Sunday, April 22, 2018

68 கூடி‌ வா‌ழ்‌ந்‌தா‌ல்‌ கோ‌டி‌ நன்‌மை‌


தயாரிப்பாளர் எஸ்.எஸ்.துரைராஜ்
திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பில் எஸ்.எஸ்.துரைராஜ், கே.பார்த்திபன் இருவரும் இணைந்து தயாரித்த கூடி வாழ்நாதால் கோடி நன்மை படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார் வி.சேகர்.

இந்தப் படத்தில் கதாநாயகனாக தங்கராஜ் என்கிற கதாபாத்திரத்தில் நாசர் நடிக்க, அவரது மனைவி மீனாட்சி பாத்திரத்தில் குஷ்பு நடித்தார். நாசரின் மூத்ததம்பி பாஸ்கர் கிருஷ்ணன் என்கிற பாத்திரத்தில் வடிவேலு நடிக்க, சின்னதம்பி சிவராமனாக கரண் நடித்தார்.

கரணுக்கு ஜோடியாக தமிழ்செல்வி என்கிற பாத்திரத்தில் ரோஜா நடிக்க, ரோஜாவின் தந்தையாக வள்ளுவர்தாசன் என்கிற பாத்திரத்தில் விஜயகுமார் நடித்திருந்தார். வடிவேலுவுக்கு மனைவியாக கனகவல்லி என்கிற பாத்திரத்தில் கோவைசரளா நடிக்க, இவர்களது பிள்ளைகளாக பிளாக் பாண்டி, மாஸ்டர் உதயராஜ் உட்பட நான்கு பேர் நடித்தனர்.

இயக்குநர் வி.சேகர் 
நாசர் – குஷ்புவின் மகளாக பத்மா என்கிற வேடத்தில் புதுமுகம் கவிதா நடிக்க, அவரை காதலிக்கும் எதிர் வீட்டு பையன் தண்டபாணி வேடத்தில் விவேக் நடித்திருந்தார். விவேக்கின் தந்தை வீரபாண்டியாக தியாகு நடிக்க, எம்.எல்.ஏ. தங்கராஜ், சூரியகாந்த் என பலர் நடித்த அந்தப் படத்திற்கு பி.எஸ்.செல்வம் ஒளிப்பதிவு செய்தார்.

சம்சாரம் அது மின்சாரம் படத்தில் இடம் பெற்ற வீடு, நாசரின் வீடாக பயன்படுத்தப்பட்டது. அந்த வீட்டுக்கு எதிராக விவேக் வீடு இருப்பது போல, ஆர்ட் டைரக்டர் கே.ஏ.பாலன் ஒரு வீட்டின் முன் பகுதியை உருவாக்கி இருந்தார்.

அங்கு படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெற்றது.

தேவா இசையில் கவிஞர் முத்துலிங்கம், காளிதாசன், பழனிபாரதி ஆகியோர் பாடல்களை எழுதி இருந்தனர்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்கிற பாடலையும், எங்க வீட்டுக் கல்யாணம் பாடலையும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்ரா இருவரும் இணைந்து பாடி இருந்தனர். எங்கள் தமிழ்ச்செல்வியே என்கிற பாடலை சித்ரா குழுவினரும், சிங்கார சென்னையிலே என்கிற கானா பாடலை தேவா குழுவினரும், ஹேப்பி டூ தவுசன் என்கிற பாடலை மனோ குழுவினரும் பாடி இருந்தனர்.

வாகினி ஸ்டூடியோவில் அரங்கு அமைத்து இரண்டாயிரம் ஆண்டை வரவேற்பது போல ஹேப்பி டூ தவுசன் பாடல் படமாக்கப்பட்டது. பாடல் காட்சிகளுக்கு சிவசங்கர், லலிதாமணி, சின்னா ஆகியோர் நடனம் அமைத்தனர்.

பிலிம் சிட்டியில் எடுக்கப்பட சண்டைக் காட்சிகளுக்கு பயிற்சி அளித்தார், ஸ்டண்ட் இயக்குனர் ஜாகுவார் தங்கம்.  

ஒளிப்பதிவாளர் பி.எஸ்.செல்வம்
தம்பிகளுடன் சண்டை போட்டு வேறு வீட்டுக்கு மனைவி, மகளுடன் செல்வார் நாசர். அந்த வீட்டின் காட்சிகளை கற்பகம் ஸ்டூடியோவில் உள்ள வீட்டில் படமாக்கிய போது, குஷ்பு கர்ப்பிணியாக இருந்தார். அவரது முதல் மகள் அவந்திகா வயிற்றில் இருந்த காலம்.

அப்படி இருந்தும் எமோஷன் காட்சியில் தலையில் அடித்துக் கொண்டு பாத்திரங்களை தட்டிவிட்டபடி குமுறி அழுகிற காட்சியில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படக்குழுவை பிரமிக்க வைத்தார், குஷ்பு.

அலுவலகத்தில் தனது உதவியாளர்களுடன் எடுத்த காட்சிகளை எடிட் செய்து, அவ்வப்போது இயக்குனர் வி.சேகருக்கு மூவியாலயாவில் காட்டி அடுத்து எடுக்கப் போகும் காட்சிகளுக்கு உதவியாக இருந்தார் எடிட்டர் ஏ.பி.மணிவண்ணன்.

மேனேஜர்கள் நாராயணன், பாபுஜி, இணை இயக்குனர் வைரமணி, உதவி இயக்குனர்கள் கே.ஆர்.ராஜா, தனசேகர், கலைச்செல்வன், செல்வராஜ், காஸ்டியூமர் கணேசன், நாகராஜ், ஒப்பனையாளர் சேத்தூர் தவகுரு, ஹரி, ஹேர்டிரஸ்ஸர் போடி சரவணன், புகைப்பட கலஞர் குமரன் லேப் மூர்த்தி, ராஜா, வேதாசாலம் நகர் ஆபீஸ் தனலிங்கம், ஏவிஎம் காலனி ஆபீஸ் ராம்பூபால், கேஷியர் சேகர், கார்த்திக், டிசைனர் மேக்ஸ், வேலு, பி.ஆர்.ஓ. நெல்லை சுந்தராஜன், டிரைவர்கள் அண்ணாத்துரை, பாலு என இந்தப் படைப்புக்கு பின்னால் இருந்து தினம் அறுபது பேர்கள் கூடி வேலை செய்தோம்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை இரண்டாயிரம் ஆண்டு ஜூலை மாதம் பதினைந்தாம் தேதி வெளியானது.  

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...