எனது அக்காள் வைரக்கண்ணு |
இதில் மூத்தவர் குமார், எடையூரில் எனது தம்பி
நமசிவாயம் நடத்திய டீ கடைக்கு உதவியாக இருந்ததையும், பிறகு அவன் கடையை
விட்டு சென்ற பிறகு, அவரே ஏற்று நடத்தியதையும் முந்தைய கட்டுரைகளில்
சொல்லி இருந்தேன். அதன் பிறகு படிப்புக்கு குட் பை சொல்லிவிட்டு, கடை வியாபாரத்தில்
முழுமையாக தன்னை ஈடுப்படுத்திக் கொண்டார் குமார்.
விவசாய வேலைகளை
பார்த்துக் கொண்டிருந்த எனது அக்காவும், அவரது கணவரும், மகன் நடத்தும் கடைக்கு
உதவியாக இருந்தனர். வியாபாரத்தை உயர்த்தினர். தங்குவதற்கு எடையூரில் புலவர் கு.மணி
அவர்களின் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டனர்.
ராமையாத் தேவர் மாமா
வீட்டு இடத்தில் டீ கடை இருந்ததால், மாமி சரோஜாவுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு
அக்காவுக்கு கிடைத்திருந்தது. நல்ல புரிதலும், நட்பும், தோழமையும்
அவர்களிடத்தில் இருந்தது.
என் மனைவிக்கு ஐந்தாவது
மாதம் என்பதால் மருந்து கொடுக்க பின்னத்தூர் அழைத்து சென்றார்கள். மருந்து கொடுக்க
சென்ற என் மனைவியின் பெரியம்மாள் சரோஜா, அப்போதுதான் நான் சென்னையில் இருக்கிற செய்தி அறிந்து
அதிர்ந்து போயிருக்கிறார்.
மனைவியின் பெரியம்மாள் சரோஜா |
வீட்டுக்கு சென்றதும்
இந்த தகவலை தன் கணவருடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
பெரிய மகளுக்கு ஒரு
மாப்பிள்ளையைப் பார்த்து கல்யாணம் செய்து வைத்தீர்கள். அவர் அந்தமானில்
இருக்கிறார். நடு மகளுக்கு கல்யாணம் செய்து வைத்தீர்கள் இந்த மாப்பிள்ளை
சென்னையில் இருக்கிறார். ஏன் இந்த பொண்ணுங்க வாழ்க்கையை இப்படி கெடுத்தீர்களோ
என்று கணவரிடம் ஆதங்கப்பட்டிருக்கிறார்.
பெரிய பொண்ணு
அம்மாவுக்கு உதவியாக பின்னத்தூரில் இருக்கிறார். நடு பொண்ணு மாமியாருக்கு உதவியாக
வடசங்கந்தியில் இருக்கிறார். சின்னப் பொண்ணையாவது நல்ல இடமாக பார்த்துக்
கட்டிகுடுங்க என்று புலம்பி இருக்கிறார்.
இவர்கள் இப்படி பேசிக்
கொண்டிருந்தது எனது அக்காவுக்கு காதில் விழுந்திருக்கிறது. தன் மானம் அவரி சுட, உடனே எனக்கு எழுதி
இருக்கிறார்.
நானும் என்னமோ, ஏதோ என்று பதறி
அடித்துக் கொண்டு ஊருக்கு சென்றால், மாமாவும் மாமியும் இப்படி பேசுகிறார்கள். அதனால் நீ
அவளை அழைத்துக் கொண்டு சென்னைக்கு போ, இல்லை என்றால் ஊரோடு பொழப்பை பாரு என்று கட்டளை
இட்டார்.
எனக்கு என்ன பதில்
சொல்வதென்றே தெரியவில்லை. என் கனவு சினிமா. அதில்தான் வெற்றி பெறுவேன். என் தொழில்
இங்கு இல்லை. சென்னையில்தான் இருக்கிறது. பொருளாதார ரீதியாக கொஞ்சம் உயர்ந்த பிறகு
அவளை அழைத்து செல்கிறேன். அதுவரைக்கும் அம்மாவோடு அவள் இருப்பாள். அதற்கு மாதா
மாதம் பணம் அனுப்புகிறேன் என்று எடுத்துச் சொன்னேன்.
அதற்கு அக்கா
சம்மதிக்கவில்லை. பிடிவாதமாக இருந்தார். மாமா, மாமி பேச்சுக்காக
மட்டும் இப்படி சொல்லவில்லை. ஊரில் எல்லோரும் அப்படித்தான் பேசுவார்கள். அடுத்தவர்
கேலி பேச்சுக்கும் கிண்டலுக்கும் ஆளாகக் கூடாது என்று வாதிட்டார்.
G.Balan |
மயிலாப்பூரில்
முரளியுடன் தங்கி இருந்த அறையில் இடவசதி குறைவாக இருக்கும் என்பதால், ஜாபர்கான்பேட்டையில்
இருந்த தம்பியின் அறைக்கு சென்றேன்.
அப்போதுதான் பொழுது பளபளவென விடிந்திருந்தது.
தூக்க கலக்கத்தில்
வந்து கதவை திறந்த என் தம்பி நமசிவாயம், நான் என் மனைவியுடன் வந்து நிற்பதை கண்டு அதிர்ச்சி
அடைந்தான்.
எப்போது ஊருக்கு
சென்றாய்?. ஏன் அண்ணியை அழைத்து வந்தாய்? என்று விசாரித்தவன், பிறகு எங்கோ ஓடினான்.
பிறகு ஆயிரம் ரூபாயை கொண்டு வந்து கையில் கொடுத்து உடனே வீடு பார்த்து அட்வான்ஸ்
கொடுக்க சொன்னான்.
நானும் என மனைவியுமாக
சென்று வீடு தேடினோம். காசி தியேட்டர் எதிரே உள்ள அஞ்சுகம் நகர் முதல் தெருவில்
ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ், ஐநூறு ரூபாய் வாடகை என்று ஒரு வீடு பார்த்தோம்.
நான் வைத்திருந்த ஐநூறு
ரூபாய்க்கு பிளாஸ்டிக் குடம், பக்கெட், ஸ்டவ், துடைப்பம் என வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்
வந்து, அன்றே குடி புகுந்தோம். படுக்க பாய் இல்லை.
வெறுந்தரையில் படுத்து
எங்கள் சென்னை வாழ்க்கை துவங்கியது.
No comments:
Post a Comment