ஜி.பாலன் |
மேலும், பிரபு வேறு படத்திற்கு செல்ல இருப்பதாகவும், நாம் முதலில் முன்பணம் கொடுத்தால் நமக்கு முதலில் கால்ஷீட் கொடுப்பார்
என்றும் தெரிவித்தார்.
அன்று மாலை கே.ஆர்.ஜியின் அலுவலகத்திற்கு சென்றேன்.
என்னை அவரது அறைக்கு அழைத்த கே.ஆர்.ஜி.,
கஜேந்திரன் வந்ததையும், கதை சொன்னதையும் அவராகவே
தெரிவித்தார்.
இயக்குநர் டி.பி.கஜேந்திரனுடன் பாலன் |
பிரபு கால்ஷீட் விஷயமாக கஜேந்திரன் சொன்னதை
தெரிவித்த போது, அவரது சிறிய மீசையை வருடினார். சிறிய யோசனைக்கு பிறகு என்னை பார்த்தவர், பிறகு இருக்கையை விட்டு எழுந்து, ‘வா பாலா’ என்று நடந்தார்.
டிரைவர் ராஜமன்னார் ஓடிவந்து காரை எடுக்க,
கே.ஆர்.ஜி.யும் நானும் காரில் அமர்ந்தோம்.
சிவாஜியின் அன்னை இல்லத்துக்கு கார் சென்றது.
நடிகர் திலகத்துடன் பாலன் |
பிறகு இளைய திலகம் பிரபு வந்தார்.
‘‘பட விஷயமா முதலாளி உன்கிட்ட பேசனுமாம்’’ என்று நடிகர் திலகம் சொன்ன போது, இளைய திலகம்
தலையாட்டினார்.
சிவாஜி சார் நடிப்பில் திருப்பம்,
நேர்மை, தாய்க்கு ஒரு தாலாட்டு, பிரபு
சார் நடிப்பில் கோவலன் அவன் காவலன் போன்ற படங்களை தயாரித்திருக்கிறார் கே.ஆர்.ஜி.
சிவாஜி சாருக்கு பிரஞ்சு அரசு செலாவியே விருது
வழங்கிய போது, அதற்கு, தமிழ்த் திரையுலகம் சார்பில் பிரமாண்ட
பாராட்டு விழா எடுக்க காரணமாக இருந்தவர்களில் கே.ஆர்.ஜியும் முக்கியமனாவர்
என்பதால், அவர் மீது அதிக பாசம் நடிகர் திலகத்திற்கு உண்டு.
நடிகர் திலகத்துடன் இளைய திலகம் |
மாலை ஆறு மணிக்கு ஒயிட் ஹவுஸ் அறைக்கு திரும்பிய
போது, என் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தார் கஜேந்திரன்.
பிரபுவை சந்தித்து வந்த தகவலையும்,
கே.ஆர்.ஜியின் மகன் கங்காதரன் வந்த பிறகு நீங்களும், அவரும்
சென்று முன்பணம் கொடுக்க வேண்டி இருக்கும் என்கிற தகவலையும் அவரிடம் தெரிவித்தேன்.
மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார்
டி.பி.கஜேந்திரன்.
மறுவாரம், அலுவலகத்தில் ஒரு மாதம் கதை விவாதம் நடைபெற்றது.
அதில் உதவி இயக்குனர்கள் ராஜகோபால், ஜவகர், சண்முகவேல், மீனாட்சி சுந்தரம், அமீர்ஷாஜ், பரமசிவம், சேகர் ஆகியோருடன்
நானும் கலந்து கொண்டேன். ஒவ்வொரு காட்சியும் நன்றாக வர எல்லோருடைய ஒத்துழைப்பும்
சிறப்பாக இருந்தது.
பிரபுவுக்கு ஜோடியாக ரம்பா நடிக்க வேண்டும் என்று
விரும்பினார் கங்காதரன். தொடர்ந்து இரண்டு படங்களில் ரம்பா நடித்து விட்டதால்,
படையப்பா படத்தில் நன்றாக பெயர் வாங்கிய ரம்யா கிருஷ்ணன் நடித்தால், புதிதாக இருக்கும் என்று விரும்பினார் கஜேந்திரன்.
பிரபுவின் சகோதரியாக நடிக்க கோவை சரளா ஒப்பந்தம்
ஆனார். ஆனால், அவருடன் சேர்ந்து நடிக்க மறுத்தார் வடிவேலு. அதனால், அந்த பாத்திரத்தில் நடிக்க மணிவண்ணனை ஒப்பந்தம் செய்ய சொன்னார்
கே.ஆர்.ஜி.
நடிகர்கள் கால்ஷீட் பெறுவதும்,
படப்பிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்வதுமாக வேலைகள் தீவிரமானது.
படத்தில் பிரபுவின் வீடு முக்கியமானது. அடகு
வைக்கப்பட அந்த வீட்டை திருப்புவதுதான் கதாநாயகனின் லட்சியமாக இருக்கும். அதற்காக
பல வீடுகளை தேடி அலைந்தார்கள்.
கே.ஆர்.ஜியின் அலுவலகம் ஒரு பழைய வீட்டில்தான்
இருந்தது. அதனால், அலுவலகத்திற்கு பெயிண்ட் அடித்து, இந்த வீட்டையே காட்டிவிடலாம் என்று ஆலோசனை கூறினேன்.
பரங்கிமலை அருகே ஒரு வீடு பார்த்து முடிவு செய்த மேனேஜர்
சசி, இயக்குனரை அழைத்து சென்று காட்டினார். வாடகை அதிகம் கேட்டதாலும், சில நிபந்தனைகளின் அடிப்படையில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று கூறியதாலும், அந்த வீடு வேண்டாம் என்றார் இயக்குனர்.
கடைசியில் நான் சொன்னபடி கே.ஆர்.ஜி. அலுவலகத்தின்
வெளிப்பகுதியை தான் படத்தில் பிரபுவின் லட்சிய வீடாக காட்டினார்கள்.
அருணாசலம் ஸ்டூடியோவில் உள்ள வீட்டின் முகப்பை மாற்றி,
எதிரே பிளாட் வீடு இருப்பது போலவும், பிளாட்பாரம், கடைகள் இருப்பது போலவும் ஆர்ட் டைரக்டர் ஜி.கே. மாற்றிக்
கொடுத்திருந்தார். அதற்கு இரண்டு லட்சம் செலவு ஆனது. அங்கு முதல் நாள்
படப்பிடிப்பு துவங்கி, தொடர்ந்து நடைபெற்றது.
ஆனால், ஏ.எல்.அழகப்பன் ஆசைப்பட்ட ‘இராமநாராயணன்
100’ விழா நடைபெற வில்லை. அதே போல அவர் டி.பி. கஜேந்திரன்
இயக்கத்தில் உதயா நடிக்க இருந்த படத்தையும் துவங்கவில்லை.
கே.ஆர்.ஜியின் ‘பட்ஜெட் பத்மநாபன்’ படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருந்தது போல அப்போது, வி.சேகரின் ‘கூடி வாழ்நாதால் கோடி நன்மை’ படமும் வேகமாக வளர்ந்து
கொண்டிருந்தது. இந்த இரண்டு படங்களிலும் நான் அலுவலக மக்கள் தொடர்பாளராக பணியாற்றிக்
கொண்டிருந்தேன்.
No comments:
Post a Comment