கேபிள் டிவியில் புதிய
திரைப்படங்கள் ஒளிபரப்புவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க கோரியும், திருட்டு வி.சி.டி.
வருவதை தடுக்க கோரியும், இன்னும் பல கோரிக்கைகளோடு ஊர்வலமாக சென்று
முதல்வரிடம் மனு கொடுப்பது என்று முடிவானது.
தமிழ்த் திரைப்பட
தயாரிப்பாளர் சங்க அழைப்பை ஏற்று நடிகர், நடிகைகள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், திரைப்படத்
தொழிலாளர்கள் என பல அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
தேனாம்பேட்டை காமராஜர்
மைதானத்தில் அனைவரும் ஒன்று கூடி அங்கிருந்து ஊர்வலமாக காந்தி சிலை
வரை செல்வது என்றும், அங்கிருந்து நட்சத்திரங்களுடன், சங்கங்களின் முக்கியஸ்தர்கள்
மட்டும் மூன்று பஸ்ஸில் கோட்டைக்கு அழைத்துச் சென்று, முதல்வரை சந்திப்பது
என்றும் முடிவானது.
VIJAYKUMAR, BALAN |
எந்தவித அசம்பாவிதமும்
இல்லாமல் ஊர்வலம் வெற்றிகரமாக காந்தி சிலையை அடைந்தது. ராதாகிருஷ்ணன்
சாலையின் இருபுறமும் மக்கள் வெள்ளம் போல கூடி நின்று நட்சந்திரங்களை
பார்த்து கை அசைத்தும் ஊர்வலத்தில் வந்தவர்களை உற்சாகப்படுத்தியும்
திருட்டு விசிடியினால் வரும் பாதிப்பை உணர்ந்தவாறும் பார்த்துக்
கொண்டிருந்ததனர்.
நடிகர்கள், நடிகைகள் என திரையுலக
முக்கிய பிரமுகர்கள் அனைவரும் முன்பே திட்டமிட்டபடி காந்தி சிலையிலிருந்து
மூன்று பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்டனர். கோட்டையில் உள்ள நாமக்கல்
கவிஞர் மாளிகை பத்தாவது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் அனைவரையும்
உட்கார வைத்தோம்.
சிறிது நேரத்துக்கு
பிறகு முதல்வர் கலைஞர் அவர்கள் வந்தார். அனைவரும் எழுந்து நின்று
வரவேற்றனர்.
அனைவரையும் வரவேற்று
பேசிய முதல்வர் கலைஞர் "பெப்சி - படைப்பாளி என இரு வேறு அமைப்புகளாக
பிரிந்திருந்த நீங்கள், இப்போது ஒன்று சேர்ந்து வந்திருப்பதை பார்த்து
பெரு மகிழ்ச்சி அடைகிறேன்" என்று சொன்னவர், "இந்த
சந்தோஷத்திலும் எனக்கு ஒரு சின்ன வருத்தம் இருக்கிறது" என்று தெரிவித்தார்.
வந்திருந்தவர்கள் அனைவரும் முதல்வரை என்ன என்பது போல புரியாமல் பார்த்தார்கள்.
"இன்று காலை
ஒரு பத்திரிகை படித்த போது, அதில் ஊர்வலத்தில் முழங்க உள்ள கோஷங்கள்
என்று சில கோஷங்கள் வெளியாகி இருந்தன. அதில் அழிக்காதே அழிக்காதே
சினிமா தொழிலை அழிக்காதே என்று இருந்தது. அதை பார்த்ததும் எனக்கு
வேதனையாக இருந்தது. இந்த அரசு சினிமா தொழிலை அழிக்க நினைக்குமா"
என்று குறிப்பிட்டார் முதல்வர்.
அப்போது அங்கிருந்தவர்கள்
அனைவருக்கும் பகீர் என்று இருந்தது. எனக்கோ அடிவயிற்றில் ஏதோ உருண்டு
ஓடியது போல ஒரு நடுக்கம். அந்த கோஷங்கனை நான்தான் எழுதியிருந்தேன்.
நான் எதுவும் தப்பா எழுதவில்லையே. பிறகு எப்படி அப்படி வந்திருக்கும்
என்று உள் மனம் சொல்லியது.
அதற்குள் ரஜினி
எழுந்து தப்பா இருந்திருந்தால் மன்னிச்சுக்குங்க என்று வருத்தம்
தெரிவித்தார்.
அதே போல தயாரிப்பாளர்
சங்க தலைவர் கே.ஆர்.ஜி. எழுந்து தனது வருத்தத்தை தெரிவித்தார். பிறகு
பேசிய பாரதிராஜா "நாம வணங்கும் கடவுளை கூட என்னடா முருகா கவணிக்க
மாட்டியா" என்றுதான் கூறுவோம். அப்படித்தான் அதிகாரிகளை திட்டி
கோஷம் போட்டிருப்பார்கள். அது உங்களை பார்த்து சொன்னதாக நினைக்க
வேண்டாம்" என்று கூறினார்.
பிறகு பேசிய முதல்வர்
"என்னிடம் சொல்லியிருந்தால் நானே எழுதி கொடுத்திருப்பேனே"
என்று விளையாட்டாக சொல்லி, அங்கிருந்த இறுக்க நிலையை மாற்றி, கலகலப்போடு பேசினார்.
நாற்பது சதவீத வரியை
முப்பது சத வீதமாகவும், படங்களுக்கான அரசு மானிய தொகையை ஐந்து லட்சமாக
உயர்த்தியும், திருட்டு விசிடியை தடுக்க கடுமையான நடவடிக்கை
எடுக்கவும் உடனடியாக உத்தரவிட்டார்.
அப்போது எல்லோரது
முகத்திலும் மகிழ்ச்சியும், நிம்மதியும் தாண்டவமாடியது. எனக்கோ இவ்வளவு
பெரிய சபையில் ரஜினி மன்னிப்பு கேட்டுவிட்டாரே. தலைவர் கே.ஆர்.ஜி.
மன்னிப்பு கேட்டுவிட்டாரே என்று குழப்பம் மேலோங்கியிருந்தது.
பிறகு அந்த நாளிதழ்
செய்தியை எடுத்து ஒரு வரி விடாமல் படித்தேன். ஊர்வலம் எந்த வழியாக
செல்கிறது. யார் யார் பங்கேற்கிறார்கள் என்று விபரமாக எழுதியவர்கள், ஊர்வலத்தில் முழங்க
உள்ள கோஷத்தை கட்டம் கட்டி வெளியிட்டு இருந்தார்கள். அதில் மேலே
தமிழக அரசுக்கும், கீழே திருட்டு விசிடி காரர்களும் தனிதனியாக
எழுதிய கோஷங்களை, இவர்கள், தமிழக அரசுக்கு மட்டும் அனைத்து கோஷங்களும்
என்பது போல பிரசுரித்திருந்தார்கள். திருட்டு விசிடிகாரர்களுக்கு
என்ற வார்த்தை இல்லை. அதனால் நான் எழுதியதில் எந்த தவறு இல்லை
என்பதால் நிம்மதி அடைந்தேன்.
அலுவலகம் சென்றதும் ‘’அவ்வளவு
பெரிய சபையிலே என்னை மன்னிப்பு கேட்க வச்சிட்டியேடா’’ என்று தலைவர் கே.ஆர்.ஜி.
திட்டுவார் என்று நினைத்திருந்தேன்.
அதற்கு மாறாக, கை கொடுத்தார். அந்த
கோஷம் பற்றி அவரிடம் தெரிவித்த போது, அவர் சந்தோஷமாக
"நான் உன்னை ஒன்னும் திட்டலையேடா,. நீ கலைஞருடைய புத்தகம்
படிச்சு வளர்ந்தவன்னு என்கிட்ட சொன்னியேடா,. அவர் சிஷ்யன் நீ
...தப்பாவா எழுதுவ" என்று தட்டிக்கொடுத்தார்.
அப்படி அவர் சென்ன
வார்த்தை, இன்னும் என் நெஞ்சில் நிற்கிறது.
No comments:
Post a Comment