Mr.Diamond Babu Film PRO |
ஒரு நாள் வீட்டுக்குள்
அழைத்து அமரச் சொன்னவர், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘மன்னன்’ படத்தின்
படப்பிடிப்பு செய்தியும், துவங்க உள்ள பிரபு நடிக்க இருந்த ‘நாளைய செய்தி’
படத்தின் செய்தியும் எழுதச் சொன்னார்.
அவர் சொல்ல சொல்ல நான்
எழுதினேன். பிறகு படித்துக் காட்டச் சொன்னார். படித்துக் காட்டியதும் வாங்கிப்
பார்த்தவர், நான் எழுதி இருந்த அந்த ‘முறை’ அவருக்கு
பிடித்திருந்தது. பாராட்டினார்.
பிறகு ஒரு ஆட்டோ
பிடித்து ராயப்பேட்டையில் உள்ள சிவாஜி பிலிம்ஸ் அலுவலகத்திற்கு அழைத்து சென்றார்.
அங்கு அலுவலக நிர்வாகி ‘பெரியவர்’ மாணிக்கவாசகம் அறையில் என்னை அமரவைத்தார்.
நடிகர் திலகத்தின் மூத்த மகன் திரு.ராம்குமார் அவர்களை சந்திக்க மாடிக்கு
சென்றார்.
ரஜினியுடன் ஜி.பாலன் |
சிறிது நேரத்தில்
திரும்பிய டைமண்ட் பாபு அவர்கள், என்னை அழைத்துக் கொண்டு மீண்டும் ஒரு ஆட்டோ வாடகைக்கு
பிடித்துக் கொண்டு ஆழ்வார்பேட்டை சென்றார். இப்போது நடிகர் கமல் அலுவலகம்
இருக்கும் அதே இடத்தில், அப்போது சிவஸ்ரீ பிக்சர்ஸ் அலுவலகம் இருந்தது.
அங்கு ‘நாளையசெய்தி’
படத்தின் செய்தியை காட்டி ஒப்புதல் வாங்கிக் கொண்டு, அதே ஆட்டோவில்
தினத்தந்தி, மாலைமலர், ராணி, ஹிந்து, தினமணி, ஸ்கிரீன், அதிர்ஷ்டம், தினமலர், மாலைமுரசு, தேவி, தினகரன், தினத்தூது, குங்குமம், வண்ணத்திரை, மக்கள் குரல், பேசும்படம், பொம்மை ஆகிய பத்திரிகை
அலுவலகங்களுக்கு சென்று செய்தியை வழங்கினார்.
முதலில் அவருக்கு
உதவியாளராக இருக்க வேண்டும் என்றும், நல்ல வாய்ப்பு வரும்போது உதவி இயக்குநராக
சேர்த்துவிடுவதாகவும் கூறிய அவர், ஒவ்வொரு அலுவலகம் செல்லும் போதும், இந்த அலுவலகத்தை சரியாக
பார்த்துக் கொள். இனிமேல் நீதான் எனக்கு பதில் இங்கு செய்தி கொடுக்க வரவேண்டும்
என்று தெரிவித்தார்.
எழும்பூரில் உள்ள பெரிய
ஹோட்டல் ஒன்றில் என்னை சாப்பிட வைத்து அழகு பார்த்தார். ஏன் இப்படி சொல்கிறேன்
என்றால், எனக்கு விருப்பமான உணவு கொண்டு வர வைத்து, என்னை சாப்பிட வைத்து
பார்த்துக் கொண்டிருந்தார். எந்த நேரமும் வேலை வேலை என்று ஓடும் அவர் மதிய
நேரங்களில் சாப்பிடுவதில்லையாம்.
அவர் நினைத்திருந்தால், அப்போதே கழட்டிவிட்டு, ‘நாளை வா’ என்று சொல்லி
என்னை அனுப்பிவைத்திருக்கலாம். அவர் அப்படி செய்ய வில்லை. உதவியாளரை விருப்பமான
உணவை சாப்பிட வைத்து, வேறு என்ன வேணும் என்று கேட்டு ஆர்டர் கொடுத்துக்
கொண்டிருந்தார்.
தான் சாப்பிடவில்லை
என்றாலும் உடன் இருப்பவரை பசி நேரத்தில் சாப்பிட வைக்க எவ்வளவு பெரிய மனசு
வேண்டும். மனசுக்குள் உயர்ந்து நின்றார்.
‘’வாங்க பாலன்’’ என்று
எப்படி அன்று அழைத்தாரோ, அதே அழைப்பு விசாரிப்பு இன்று இருபத்தி ஐந்து
ஆண்டுகள் ஆன பின்னும் தொடர்கிறது. செல்போனில் அழைத்தால் கூட ‘’சொல்லுங்க பாலன்’’
என்று எதிர்முனையில் கேட்பார். நல்ல பண்பாட்டுக்கு சொந்தக்காரர் திரு டைமண்ட்
பாபு.
அவர் காபி மட்டும்
குடித்தார். பிறகு ஒரு ஆட்டோ பிடித்து சாலிகிராமத்தில் உள்ள பிரசாத்
ஸ்டூடியோவுக்கு சென்றார். ஒரு ஃப்ளோரில் பிரமாண்டமான செட் அமைத்து அங்கு ரஜினியும், விஜயசாந்தியும் மோதிக்
கொள்வது போல ‘’மன்னார் மன்னனே... எனக்கு கப்பம் காட்டு நீ’’ என்கிற பாடலை நடன
இயக்குநர் டி.கே.எஸ்.பாபு நடனம் அமைக்க படமாகிக் கொண்டிருந்தது.
முதல் நாளே சினிமா
உலகிற்குள் நுழைந்துவிட்டோம் என்கிற பெருமை தாங்க முடியவில்லை. பிரமாண்ட வியக்க
வைக்கும் அரங்கு, அங்கு பரபரப்பான சூழலில் பெரிய நட்சத்திரங்கள்
நடிக்க... அடடா..
இதற்காக தானே
ஆசைப்பட்டாய் பாலா....
அதிசயத்திலும், வியப்பிலும் வேடிக்கைப்
பார்த்துக் கொண்டிருந்தேன்.
No comments:
Post a Comment