Sunday, April 22, 2018

50 திருட்டு வி.சி.டி.க்கு எதிரான முதல் நடவடிக்கை


முதல்வரிடம் பக்த்சிங் பட திருட்டு  விசிடி 
ஒன்றை காட்டுகிறார் விஜயகாந்த்.
 பின்புறம் ஏ.எல்.அழகப்பன், பாலன்
சாட்டிலைட் தொலைக்காட்சிகள் போட்டிப் போட்டுக் கொண்டு நல்ல கதையம்சம் உள்ள மெகா தொடர்களை காலையில் இருந்தே ஒளிபரப்ப ஆரம்பித்தார்கள். அதனால் பெண்களின் கூட்டம் தியேட்டருக்கு வருவது கணிசமாக குறைந்தது.

அதே போல ஒவ்வொரு சேனலும் படங்களை போடுவதற்காக தனி சேனல் தொடங்கி தினமும் நான்கு படங்களை ஒளிபரப்பினர்கள்.

இந்த நிலையில் புதுப் படங்கள் வெளியான மறுநாளே திருட்டு வி.சி.டி வெளியாகி பெருமளவில் வியாபாரம் நடைபெற்றது. நீ பாத்துட்டியா? நான் பாத்துட்டேன் என்று பெருமையாக சொல்லும் அளவிற்கு திருட்டு விசிடி மக்களிடம் புகழ் பெற்றிருந்தது. இதனால், நாளுக்கு நாள் தியேட்டரில் படம் பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைய ஆரம்பித்தது.

கே.ஆர்.ஜி
வெளிநாட்டு உரிமை விற்பதால்தான் இந்த திருட்டு விசிடி வருகிறது என்று சில படங்களின் வெளிநாட்டு உரிமையை நான்கு வாரம் கழித்து விற்காலாம் என்று முடிவு செய்தால், வெளிநாட்டிலும் திருட்டு வி.சி.டி.வெளியாகி அந்தப் படங்களின் வியாபாரத்திற்கு எதிராக அமைந்தது.

இதனால், திருட்டு வி.சி.டி. வாங்குவது, பார்ப்பது தவறு என்று மக்கள் நினைக்க வேண்டும். அதற்கு பெரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைத்தார் கே.ஆர்.ஜி.

இது குறித்து நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த்துடன் கலந்து ஆலோசனை செய்தார். படம் பார்க்க கூட்டம் வரவில்லை என்றால் அரசுக்கும் கோடி கணக்கில் வரி இழப்பு ஏற்படும். அதனால் இந்த பிரச்சனையை முதல்வரிடம் கொண்டு செல்லலாம் என்றார், விஜயகாந்த்.

தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் மூலமாக முதல்வர் கலைஞர் அவர்களிடம் சந்திக்க நேரம் பெற்று கோட்டைக்கு சென்று சந்தித்தனர். அந்த வாரம் வெளியான பகத்சிங் படத்தின் திருட்டு விசிடியைக் கூட எடுத்து சென்றிருந்தேன்.

முதல்வர் கலைஞர் அவர்கள் தயாரிப்பாளர் சங்கத்தின் கோரிகைகளை கேட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் ஒரு நாள் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு ஒரு இளைஞர் வந்தார். அவர் கே.ஆர்.ஜி.யை சந்திக்க வேண்டும் என்றார். எதற்கு என்று சொன்னால்தான் சந்திக்க அனுமதி பெற்று தர முடியும் என்றேன்.

முதலில் தயங்கிய அவன், பிறகு நடிகர் முரளி அனுப்பி இருக்கிறார் என்றான். தலைவர் கே.ஆர்.ஜி. அவர்களிடம் சென்று சொன்னதும்,  சரி, வரச் சொல்லு என்றார்.

அவன், திருட்டு வி.சிடி. தயாரிக்கும் கும்பலில் வேலை செய்து வருவதாகவும், இந்த தொழிலில் இருந்து வெளியேறுவதாகவும், அவர்களை காட்டிக் கொடுக்க உதவுவதாகவும், தனக்கு வேறு தொழில் செய்து பிழைத்துக் கொள்ள உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தான்.

உடனடியாக முதல்வர் கலைஞர் அவர்களை தொடர்பு கொண்டு, இந்த விபரத்தை கே.ஆர்.ஜி. தெரிவிக்க, இதற்காக சிறப்பு காவல் குழுவை ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார், கலைஞர்.

இரவோடு இரவாக அந்த திருட்டு வி.சி.டி. தயாரித்த குழுவையும், தயாரிக்க உதவிய கணினி பொருட்களையும் அள்ளிக் கொண்டு வந்தது, அந்த சிறப்பு காவல் குழு. ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து, மேலும் இருவரை தேடி வந்தனர்.

தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கை திருட்டு வி.சி.டி தயாரிக்கும் கும்பலுக்கு பெரிய அச்சத்தை ஏற்படுத்தியது. முதல்வருக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் தமிழ்த் திரையுலகம் சார்பில் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார் கே.ஆர்.ஜி.

இந்த நிலையில் விநியோகஸ்தர் சங்கங்கள் ஒன்றிணைந்து ஒரு புதிய வியாபார முறையை நடைமுறைப் படுத்த முடிவு செய்தனர். அது இந்த திரையுலகில் மோதலை உருவாக்க போகிறது என்பது அப்போது யாருக்கும் தெரியாது.

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...