Sunday, April 22, 2018

25 மாமா செய்த கிண்டல்?


என்னை திருமணம் செய்து கொண்டால் அவரது தங்கைக்கு நான் வைத்திருக்கும் ஐந்து பவன் நகைகளைப் போட்டு திருமணம் செய்து வைக்கிறேன் என்று யார் சொல்லுவார்?.

அவள் அப்படி சொன்னது எனக்கு அவள் மீது மரியாதை மேலும் அதிகரிக்க வைத்தது. 

ஒரு பக்கம் வசதி இல்லாத காரணத்தினாலும், சினிமா ஆர்வம் காரணமாகவும் என்னை புறக்கணிக்கிற உறவினர். இன்னொரு பக்கம் கஷ்டத்திலும் நஷ்டத்திலும் பங்கெடுக்க தயாராக இருக்கும் ஒரு பெண்?. யார் பெரியவர்?.

மனதில் பெரிய மாற்றம் நிகழ்ந்தது. திருமணமே வேண்டாம் என்று நினைத்த எனக்கு, அந்தப் பெண்ணை சந்தித்து பேச வேண்டும் என்கிற ஆர்வம் எழுந்தது.

ஆனால், அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த அண்ணி மூலமாகவே பேச்சு வார்த்தைகள் நடந்தன.

எதுவாக இருந்தாலும் அவருடைய அண்ணன், எனது தந்தையிடம் பேச வேண்டும். திருமணம் முடிந்த பிறகுதான் அவருடன் பேசுவேன் என்று பிடிவாதமாக அவள் சொல்லிவிட்டாள்.

எனக்கு பெருமையாக இருந்தது. ஆனால், இப்படிப் பட்ட குணம் உள்ள பெண்ணை எனது அண்ணன் ஏற்றுக் கொள்ளவில்லை.

என்னுடைய மாமா முறையுள்ள ஒருவரிடம் இந்த பெண் பற்றிய தகவலை தெரிவித்து, அண்ணனிடம் பேசி இந்த சம்பந்தத்தை முடிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.

அவர் ஒரு நக்கல் பேர்வழி. சுமுகமாக முடிக்க வேண்டிய வேலையை கிண்டலாக சொல்லி கெடுத்துவிட்டார்.

‘’என்னடா? உன் தம்பி எனக்கு சகளையா வாறேங்கிறான்’’ என்று அவர் விளையாட்டாக பேசி வினையாக்கிவிட்டார்.

எனது அண்ணன் சூடேறி இருந்தார்.

வெளியில் சென்றிருந்த நான் அப்போது வீடு திரும்பி இருந்தேன். அந்த நேரத்தில் அங்கு இந்த விவாதம் ஓடிக் கொண்டிருந்தது.

‘’அந்தப் பெண்ணெல்லாம் சரிப்பட்டு வராது மாமா. நான் நிறைய வரன் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். அவன் இஷ்டப்படி பொண்ணு பாக்குறதுன்னா, நான் எதுக்கு? அவனே முடிவு செய்யட்டும்...’’ என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.

மாமா அவரை சமாதானம் பேசி அமர வைத்தார்.

அண்ணனை பொறுத்தவரை கண்ணுக்கு தெரியாமல் வசதியாக இருந்தால் அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டிருப்பார். இந்த பெண்ணோ கண்ணுக்கு தெரிந்து ஏழையாக இருக்கிறாள். அதனால் அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஆனால், அவளுக்கு நல்ல மனம் இருப்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. குதர்க்கமாகவே பேசினார். நானே தூது விட்டு பேசிவிட்டேன் என்கிற ஈகோவும் அவருக்குள் இருந்தது.

அந்தப் பெண் நம்ம குடும்பத்துக்கு வேண்டாம் மாமா என்று முடிவாக சொன்னார், அண்ணன்.  

கண்ணுக்கு தெரியாத எந்தப் பெண்ணையும் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். எனக்கு உதவுவதாக என் கஷ்டத்தில் பங்கெடுப்பதாக சொல்லும் இந்தப் பெண் தான் வேண்டும். இந்த வாரத்திற்குள் அந்த பெண்ணை பேசி எனக்கு திருமணம் செய்ய முடிவு செய்யுங்கள். இல்லை என்றால் நான் அவளை அழைத்துச் சென்று பதிவு திருமணம் செய்து கொள்வேன் என்று ஏதோ ஒரு வேகத்தில் எச்சரித்தேன்.

அண்ணன் ஆத்திரத்துடன் எழுந்து வேளியேறினார்.

நான் மண்வெட்டியை தூக்கிக் கொண்டு மாரிநகரி ஆத்தா வீட்டு வயல் பக்கம் நடையை போட்டேன்.

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...