Sunday, April 22, 2018

35 அக்காவிடம் இருந்து வந்த அதிரடி கடிதம்?

G.Balan
சென்னைக்கு வந்த அன்றே வேலை தேடும் முயற்சியில் இறங்கினேன். தெரிந்த நண்பர்களைப் பார்த்து வேலைக் கேட்டேன். உடனே கிடைக்க வழி இல்லை. முயற்சியின் தோல்வி மனதில் சோர்வை ஏற்படுத்தின.

நான் புறப்படும் போது என் மனைவி வாந்தி எடுத்தாள். அவளை அழைத்து சென்று மருத்துவரிடம் பரிசோதித்து வரலாம் என்று ஆசை. சென்னைக்கு புறப்படும் ஆர்வத்தில் மாமியார் பார்த்துக் கொள்வார் என்கிற நம்பிக்கையில் வந்துவிட்டேன். இப்போது அது மனதில் உருத்திக் கொண்டிருந்தது. மனைவியை பிரிந்து இருப்பது வேதனையாக இருந்தது. கஷ்டமோநஷ்டமோ மனைவியுடன் இருந்துவிடலாம் என்று எண்ணத்தை ஏற்படுத்தியது.

என் தம்பி நமசிவாயத்திடம் நான் ஊருக்கு செல்கிறேன் என்று சொன்னதும் அதிர்ச்சி அடைந்தான். வந்த அன்றே புறப்படுகிறேன் என்று சொன்னதும்அவனால் நம்பமுடியவில்லை. எப்பவும் சுறுசுறுப்பாக இருக்கிற அண்ணனா இப்படி சொல்கிறான் என்று யோசித்தான். 

பிறகுநான் குழப்பமான மனநிலையில் இருக்கிறேன் என்பதை உணர்ந்தவன்‘’கடைகளில் வேலை கிடைக்க வில்லை என்றால் என்ன?. நீ முதலில் ஆசைப்பட்ட சினிமா வேலையைப் போய் பாரு. மாதம் மாதம் வீட்டுக்கு நான் பணம் அனுப்புகிறேன்’’ என்று சொல்லியவாறுகையில் வைத்திருந்த பையை பிடுங்கி அறையில் வைத்தான். 

எனக்கு தவிப்பாக இருந்தது. எதையோ மிஸ் செய்துவிட்டோம் என்று படபடப்பாக இருந்தது. நிம்மதி இன்றி தவித்தேன். வேலை இல்லாமல் அடுத்தவர் பணத்தில் சாப்பிடுவது எனக்கு பிடிக்காது. மாமியார் வீடு என்றாலும் அடுத்தவர் வீட்டில் மனைவியை விட்டுவிட்டு வந்துவிட்டோம் என்று நினைத்த போதுஅழுகை பொங்கிக் கொண்டு வந்தது. என்னை நம்பி வந்தவளை கையோடு அழைத்து வந்திருக்கலாம் என்று தோன்றியது.

அக்கா வைரக்கண்ணு
கவலை கொண்ட என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த என் தம்பி’’மனசுல எதையும் நினைச்சுக்காத... போய்சாப்பிட்டுவிட்டு படு’’ என்றான். 
என் நிலையை புரிந்து கொண்ட என் சித்தப்பா மகன் ரவிபையில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்து‘’போய் படம் பார்த்துவிட்டு வாரிலாக்ஸா இருக்கும்’’ என்றான்.

மனம் ஆறுதல் அடையவில்லை என்றாலும்அறைக்கு சென்று படுத்துக் கொண்டேன்.

நான்கு ஆண்டுகள் ஊரையே நினைத்துப் பார்க்காமல்இந்த சென்னையில் இருந்த நான்இப்போது ஒரு நாள் கூட ஊரை பிரிந்து இருக்க முடியத அளவிற்கு அன்னியமானது.

இரவு தூக்கம் இல்லாமல் படுத்திருந்தேன். பல நினைவுகள் ஞாபகத்திற்கு வந்தது.

மறுநாள் எனது குருநாதர் திரைப்பட மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு அவர்களை நேரில் சென்று சந்தித்தேன்.

‘’மன்னன் படம் பிரஸ் ஷோ போட்டுவிடு... பொங்கல் கொண்டாட போறேன்னு போன நீரெண்டு வருஷம் கழித்து வந்திருக்கிறாய். ரெண்டு வருஷம் எந்த ஊர்லயா பொங்கல் கொண்டாடுவார்கள்’’ என்று கிண்டலாக கேட்டார்.

சூழ்நிலைகளை தெரிவித்தேன். என் திருமண அழைப்பிதல் கிடைத்ததை சொன்னார். பிறகு ரோஜா நடித்துதயாரித்த அதிரடிப்படை படத்தின் செய்தியை எழுதச் சொன்னார். பிரபுவின் நூறாவது படமான ராஜகுமாரன் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்றது. அங்கு பத்திரிகையாளர்களை அழைத்து செல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.

காலை ஒன்பது மணியில் இருந்து மதியம் இரண்டு மணி வரை திரு.டைமண்ட் பாபுவிடம் உதவியாளர் வேலைமதியத்திலிருந்து இரவு பனிரெண்டு மணி வரை டீ மாஸ்டர் வேலை என்று என் வாழ்க்கை மீண்டும் சென்னையில் தொடங்கியது

லாயிட்ஸ் ரோடு அருகே டீ கடை. இரவு பனிரெண்டு மணிக்கு மேல் ஜாபர்கான்பேட்டை தம்பியின் அறைக்கு செல்ல முடியாது என்பதால்மயிலாப்பூர் முண்டக்கண்ணி அம்மன் கோவில் அருகே இருந்த என் நண்பன் முரளியின் அறைக்கு சென்று தங்கிக் கொண்டேன்.

தம்பி நமசிவாயம் 
இரு இடங்களிலும் வேலை பார்க்கிற தகவலை என் மனைவிக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தேன். அவளும் பதிலுக்கு நீங்கள் நினைத்தது போலவே நான் தாயாகப் போகிறேன் என்கிற மகிழ்ச்சியான செய்தியை கடிதம் மூலம் தெரிவித்திருந்தாள்.

திருமணமாகி பத்து மாதம் ஆகிவிட்டது. நல்ல செய்தியை இவர்கள் சொல்லவில்லையே என்று எனது அம்மா வருத்தத்தில் இருந்தார். போலீஸ் அடித்ததில் படாத இடத்தில் பட்டு மகனுக்கு ஏதாவது கோளாராக இருக்குமோ என்று கூட அஞ்சினார். அதற்காக கோவில்வேண்டுதல் என்று போய்க் கொண்டு இருந்தார்.

இப்போது மருமகள் மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்ததும்அவருக்கு இருப்புக் கொள்ளவில்லை. கண்ணும் கருத்துமாக நான் அருகில் இருந்து பார்த்துக் கொள்கிறேன் என்று எனது ஊருக்கு என் மனைவியை அழைத்துச் சென்றுவிட்டார்.

நானும் மாதம் மாதம் ஊருக்கு சம்பளப் பணத்தை அனுப்பி வைத்தேன். ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் பணத்தை சேமித்தேன். இப்படி மூன்று மாதங்கள் கடந்திருக்கும். ஒரு நாள் என் அக்காவிடம் இருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அதைப் பிரித்து படித்தால்கடிதம் கிடைத்ததும் தந்தி கிடைத்தது போல பாவித்து உடனே புறப்பட்டு வரவும் என்று எழுதி இருந்தார்.

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...