CINEMA RASIKAR SANGAM AWARD VIZHAA |
முதல் நாள் ‘வள்ளி
திருமணம்’, இரண்டாவது நாள் ‘பவளக்கொடி’, மூன்றாவது நாள்
‘அரிச்சந்திர மயான கண்டம்’ என மூன்று நாடகங்கள் நடத்துவார்கள். அந்த நாடங்களை காண சுற்றியுள்ள
பல கிராமங்களில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக
திரள்வார்கள்.
நாடக நோட்டீஸ் வந்த
நாளில் இருந்து எனக்குள் நாடகம் பார்க்கப் போகிற ஆர்வமும், எதிர்ப்பார்ப்பும்
மேலோங்கி நிற்கும். ஒவ்வொரு நாளையும் தள்ளுவது கஷ்டமாக கூட இருக்கும். அதைவிட
கஷ்டம், அப்பாவிடம் அனுமதி பெறுவது.
வாசலில் பாய் விரித்து
படுத்திருப்போம். தெற்கு காத்து அள்ளி வந்து வீசும். படுத்தால் அப்படி ஒரு தூக்கம்
வரும். ஆனால், அன்று தூக்கம் வரவில்லை. நாடகம் பார்க்கப் போகிற
ஆர்வத்தில் அக்கா, தங்கை, அண்ணன், தம்பி என எல்லோரும் தூங்காமல் அப்பாவின் வருகைக்காக
காத்திருந்தோம். நொடிக்கு ஒரு தடவை அப்பா வருகிறாரா? என்று தெருவை பார்த்தபடியே அமர்ந்திருந்தேன்.
நாடகம் இரவு பத்து
மணிக்கு தொடங்குவார்கள். அதற்குள் அப்பா வரவேண்டும். அனுமதி தர வேண்டும் என்று
வேண்டிக் கொள்வேன்.
கிராமத்தில் எத்தனை
வீட்டில் நெல்லு கொட்டி வைக்க உதவும்
பத்தாயாம் இருக்கிறது, எத்தனை வீட்டில் குதிர் இருக்கிறது என்று அக்காள்
கணக்கு போடுவாள்.
வடக்கு தெரு கடைசி
வீட்டில் இருந்து கிழக்கு தெரு சாரங்க ராஜூ வீடு வரை ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும்
பத்தாயாங்கள், குதிர்கள் கணக்கு போட்டு நேரம் கழியும்.
எத்தனை வீட்டில் பழுத்த
கிழவன், கிழவிகள் இருக்கிறார்கள். அவர்களில் யார் யார்
சீரியசாக இருக்கிறார்கள். முதலில் யார் மண்டையை போடுவார் என்று எனது அண்ணன்
வில்லங்கமாக கணக்கு போடுவார்.
எனக்குள் அப்பா எப்போது
வருவார் என்கிற எதிர்ப்பார்ப்பும், நாடகம் தொடங்கிவிடுமே என்கிற தவிப்பும் இருப்பதால், அவர்கள் பேச்சுக்கள்
மனதில் பதியாது.
ஒரு வழியாக பத்து
மணிக்கு அப்பா வந்தார். உட்காந்திருந்த நாங்கள் ‘டப்பு, டப்பு’ என்று படுத்துக்
கொண்டோம். இதைப் பார்த்து அம்மா சிரித்துக் கொண்டார்.
அப்பா என்றால் அப்படி
ஒரு பயம். அது மரியாதையால் வருகிற உணர்வு. அப்பா கயிற்று கட்டிலில் அமர்ந்து, நாங்கள் சாப்பிட்டு
விட்டோமா?. என்ன சாப்பாடு? என்று விசாரித்தார்.
நாங்கள் நாடகம்
பார்க்கப் போகிற ஆவலில் இருப்பதையும், தூங்காமல் இருப்பதையும் தெரிவித்தார் அம்மா.
‘’இன்னைக்கு வேண்டாம்.
கடைசி நாள் போகலாம். நாடகத்துக்கு பணம் போடணும்’’ என்றார் அப்பா.
எனக்கு அழுகையே
வந்துவிட்டது
‘’போன வருஷம் பார்த்த
நாடகத்தையே மறுபடியும் பார்க்கணுமா? இந்த வருஷம் வேற நாடகம் பார்க்கலாமே’’ என்று அம்மா, அப்பாவிடம் ஆலோசனையாக
தெரிவித்தார். அப்பாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அவர் பார்வை கண்டு அம்மா
வீட்டுக்குள் சாப்பாடு எடுக்க சென்றுவிட்டார்.
அவர் சாப்பிட்டு
முடிக்கும் வரை பொறுமையாக இருந்த அம்மா, அவர் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தார். சிறிது
நேரத்திற்கு பிறகு அப்பா அனுமதி அளித்தார். செலவுக்கு அம்மாவிடம் பணம் கொடுத்தார்,
எங்களுக்கு குஷி.
அனைவரும் எழுது உட்கார்ந்தோம். பாயை சுருட்டி கக்கத்தில் வைத்துக் கொண்டு
தயாரானேன்.
இதை பார்த்த அப்பா, என்னை மட்டும் போக
வேண்டாம் என்றார்.
எனக்கு அழுகை முட்டிக்
கொண்டு வந்து விட்டது. கண்களில் நீர் திரண்டது.
ஜெகநாதன் மகன்
சித்திரவேலுவை, அவனது பெரியப்பா, ராமன் தத்து
எடுத்துக்கொள்ள விழா வைத்திருப்பதாகவும், அங்கு என்னை அழைத்து செல்லப் போவதாகவும்
தெரிவித்தார்.
No comments:
Post a Comment