Sunday, April 22, 2018

18 அண்ணன் அறைந்தார்

அண்ணன் கோ.சண்முக சுந்தரம்
அண்ணனிடம் ஒரு கட்டத்துக்கு மேல் எதிர்த்து பேச முடிய வில்லை. என் வளர்ச்சியை தடுக்க அவர் நினைக்கவில்லை. ஆனால், ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தி தரவேண்டும் என்று அவர் நினைத்தார்.

சினிமாவுக்காக வாய்ப்பு தேடி ஐந்து ஆண்டுகள் அலைந்து தோல்வியோடு ஊருக்கு திரும்பிய அன்று, அவர் நடந்து கொண்டதை நினைத்து பார்த்தால், அவர் மீது பாசம் அதிகரிக்கத்தான் செய்கிறது.

நான் ஊருக்குள் சென்ற போது வீட்டு வாசலில் வேலை செய்து கொண்டிருந்த மங்கையகரசி பெரியம்மாள், என்னை யாரோ என்பது போல பார்த்தார்.

‘’பெரியம்மா நல்லா இருக்கீங்களா... ‘’ என்று நான் விசாரித்தது அவருக்கு கேட்கவில்லை.

‘’யாருப்பா’’ என்று என்னிடம் கேட்டார்.

‘’நான் தான் பெரியம்மா பாலு’’ என்று சொல்லியபடி அவரை கடந்து சென்றேன்.

‘’கேட்டுக்கிட்டே இருக்கேன். போறிய... யாரு’’ என்று திரும்ப சத்தமாக கேட்டார் பெரியம்மாள்.

அவரது சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து வெளியே வந்து எட்டிப் பார்த்த என் தங்கை ராஜலட்சுமி, என்னைக் கண்டதும் ஆச்சர்யத்துடனும், வெம்பி வெடித்த அழுகையுடனும் ‘’அண்ணன் பெரியம்மா’’ என்று கத்தினாள். 

PRO BALAN
பெரியம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை. என்னை சுத்தமாக மறந்துவிட்டார்.

‘’இவ்வளவு நாளும் எங்கே இருந்தீங்க’’ என்று உடைந்த குரலில் கேட்டபடி அழுதாள் தங்கை, ராஜலட்சுமி.

பொங்கி வரும் உணர்வை, அழுகையை அடக்க முடியாமல் அதை மறைத்துக் கொண்டு தங்கையிடம் நலம் விசாரித்து, பிறகு திண்ணைக்கு சென்று பெஞ்சு மீது அமர்ந்தேன். பெரு மூச்சு விட்டேன். நெஞ்சு விம்மியது.

நான் வந்திருக்கும் தகவல் தெருவுக்குள் தீயாய் பரவியது. சில நிமிடங்களுக்குள் தெருவில் உள்ள பலர் என்னை பார்க்க வந்தார்கள்.  பொருட் காட்சியில் பார்ப்பது போல கூடி நின்று கூட்டமாக வேடிக்கைப் பார்த்தார்கள்.

வடக்குத் தெரு சென்றிருந்த என்னுடைய அம்மா, நான் வந்திருந்த செய்தி அறிந்து ஓடோடி வந்திருக்கிறார். மூச்சிறைக்க வந்து நின்று என்னைப் பார்த்தவர், ‘’வா பாலு’’ என்று உடைந்த குரலில் சொல்லியபடி கண்களில் இருந்து திரண்ட கண்ணீரை துடைத்தார்.

அவரால் பெரும் மகிழ்ச்சியையும், துக்கத்தையும் தாங்கிக் கொள்ள முடியாது. உடம்பில் தெம்பு இல்லாததால், ஒரு கட்டத்துக்கு மேல் வெட்டு வந்து (காக்க வலிப்பு வந்த மாதிரி) இழுத்துக் கொள்வார். அப்படித்தான் தரையில் மடாரென்று விழுந்தவர், இழுப்பு வந்து இழுத்துக் கொண்டிருந்தார்.

கை, கால்களை சிலர் பிடிக்க, தண்ணீர் கொண்டு வந்து அவருக்கு கொடுத்தார்கள். சில நிமிடங்களுக்கு பிறகு பெரிய ஏப்பம் ஒன்றை விட்டு சகஜ நிலைக்கு திரும்பினார் அம்மா. பார்க்க பரிதாபமாக இருந்தது.

என்னைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அம்மாவுக்கு இப்படி இழுப்பு வந்துவிடுமாம். அங்கு நின்றவர்கள் சொன்ன போது எனக்குள் சொரேர் என்று இருந்தது. வேதனையுடன் அம்மாவைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

சைக்கிளில் வேகமாக வந்து இறங்கிய எனது அண்ணன், அதை நிறுத்தி ஸ்டாண்டு கூட போட முடியாமல், பதட்டத்தில் அப்பட்டியே விட்டு விட்டு என்னை நோக்கி விரைந்து வந்தவர், கன்னத்தில் ‘பளார் பளார்’ என்று இரு  அறை விட்டார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை.

‘’ஏம்பா அடிக்கிறே... சண்முகம்.. சண்முகம்’’ என்று சிலர் குரல் கொடுத்தனர்.

பிறகு ஒரு ஓரமாக உட்கார்ந்து முகத்தில் கை வைத்து கதறி அழ ஆரம்பித்தார்.

அடி வாங்கிய நான் அமைதியாக இருந்தேன். அவரோ அழுது கொண்டிருந்தார்.

பொங்கல் பண்டிகை நாட்களில் பொங்கல் வைத்து சாமிக்கு வணங்கிவிட்டு, பிறகு சாப்பிட மனம் இல்லாமல், ‘’என் தம்பி சோத்துக்கு எங்க நிக்குறானோ’’ என்று என்னை நினைத்து வெம்பி வெடித்து அழுது விடுவாராம்.

அதனால், அனைவரும் சேர்ந்து அழுது, பொங்கல் வீடு எலவு வீடு போல ஆகி, நிம்மதியும், சந்தோஷமும் காணாமல் போய்விடுமாம். நான் போனதில் இருந்து ஒவ்வொரு தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்களை அவர்கள் நிம்மதியாக கொண்டாடியது இல்லையாம்.

அதை ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். நான் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தேன்.

என் தந்தை இறந்த பிறகு எங்களை அடிக்காமல் வளர்த்தவர். கோபத்தை கூட காட்டியதில்லை. அப்படி எங்கள் மீது அன்பும், பாசமும் வைத்திருப்பவர் என் அண்ணன். அவர் எனக்கு நல்லது செய்து பார்க்க ஆசைப்படுகிறார்.

ஆனால், எனக்கு சினிமாதான் முக்கியம். திருமணம் என்கிற கட்டுக்குள் சென்றுவிட்டால், லட்சியத்தில் ஜெயிக்க முடியாது என்று நினைத்தேன்.

அவர் எனக்கு திருமணம் செய்து வைக்க, உறவுகளில் பெண் தேடிக் கொண்டிருந்தார். 

நான் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க, வீடு கட்டும் வேலையில் தீவிரமாக இறங்கினேன். 

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...