் இயக்குநர் சார்பில் வேலை செய்யட்டும். நீ தயாரிப்பாளர் சார்பில் வேலை செய் என்று அலுவலக மக்கள் தொடர்பாளராக என்னை நியமித்தார்.

பிரசாத் ஸ்டூடியோவில் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை படத்தின் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவுக்கு வந்த சிறப்பு விருந்தினருக்கு மட்டுமல்லாமல் தொழிலாளர்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். எனக்கு அந்த விழாவில் மாலை அணிவித்து வாழ்த்தி, முன்பணம் கொடுத்து கௌரவித்தனர்.

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...