வீட்டோட மாப்பிள்ளை - நெப்போலியன், ரோஜா |
‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ படத்திற்கு பிறகு திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பில்
எஸ்.எஸ்.துரைராஜ், கே.பார்த்திபன் இருவரும் இணைந்து தயாரித்த படம், வீட்டோட
மாப்பிள்ளை.
ஓட்டல் நடத்தும் கந்தசாமியாக விஜயகுமார் நடிக்க, அவரது மகனாக தலைவாசல்
விஜய், மகள்களாக கல்பனா, கோவை சரளா, ரோஜா
மூவரும் நடித்திருந்தனர்.
தட்டி கேட்ட தன்னை கத்தியால் குத்திவிட்டு, பணத்தை எடுத்து சென்ற மகன்
தலைவாசல் விஜய்யின் ஞாபகமாக இருக்கும் விஜயகுமார், தனக்கு உதவியாக இருபார்கள் என்று
அனாதையாக இருந்த அக்காள் மகன் சார்லியையும், தங்கை மகன் வையாபுரியையும் வளர்த்து, படிக்க
வைத்து, தனது மகள்களை திருமணம் செய்து கொடுத்து, வீட்டோட மாப்பிளையாக வைத்திருக்கிறார்.
இயக்குனர் வி.சேகர் |
ஆனால், அவர்கள் குடிப்பதும், கிளப்புக்கு சென்று சூதாடுவதுமாக பொழுதை கழிக்கிறார்கள்.
இதனால், தந்தைக்கு உதவியாக சின்ன மகள் ரோஜா ஓட்டலை கவனித்துக் கொள்கிறார்.
இந்த நிலையில் அந்த ஓட்டலுக்கு சாப்பிட வரும் நெப்போலியனின், மணிபர்ஸ்
காணாமல் போக, அந்த ஓட்டலில் வேலை செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகிறார். அப்போது நெப்போலியனை
பார்க்கும் விஜயகுமார், அவரது நேர்மை, படிப்பு இவைகளை பார்த்து ஓட்டலில் வேலை கொடுக்கிறார்.
இதுநாள் வரை ஓட்டலில் சாப்பிடவும், பணத்தை எடுத்து சென்று சூதாடவும் செய்த
சார்லி, வையாபுரி இருவருக்கும் நெப்போலியன், ரோஜா எதிரிகளாக தெரிகிறார்கள். அதனால்,
நெப்போலியனை துரத்த அடியாட்களை அனுப்புகிறார்கள்.
எஸ்.எஸ்.துரைராஜ் |
இந்த நிலையில் மும்பையில் இருந்து மனைவி, பிள்ளைகளுடன் வீடு வந்து சேர்கிறார்,
தலைவாசல் விஜய். மகன் வந்ததும் விஜயகுமார் குணம் மாறுகிறது. உருப்புடாத மருமகன்கள்
சார்லி, வையாபுரியுடன் சேர்ந்து கொண்டு மகன் தலைவாசல் விஜய், நெப்போலியனை துரத்த சதி
செய்த உண்மையை அறியாமல், ஓட்டல் தொழிலில்
வருமானத்தை உருவாக்கிய நெப்போலியனை, வீட்டை விட்டு அனுப்புகிறார்.
மகனிடம் ஓட்டல் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு, ஓய்வு பெரும் விஜயகுமார்,
ஓட்டலை விற்றுவிட்டு மகன் பிரச்சனைகளில் சிக்கி தவிப்பதை அறிந்து, அதிர்ந்து போகிறார்.
மகனை காப்பாறவும், குடும்பத்தை காப்பாற்றவும் மருமகன் நெப்போலியன் உதவியத்தை
அறிந்து, நெகிழும் விஜயகுமார், திருந்திய மகனை மன்னித்து வீட்டோடு சேர்ப்பதோடு, மருமகனிடமும்,
மகளிடமும் மன்னிப்பு கேட்டு, அவர்களையும் குடும்பத்துடன் சேர்க்கிறார்.
கலகலப்பான நகைச்சுவை மற்றும் செண்டிமெண்ட் படமாக உருவான இந்தப் படத்தின்
பெரும் பகுதி காட்சிகளை சம்சாரம் அது மின்சாரம் செட்டிலும், ஓட்டல் காட்சிகளை ஏ.வி.எம்.
ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட ஓட்டல் அரங்கிலும் படமாக்கினார் இயக்குனர் வி.சேகர்.
கிராமத்தை சேர்ந்த பட்டதாரி மாணிக்கமாக நெப்போலியன் நடிக்க, அவரது தயாராக
சண்முகசுந்தரி நடித்தார்.
கந்தாசாமியாக விஜயகுமார் நடிக்க, மூத்தமகள் ஜமுனாவாக
கல்பனா, இளைய மகள் ராணியாக கோவை சரளா நடித்திருந்தனர். கல்பனா கணவர் கங்காவாக சார்லி,
கோவைசரளா கணவர் தாமுவாக, வையாபுரி நடித்திருந்தனர். முத்துபாண்டி என்கிற வேடத்தில்
தலைவாசல் விஜய் நடிக்க, அவரது மனைவியாக சோனியா நடித்திருந்தார்.
கதாநாயகியாக மீனா என்கிற பத்திரத்தில் நடித்திருந்தார் ரோஜா. கூடி வாழ்ந்தால்
கோடி நன்மை படத்தை தொடர்ந்து, இந்த நிறுவனத்தில் ரோஜா நடித்த இரண்டாவது படம் இது.
மேலும் பயில்வான் ரங்கநாதன், சூர்யகாந்த், எம்.எல்.ஏ.தங்கராஜ்,
போண்டா மணி உட்பட பலர் நடித்திருந்தனர். நெப்போலியன் ஓட்டலில் சாப்பிடுகிற காட்சியை
படமாக்கிய போது, அங்கு சென்ற என்னை, நெப்போலியன் அருகே அமர்ந்து சாப்பிடுமாறு, அந்த
காட்சியில் நடிக்க வைத்தார், இயக்குனர் வி.சேகர்.
தேனிசை தென்றல் தேவா இசையில் காளிதாசன் எழுதிய ‘‘ஆயிரமீன புடிக்கப்போறேன்
அஞ்சல’’ என்கிற பாடலை கிருஷ்ணராஜ், ஜெயலட்சுமி, சபேஷ் ஆகியோர் பாடி இருந்தனர். ‘‘பொம்பளை
என்ன ஆம்பளை என்ன...’’ என்கிற பாடலை சித்ரா, கிருஷ்ணராஜ், சபேஷ் ஆகியோர் பாடி இருந்தனர்.
அறிவுமதி எழுதிய ‘‘மண்ணுக்கேத்த மச்சானே...’’ பாடலை பாடிய எஸ்.பி.பாலசுப்பிரமணியம்,
சித்ரா, முத்துலிங்கம் எழுதிய ‘‘வாடா மலரே வாடா...’’ பாடலையும் பாடி இருந்தனர். ‘‘மாப்பிள்ளையே’’
பாடலை கிருஷ்ணராஜ் பாடி இருந்தார்.
நடனக் கட்சிகளை சிவசங்கர், லலிதாமணி அமைக்க, சண்டைக்
காட்சிகளை ஜாகுவார் தங்கம் அமைத்தார்.
கலை இயக்குனராக கே.ஏ.பாலன், படதொகுப்பாளராக ஏ.பி.மணிவண்ணன்
பணியாற்றிய இந்தப் படத்தில் மேனேஜர்கள் நாராயணன், பாபுஜி,
இணை இயக்குனர் வைரமணி, உதவி இயக்குனர்கள் கே.ஆர்.ராஜா,
தனசேகர், கலைச்செல்வன், செல்வராஜ்,
காஸ்டியூமர் கணேசன், நாகராஜ், ஒப்பனையாளர் சேத்தூர் தவகுரு, ஹரி, ஹேர்டிரஸ்ஸர் போடி சரவணன், புகைப்பட கலஞர் குமரன் லேப்
எல்.மூர்த்தி, ராஜா, வேதாசாலம் நகர் ஆபீஸ்
தனலிங்கம், ஏவிஎம் காலனி ஆபீஸ் ராம்பூபால், கேஷியர் சேகர், கார்த்திக், டிசைனர்
மேக்ஸ், வேலு, பி.ஆர்.ஓ. நெல்லை சுந்தராஜன்,
ஜி.பாலன், டிரைவர்கள் அண்ணாத்துரை, பாலு என இந்தப்
படைப்புக்கு பின்னால் இருந்து தினம் அறுபது பேர்கள் கூடி வேலை செய்தோம்.
இந்தப் படம் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர்
14ஆம் தேதி அன்று வெளியானது.
No comments:
Post a Comment