தமிழக முன்னாள்
கவர்னராக இருந்த சென்னா ரெட்டி 1996 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி மாலை
காலமானார். இதனால், தயாரிப்பாளர் சங்கத்திற்கு விடுமுறை. அலுவலக வேலைகளை
முடித்துவிட்டு சாவி எடுத்துக் கொண்டு வீட்டுக்கு புறப்பட்டேன்
இன்று அலமரமாக விரிந்து
வளர்ந்திருக்கும் பார்த் ஸ்கேன் நிறுவனத்தின் உரிமையாளர் டாக்டர் இமானுவேல், தனது மனைவியுடன்
சூளைமேடு பெரியார்பாதையில் பாரத் மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்தார். அதன் வாசலில்
எனது மகனுடன் நின்றிருந்த எனது சகோதரியின் மகன் பாலகிருஷ்ணன், என்னைக் கண்டதும்
தடுத்து நிறுத்தினான்.
அத்தையை
மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம். இப்போதுதான் பெண் குழந்தை பிறந்திருக்கிறது
என்று தெரிவித்தான். டூ வீலரை ஓரமாக நிறுத்திவிட்டு மருத்துவ மனைக்குள் சென்றேன்.
நான் எதிர்ப் பார்த்தது
போலவே மகள் பிறந்திருக்கிறாள். என்னுடைய அம்மா குழந்தையை பார்த்துக்
கொண்டிருந்தார். எனக்கு பெருமிதமாக மகிழ்ச்சியாக இருந்தது. குழந்தையைப் பார்த்து
நெகிழ்ந்து போனேன். கண்களில் கண்ணீர் திரண்டு அடைத்தது. என் மனைவி கையை நீட்டி
என்ன என்பது போல கேட்டாள். அவள் கைகளை பிடித்துக் கொண்டேன்.
‘’ஒன்றும் இல்லை’’
என்று சொல்லிவிட்டு, உடனே கிராமத்தில் இருக்கும் என் மாமியாருக்கு குழந்தை
பிறந்த தகவலை தொலைபேசியில் தெரிவித்தேன். அது ஒரு மகிழ்ச்சியான தருணம்.
மருத்துவ மனையில்
இருந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன்
பதினாறாம் நாள் பெயர்
சூட்டு விழாவில் எனது சின்னம்மா மருதம்பாள் பெயரை அவளுக்கு வைத்துக் கொண்டாடினோம்.
மகள் சிறு குழந்தையாக
இருந்ததால், என் மனைவியால் என் தம்பியின் நிச்சயதார்த
நிகழ்ச்சிக்கு அழைத்து செல்ல முடியவில்லை. அதனால் நான் மட்டும் நிச்சயதார்த்த
பட்டுப் புடவை எடுத்துக் கொண்டு சென்றேன்.
தம்பி நமசிவாயத்திற்கு
பெண் பிடித்திருந்தால் மட்டுமே திருமணம் செய்வது என்று முடிவு செய்தேன். அதே போல
பெண்ணை அவன் பார்க்கவும், அவனை பெண் பார்க்கவும் ஏற்பாடு செய்தேன். இருவரும்
பிடித்திருப்பதாக சொன்ன பிறகுதான் நிச்சயமானது.
எடையூர் வெங்கடாஜலபதி
கோவில் திருமண அரங்கில் திருவள்ளுவர் ஆண்டு வைகாசித் திங்கள் நான்காம் நாள்
18.05.1997 ஞாயிற்றுக் கிழமை மாலை நான்கு மணியளவில் நல்லாசிரியர் இ.வெங்கட்ராமன்
தலைமையில், பெரியவர் ந.உ.சிவசாமி முன்னிலையில் என் தம்பி
நமசிவாயத்திற்கும், அம்மளூர் எஸ்.சுப்பிரமணியன் – ஜோதி தம்பதியினரின்
மூத்தமகள் தமிழ்ச்செல்விக்கும் திருமணம் நடைபெற்றது.
இவ்விழாவில்
உறவினர்களும், நண்பர்களும் குடும்பத்தினருடன் வருகை தந்து
வாழ்த்தினார்கள்.
சென்னை திரும்பியதும், தனிக் குடித்தனம் செல்ல
ஏற்பாடு செய்தேன். தங்கை திருமணத்திற்கு பிறகு தம்பியின் திருமணம், தந்தை இல்லாத குறையுடன்
செய்து முடித்தோம். அதில் எனக்கும் என் மனைவிக்கும், என் அண்ணனுக்கும் அளவிட
முடியாத மகிழ்ச்சி.
தலைவர் கே.ஆர்.ஜி.
மணமக்களை வாழ்த்தி கௌரவித்தார். இருவரும் கொடைக்கானல் சுற்றுலா சென்று வர ஏற்பாடு
செய்தேன்.
இப்போது
குரோம்பேட்டையில் வசிக்கும் எனது தம்பிக்கு சுஜிதா கிருபாலானி என்கிற மகளும், பைரவ கிஷோர் என்கிற
மகனும் உள்ளனர்.
No comments:
Post a Comment