திருத்துறைப்பூண்டி
ஸ்வீட் ஸ்டாலுக்கு மீண்டும் வேலைக்கு செல்ல என்
மனைவி அனுமதிக்கவில்லை. பிரச்னைக்குரிய வேலை வேண்டாம் என்று தடுத்தாள்.
அதனால், முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை என்று
சில இடங்களுக்கு வேலைக்கு செல்ல முயற்சி செய்தேன். உடனடியாக எந்த வேலையும்
அமையவில்லை.
அந்த சமயத்தில் நானும்
என் மனைவியும் பின்னத்தூரில் உள்ள அவளது அம்மா வீட்டிற்கு சென்றோம். அங்கு என்
மாமியார் வேதனையும், கண்ணீருமாக அமர்ந்திருந்தார். விசாரித்த போது, அந்தமானில் இருந்து
மூத்தமகள் பூசவள்ளி எழுதிய கடிதம் கைக்கு வந்தது.
என மாமியாருக்கு நான்கு
மகள்கள். மூத்தவர் பூசவள்ளியை தில்லைவிளாகம் அரமங்காடு ஜெகந்நாதன் மகன் அண்ணாதுரை
என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார்கள். இரண்டாவது மகள் தமிழ்ச்செல்வியை
நான் திருமணம் செய்து கொண்டிருக்கிறேன். மூன்றாவது மகள் சரஸ்வதி பள்ளி தேர்வில்
தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டாராம். நான்காவது மகள் லட்சுமி பிளஸ் டூ
வரை படித்துவிட்டு உதயமார்தாண்டபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக
வேலைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
திருமணத்திற்கு முன்பு
அந்தமானில் வேலை செய்தவர், அண்ணாதுரை. ஒரே மகன் ஊரோடு இருக்க வேண்டும் என்று
அவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். அவரால் இங்கு வேலைப் பார்க்க
முடியவில்லை. அதனால், திருமணம் முடிந்த ஆறாவது மாதத்திலேயே அந்தமான் சென்று
விட்டார். சில மாதங்கள் பணம் அனுப்பினார். பிறகு கடித தொடர்பும் இல்லாமல் போனதாம்.
சரஸ்வதி தற்கொலை, கணவரின் மரணம், மூத்த பெண் கணவன்
இல்லாமல் இருப்பது என்று வரிசையாக துன்பம் என் மாமியாரை இரண்டு ஆண்டுகள்
துரத்தியது. மன வேதனையில் இருந்தவருக்கு நான் மருமகனாக வந்தது அவருக்கு பெரும்
நிம்மதியை தந்திருக்கிறது.
நேர்மையாக இருப்பது, கெட்ட பழக்கங்கள்
இல்லாமல் இருப்பது போன்ற என் குணங்கள் அவருக்கு அதிகம் பிடித்திருந்தது.
என் குடும்பத்தினர்
மீது எந்த அளவுக்கு அன்பும், மரியாதையும், உரிமையும்
வைத்திருக்கிறேனோ, அந்த அளவுக்கு என் மாமியார் குடும்பத்தினர் மீதும்
வைத்திருந்தேன். அதனால், என் மனைவியின் சகோதரி பூசவள்ளி, வீட்டில் மகனுடன்
இருப்பதை எண்ணி வருத்தப்பட்டேன். அவர் கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று
விரும்பினேன்.
அந்தமானில் இருந்து
அண்ணாதுரையின் சித்தப்பா ஜெகந்நாதன் என்பவர் தில்லைவிளாகம் திரும்பி இருந்தார்.
அவரை நேரில் சந்தித்து பேசினேன். நான் திரும்பி செல்லும் போது, பூசவள்ளியை அழைத்து
சென்று அண்ணாத்துரையிடம் சேர்த்து விடுகிறேன் என்றார். அதற்கு அரை குறை மனதுடன்
சம்மதித்தார் பூசவள்ளி.
மறு வாரம், ஒரு மாதத்திற்கு
தேவையான உணவு பொருட்களுடன் உதயமார்தாண்டபுரம் ரயில் நிலையத்தில் இருந்து அவரை
அனுப்பி வைத்தேன்.
அவரது கணவன், அந்தமானில் வசித்த ஒரு
பெண்ணை மணந்து அவள் வாயும் வயிறுமாக இருக்கிறாள் என்று அங்கு சென்ற பிறகுதான்
தெரிந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்திருக்கிறார் பூசவள்ளி. தினம் சண்டையும்
வம்புமாக இருந்திருக்கிறார்கள். ஒரு மாதம் வரை தனியாக இருந்து சமாளித்தவர், அதன் பிறகு ஊரோடு
சென்று விடலாம் என்று முடிவு செய்திருக்கிறார்.
அதனால், உடனே வந்து என்னை
அழைத்து செல்ல வேண்டும். இல்லை என்றால் கடலில் விழுந்து நானும் என் மகனும் தற்கொலை
செய்து கொள்வோம் என்று கண்ணீரில் கடிதம் எழுதி இருந்தார்.
இந்தக் கடிதத்தை
படித்துவிட்டுதான் என் மாமியார் அழுது கொண்டிருந்தார். அவருக்கு ஆறுதல்
சொல்லிவிட்டு, அன்று இரவே சென்னைக்கு புறப்பட்டு வந்தேன், மறுநாள் காலை
பதினோருக்கு மணிக்கு புறப்பட்ட நங்கௌரி கப்பல் மூலம் அந்தமான் பயணமானேன்.
உடனே டிக்கெட்
கிடைக்காமல் அந்த கப்பலில் ஏறுவதற்கு நான் அனுபவித்த சிரமங்களை எழுதினால் ஒரு
புத்தகமே போடலாம். அந்தளவுக்கு அதில் சுவராஸ்யமான செய்திகள் ஏராளமாக உள்ளன.
இரண்டு இரவுகள் மூன்று
பகல்கள் என தண்ணீரில் மிதந்து சென்று, இரவு பத்து மணிக்கு அந்தமான் தீவில் உள்ள
போர்ட்பிளேயர் சேர்ந்தது கப்பல். இரவு ஒரு லாட்ஜில் தங்கிவிட்டு, மறுநாள் அந்த
கடித்ததில் இருந்த முகவரியை தேடி அலைந்தேன்.
உன்னை அழைத்து செல்ல
இங்கு யாரும் வரமாட்டார்கள் என்று அவள் கணவன் சொன்னதற்கு, என்னை தேடி என் தங்கை
கணவர் கண்டிப்பாக வருவார் என்று பூசவள்ளி விட்ட சவால், நம்பிக்கையை நான்
காப்பாறிவிட்டேன்.
திருவிழா கூட்டத்தில்
தாயை பிரிந்த குழந்தை அழுது, திரிந்து, பிறகு தாயை கண்டதும் எப்படி வெடித்து ஒரு அழுகை
அழுவாரோ, அதே போல என்னைக் கண்டதும் பொங்கி வெடித்து ஒரு
குழந்தையைப் போல அழுதார் பூசவள்ளி.
நான் சமாதானம்
சொன்னேன். வெகு நேரம் வரை கண்ணீரும், விசும்பலும் அவளிடம் இருந்தது. அவளுடைய கணவன் மீது
ஆத்திரமும், கோபமும் உண்டானது. நான் நிதானமாக யோசித்தேன்.
போலீசுக்கு சென்று
முறையிடவோ, தமிழ் அமைப்பினரிடம் சென்று கலந்து பேசவோ அண்ணி
பூசவள்ளி என்னை அனுமதிக்க வில்லை. அவன் சிறைக்கு செல்வதாலோ, அந்த பெண் கஷ்டப்
படுவதாலோ எனக்கு நீதி கிடைக்கப் போவதில்லை. அவர்கள் வாழ்க்கையை அவர்கள்
வாழ்ந்துவிட்டார்கள். வாழ்கிறார்கள்.
ஊருக்கு சென்று என்
வாழ்க்கையை நான் பார்த்துக் கொள்கிறேன். அம்மாவுக்கு உதவியாக, தங்கைகளுக்கு நல்ல
அக்காவாக, என் மகனுக்கு நல்ல தாயாக வாழ்ந்து கொள்கிறேன். எனக்கு
இன்னொரு பெண்ணின் கணவன் வேண்டாம் என்று
பிடிவாதமாக சொல்லிவிட்டார்.
No comments:
Post a Comment