தமிழில் அறிமுகமாகி, மலையாளத்தில் நடித்து
இந்தியிலும் தனது திறமையை பேச வைத்தவர் கலைஞானி கமல்ஹாசன். கலைக்கு மொழி இல்லை
என்பது போல திரைக்கலையால் புகழ் பெற்றவர் கமல்.
சாதி, மதம், இனம் ஆகியவற்றில் தன்னை
இணைத்துக் கொள்ளாதவர். அந்த மூன்றுக்கும் காரணமாக இருக்கும் கடவுளர்களையும்
நம்பாதவர் அவர். அவருக்கு தெரிந்ததெல்லாம் நடிப்புதான். அந்த தொழிலில் மட்டுமே
தன்னை முழுமையாக அர்பணித்துக் கொண்டவர். தான் சம்பாதிப்பதையும் அதில் தான் முதலீடு
செய்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு
மொழிகளுக்கும் பொதுவாக இருக்கிற பிலிம் சேம்பரில் உறுப்பினராக இருந்தார். தமிழ்த்
திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினர் ஆகவில்லை.
தமிழில் படம் எடுக்கும்
அனைவரும் தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினர் ஆக வேண்டும் என்பது சங்கத்தின்
தலைவர் கே.ஆர்.ஜியின் லட்சியம். அதனால், கமல் அலுவலகத்திற்கும் உறுப்பினர் விண்ணப்ப படிவத்தை
எடுத்துக் கொண்டுநான் பலமுறை சென்றிருக்கிறேன்.
கமலை சந்திக்க
முடியவில்லை. அதனால், அவரது மேனேஜர் டி.என்.எஸ். என்று அழைக்கப்படும்
டி.என்.சுப்பிரமணியம் அவர்களை சந்தித்து பேசி வருவேன். ‘’நீங்கள் சொன்னதெல்லாம்
கமலிடம் சொல்லிவிட்டேன். அவர் பதில் எதுவும் சொல்ல வில்லை’’ என்று பதில் சொல்வார்.
அடிக்கடி சென்றால்
எப்படியும் உறுப்பினர் ஆவார் என்கிற நம்பிக்கை இருந்தது. முயற்சி செய்யாமல் இருக்க
கூடாது என்று வாரம் இருமுறை செல்வேன். சில சமயம், தனது நீல நிற காரை
அனுப்பி வைப்பார் கே.ஆர்.ஜி..
அவரது கார் வருவதைப்
பார்த்தாவது கமல் சேருவார் என்கிற நம்பிக்கை அவருக்கு இருந்தது.
நம்பிக்கையும்
முயற்சியும்தானே வாழ்க்கை. அந்த முயற்சியின் விளைவாக, எங்களின் அலைச்சலைப்
பார்த்து கமலின் மேனேஜர் டி.என்.எஸ்., என்னை உறுப்பினராக சேர்த்துக் கொள் என்று, கடமைக்கு உறுப்பினர்
ஆனார்.
அது முயற்சிக்கு
கிடைத்த வெற்றிதான். கமல் சேர்வார் என்கிற நம்பிக்கை இருந்தது.
ஏதோ ஒரு ஆர்வத்தில்
உறுப்பினரான டி.என்.எஸ்., பிறகு அந்த நிறுவனத்தின் பெயரில் பிரபு நடித்த சின்ன
வாத்தியார் என்கிற படத்தையும் தயாரித்தார்.
கடல் அலையைப் போல மீண்டும்
மீண்டும் ராஜ் கமல் அலுவலகத்திற்கு சென்றேன்.
கமல் தயாரிப்பில்
அர்ஜூன் நடிப்பில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்கிய குருதிப்புனல், நாசர் நடிப்பில்
சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கிய மகளிர் மட்டும், ரமேஷ் அரவிந்த்
நடிப்பில் பாலு மகேந்திரா இயக்கிய சதி லீலாவதி ஆகிய மூன்று படங்களையும்
தயாரித்திருந்தார் கமல். இந்த மூன்று படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று
நூறு நாட்களை கடந்து ஓடின.
இந்த மூன்று படங்களின்
வெற்றி விழாவை ஒரே இடத்தில் பிரமாண்டமாக கொண்டாடினார் கமல். அந்த விழாவுக்கு
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்கள் தலைமை ஏற்று, அப்பட கலைஞர்களை
பாராட்டி பரிசு கேடயங்களை வழங்க இருந்தார்.
அந்த விழா நடைபெற
இருந்த அன்று காலை, தயாரிப்பாளர் சங்க அறக்கட்டளை கூட்டத்திற்கு
வந்திருந்தார், அறங்காவலர்களில் ஒருவரான கே.பாலசந்தர். சங்க
அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு விடைபெறும் போது, ‘’சரி கே.ஆர்.ஜி.
சாய்ங்காலம் விழாவில் பார்க்கலாம்’’ என்றார்.
அதற்கு ‘’நான்
விழாவுக்கு வரமாட்டேன் தலைவரே. நாளைக்கு பார்க்கலாம்’’ என்று பதில் சொன்னார்
கே.ஆர்.ஜி.
‘’ஏன்’’ என்று கேட்டார்
கே.பாலசந்தர்.
‘’சங்கத்தில்
உறுப்பினர் இல்லாத தயாரிப்பாளர்களின் விழாக்களில் கலந்து கொள்ளக் கூடாது என்று
சங்கம் முடிவு எடுத்திருக்கிறது தலைவரே’’ என்றார் கே.ஆர்.ஜி.
‘’ஏன்? கமல் உறுப்பினர்
இல்லையா?’’ என்று கேட்டார் கே.பாலசந்தர்.
‘’இல்ல தலைவரே. அவரை
சேர்க்க அவரது அலுவலகத்திற்கு பல முறை ஆள் அனுப்பிருக்கேன். என்ன காரணத்தினாலோ
அவர் சேரவில்லை’’ என்றார். கே.ஆர்.ஜி.
பிறகு என்னை அழைத்து
கே.பாலசந்தரிடம் பேச வைத்தார். முயற்சி செய்த தகவலை தெரிவித்தேன்.
சிறிது நேரம் அமைதியாக
இருந்த கே.பாலசந்தர், பிறகு ‘’நான் டிரஸ்டியா இருக்கேன்யா... நான் மட்டும்
எப்படி கலந்துகிறது?’’ என்று சத்தமாக சென்னவர், பிறகு அமைதியாக யோசித்தார்.
பிறகு தொலைபேசியில்
கமல் அவர்களை தொடர்பு கொண்டார். விழாவுக்கு வர வேண்டுமென்றால் உடனே உறுப்பினார் ஆக
வேண்டும் என்று அவரிடம் அன்புக்கட்டளை இட்டார். பிறகு எங்களிடம் கமல் வருவார்.
உறுப்பினர் ஆவார் என்று சொல்லிவிட்டு சென்றார்.
அவர் சொன்னது போலவே
அன்று மதியமே சங்க அலுவலகத்திற்கு நேரில் வந்தார் கமல். உறுப்பினர் நன்கொடை, அறகட்டளைக்கான நன்கொடை
செலுத்தி உறுப்பினர், ஆனார்.
இப்படி புகழ் பெற்ற
கலைஞர்களையும் தனது உறுப்பினர் ஆக்கிக் கொண்டது தயாரிப்பாளர் சங்கம்.
இந்தியன் படத்தில்
கமலுக்கு மனைவியாக நடித்திருந்தார் சுகன்யா. அப்படத்தில் ஒரு காட்சியில் அவரை
வெள்ளைக்காரர்கள் உடையை உருவுவது போலவும், அவர் போராடி தப்பிப்பது
போலவும் காட்சியை படமாக்கி இருந்தார் இயக்குநர் ஷங்கர்.
அவர் நடித்துவிட்டு
சென்ற பிறகு ஒரு டூப் நடிகையை வைத்து நிர்வாணமாக ஓட விட்டு படமாக்கினார்கள்
என்றும், அந்தக் காட்சி படத்தில் இடம்பெற்றால் தனக்கு அவமானமாக
இருக்கும். அதனால், எடுக்கப்பட்ட அந்த நிர்வாண காட்சியை பயன்படுத்த
மாட்டேன் என்று எழுதி கொடுத்து, எடுத்த அந்தக் காட்சிகளை தன்னிடம் கொடுத்தால்தான்
தொடர்ந்து நடிப்பேன் என்று தெரிவித்து, மீதமுள்ள காட்சிகளில் நடிக்க மறுத்துவிட்டார்
சுகன்யா.
இதனால், படப்பிடிப்பு நின்றது.
சங்கத்திற்கு புகார் வந்தது. தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினம், நடிகை சுகன்யா, அவரது தந்தை, நடிகர் சங்கத்தில்
இருந்து தலைவர் ராதாரவி ஆகியோரை வரவழைத்து இந்தப் பிரச்சனை குறித்து பேசினார், தலைவர் கே.ஆர்.ஜி.
பிரச்சனையை சுமூகமாக
முடித்துக் கொடுத்து, மறுபடியும் படப்பிடிப்பு தொடர உதவினார்
கே.ஆர்.ஜி.இதெல்லாம் சங்கமாக இருப்பதால்தான் சாத்தியமானது.
No comments:
Post a Comment