Wednesday, August 5, 2015

25. பெண்ணைப் பார்க்க காத்திருந்தேன்? - ஜி.பாலன்



வேப்பஞ்சேரி முருகேசன்

பெண் தருகிறேன் என்று அவர்களே சொல்லி, அவர்களே பின் வாங்கி விட்டார்கள். அதற்கு காரணம் எனது சினிமா கனவுகள். 

அவர்களே தேர்வு செய்து அவர்களே நிராகரித்து விட்டார்கள். போட்டி போடாமலே நான் தோல்வியை சந்தித்திருந்தேன். 

அவள் மீது பைத்தியமாகவே இருந்தேன். அவளை ஒரு போதும் என்னால் மறக்க முடியவில்லை. அவள் நினைவாகவே இருந்தேன். பல நாட்கள் தவித்துப் போனேன். அதனால் நமக்கு திருமணமே வேண்டாம் என்று முடிவு செய்தேன்.

அதே போல அண்ணனிடமும் திருமணம் பற்றி இனி பேசக் கூடாது என்று முடிவுவாக சொல்லிவிட்டேன். மீறி அவர் ஜாதக பொருத்தம் பார்க்க சோதிட குறிப்பை எடுத்துச் செல்வதைப் பார்த்து கோபம் அடைந்தேன். ஒரு நாள் சோதிட குறிப்பை எடுத்துச் சென்று சுக்கு நூறாக கிழித்து குளத்தில் எறிந்தேன். 

ஆசைப்பட்ட பெண் கிடைக்க வில்லை என்று அதையே நினைத்துக் கொண்டிருக்க முடியாது. கிணத்து தண்ணீரை பயன் படுத்தாமல் இருந்தால் அது வீணாகி போய் விடும். அது மாதிரி மனதை தோல்விப் பற்றியே சிந்திக்க வைத்தால் வாழ்க்கையை வெறுக்க வைத்துவிடும் . 

அதிலிருந்து வெளியே வரவேண்டும். கால போக்கில் எல்லாவற்றையும் மறந்துவிடலாம். ஆனால், இந்த ஆசைப்பட்ட மனதை, அதிலிருக்கும் அவள் நினைவுகளை மறக்க முடியாது அது அடி மனதில் இருந்து கொண்டு அவ்வப்போது ஞாபகப்படுத்திக் கொண்டேதான் இருக்கும். மனிதனை பக்குவப் படுத்துகிற சக்தி இந்த காதலுக்கு உண்டு

என்னை யாருன்னு எனக்கு உணர வைத்திருக்கிறது இந்த அனுபவம். அதுக்காக தோற்று விட்டோம் என்று நினைக்க முடியாது. காதல் நினைவுகள் ஒரு பொக்கிஷம். அவ்வளவுதான் அது மனதை மென்மையாக  வைத்துக் கொள்ள உதவும். காதல் மட்டும் வாழ்க்கை இல்லையே?. அதை தாண்டி வாழ்க்கையில் சாதிக்க எவ்வளவோ இருக்கிறதே?

எனக்கென்று ஒரு பெண் இனிமேல் பிறக்கப் போவதில்லை. எப்பதோ, எங்கேயோ பிறந்திருப்பாள். வரவேண்டிய நேரத்தில் கண்டிப்பாக வருவாள். அதுவரை நாம் வேலையைப் பார்க்க வேண்டும் என்று மனம் ஆறுதல் சொல்லி அறிவுறுத்தியது. 

அதனால், வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். 

மாரிநகரி ஆத்தா வீட்டு வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த வேப்பஞ்சேரி மாமா, மீண்டும் தேவதானம் சம்பந்தம் பற்றி பேச ஆரம்பித்தார். 

நல்ல சம்பந்தம். விட மனசில்லை. ஒரே பொண்ணு. பத்து மா நிலத்தோடு வருகிறது. அதை ஏன் வேண்டாம் என்று சொல்கிறாய் என்று கேட்டார்.
நான் சினிமாவுக்கு செல்ல தடையாக திருமணம் இருக்கும் என்பதையும், அதனால்தான் திருமணத்தை வெறுக்கிறேன் என்றும் அவரிடம் சொன்னேன். 

அவர் விடுவதாக இல்லை. முதலில் பெண்ணைப் பார். அதன் பிறகு உனக்கு பிடித்திருந்தால் பேசுவோம் என்றார். 

அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். 

வீட்டில் வந்து பெண்ணைப் பார்க்க வேண்டாம். அந்த பெண்ணை தண்ணீர் பிடிக்க அனுப்புகிறேன். நீ அங்கு அவளை பார்த்துக் கொள். அதன் பிறகு உன் விருப்பம் என்றார். 

எப்படியாவது அந்த வரனை என் தலையில் கட்டிவைக்க முடிவு அவர் முடிவு செய்துவிட்டார் என்று நினைத்துக் கொண்டேன். 

அவர் பேச்சை தட்டிக் கழிக்க முடியவில்லை. மரியாதைக்காக அவரது பேச்சை கேட்போம். பிறகு வேண்டாம் என்று சொல்லிவிடலாம் என்று முடிவு செய்து, பிறகு அரை மனதுடன் சம்மதித்தேன். 

வீட்டிற்கு வந்ததும், என் மாமா மகன் சரவணனின் மனைவி கலா, அந்தப் பெண்ணைப் பற்றி எடுத்துச் சொன்னார். அவர்கள் இருவரும் ஒன்றாக ஊரில் படித்தவர்களாம். சிவப்பாக, சுருள் சுருள் முடியோடு அழகாக இருப்பார் என்று அந்தப் பெண்ணைப் பற்றி நல்லவிதமாக எடுத்து சொன்னார்.

ஒரு பக்கம் உறவுக்கார பெண் மனதில் இருந்து கொண்டு உயிரை வாங்குகிறாள். இன்னொரு பக்கம் சினிமா கனவுகள் லட்சியமாக மனதில் கனன்று கொண்டிருக்கிறது. வீடு வேலை எப்போது முடியும்? தங்கை திருமணம் எப்போது நடக்கும்? என்று கேள்விகளோடு இருக்கும் என்னை பெண் பார்க்க அழைத்து சென்றார் முருகேசன் மாமா. 

அந்த கிராமத்தின் துவக்கத்தில் இருந்த ஒரு வாய்க்கால் மதவு அருகே சைக்கிளை நிறுத்தச் சொன்னவர், பிறகு தூரத்தில் இருக்கும் தண்ணீர் அடிக்கும் பம்பு செட்டைக் காட்டி, அங்கு தண்ணீர் பிடிக்க பெண் வருவாள். நீ அவளைப் பார்த்துக் கொள். அந்தப் பெண்ணும் உன்னைப் பார்த்துக் கொள்வாள். என்று சொல்லிவிட்டு சைக்கிளை என்னிடம் இருந்து வாங்கி கொண்டு புறப்பட்டார்.  

மதகு மீது உட்கார்ந்திருந்தேன். மாலை நான்கு மணி முதல் ஐந்தரை மணிவரை காத்திருந்தேன். அந்த பெண் வரவில்லை. சிறுமிகளும், கிழவிகளும் தண்ணீர் பிடித்து சென்றார்கள். எவ்வளவு நேரம்தான் காத்திருப்பது என்று எழுந்து நடந்தேன். 

அவர் சொன்னது போல ஒத்த வீடாக அந்த பெண் வீடு தனித்து இருந்தது. வீட்டு வாசலில் இரண்டு கார்கள் நின்றன. அருகே நாங்கள் வந்த சைக்கிளும் நின்றிருந்தது. அந்த வீட்டைக் கடக்கும் போது ஒரு கும்பலுடன் அந்த மாமாவும் கை கழுவ வந்தார். 

எனக்கு புரிந்து விட்டது. யாரோ பெண் பார்த்து முடித்து, அதன் பிறகு பஜ்ஜி சுஜ்ஜி என டிபன் சாப்பிட்டு கை கழுவிக் கொண்டிருக்கிறார்கள் என்று. 

இனிமேல் இந்த சம்பந்தம் பற்றி மாமா பேச மாட்டார் என்று மனதிற்குள் நிம்மதி பிறந்தது. திரும்பி சென்று முன்பு அமர்ந்திருந்த மதகு மீது அமர்ந்தேன். 

அரை மணி நேரத்திற்கு பிறகு மாமா வந்தார். என்கிட்ட சம்பந்தம் பேசச் சொல்லி பல மாதம் ஆச்சு. உன் கிட்ட சொன்னா, நீ வரல. இப்போ சங்கேந்தி பையனுக்கு அந்த பெண்ணை நிச்சயம் செய்துவிட்டார்கள் என்று என் மீது கோபப்பட்டார். 

அந்த சங்கேந்தி பையன் என் நண்பன். கும்பகோணத்தில் அவனுடன் சில நாட்கள் தங்கி இருந்தேன். கொஞ்சம் முரடனாக இருந்தாலும் அவன் நல்லவன். அவனுக்கு நல்ல வாழ்க்கை அமையும் போது வாழ்த்தாமல் இருக்க முடியுமா? வாழ்க மணமக்கள் என்று மனதிற்குள் வாழ்த்தினேன்.

(என் திரையுலக வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்)

Monday, August 3, 2015

24. கண்ணீரில் பதில் கிடைத்தது? - ஜி.பாலன்



ஜி.பாலன்
தங்கை திருமணத்தை முன் வைத்தே வீடு கட்டும் வேலையில் இறங்கிய நான், என் திருமணம் பற்றி அதுவரை நினைக்காமல் இருந்தேன். இப்போது, அவள் எனக்கு இல்லை என்றதும் ஏமாற்றமும் வேதனையையும் மனதை அழுத்தியது. ஒருவித தோல்வி என்னை வாட்டி வதைத்தது. 

உண்மையிலேயே என்னதான் சொன்னார்கள் என்று அண்ணனிடம் கேட்டதற்கு, அவருக்கு ரோசம் அதிகமாகி இருந்தது. ‘’அந்தப் பொண்ணு இல்லன்னா உனக்கு வேறு பொண்ணா கிடைக்காது’’ என்று வேறு பதிலை சொன்னார். 

எனக்கு திருமணம் செய்து வைய்யுங்கள் என்று நான் கேடக்கவில்லை. அவர்கள்தானே பெண் தருகிறேன் என்று சொன்னார்கள். இப்போது ஏன் என்னை பிடிக்காமல் போனது? எனக்கு சரியான பதில் தேவை என்று கேட்ட போது அவருக்கு விடை தெரியவில்லை. ஒதுக்குகிறார்கள் என்று மட்டும் அவரால் சொல்ல முடிந்தது. 

நான் சைக்கிள் ஒன்றை எடுத்துக் கொண்டு அவள் வீட்டுக்கு பறந்தேன். கட்டிலில் குப்புற படுத்து கால்கள் இரண்டையும் மேலும் கீழும் ஆட்டியபடி படுத்திருந்த அவள். என்னைக் கண்டதும் வாரி சுருட்டிக் கொண்டு எழுந்து வீட்டுக்குள் ஓடினாள். 

மனம் கொதித்துக் கொண்டிருந்தது. வியர்வை உடம்பை நனைத்திருந்தது. கட்டிலில் அமர்ந்து வீட்டின் சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த போட்டோக்களை பார்த்து கொண்டிருந்தேன்.

பக்கத்து வீட்டில் இருந்து வந்த பெண்மணி என்னைப் பார்த்து விசாரித்தாள். அவளுக்கு என்னை தெரிந்திருந்தாலும், கால ஓட்டம் மறக்க வைத்திருந்தது. 

‘’ஓடிப் போன புள்ளையா?’’ என்று என்னை அடையாளப் படுத்திக் கொண்டு, ‘’அவுங்க ஆத்தா முத்துப்பேட்டையில் பெரிய பேத்தி வீட்டில் இருக்கிறார்’’ என்று பதில் சொன்னார். 

அவள் கை மட்டும் ஒரு செம்பை நீட்டியது. அந்த பெண்மணி செம்பை வாங்கி என்னிடம் கொடுத்துவிட்டு உள்ளே சென்றாள்.

மனம் இல்லை என்றாலும் செம்பில் இருந்த தண்ணீரைக் குடித்தேன். அவளைப் பார்க்காதப் போது எத்தனை எத்தனை சிந்தனைகள் மனதில் எழுந்து உற்சாக மூட்டின. தூக்கத்தை விரட்டி அடித்தத அந்த நினைவுகள் ஞாபகத்திற்கு வந்தன. 

அவள் சம்மதம் மட்டும் இருந்திருந்தால் அப்போதே அவளை தூக்கி சென்றிருப்பேன். அவளோடு பேசியது கூட கிடையாதே?. என்ன செய்வது? மனதில் ஏதேதோ எண்ணங்கள் எழுந்து முடிவின்றி சிந்தித்துக் கொண்டிருந்தது. 

உள்ளே சென்ற அந்த பெண்மணி திரும்பி வந்து காப்பியா? டீயா? என்று கேட்டாள். 

ஏதுவாக இருந்தாலும் பரவா இல்லை என்று பதில் சொன்னேன். 

சிறிது நேரத்தில் அவளுடைய அம்மா ஒரு கூடை நிறைய புல் கொண்டு வந்து இறக்கி வைத்தாள். 

என்னைப் கண்டதும் ‘’வாங்க தம்பி’’ என்று வரவேற்றவள், பிறகு மாட்டுக்கு புல் கிடைக்கவில்லை என்கிற ஆதங்கத்தை அந்த பெண்மணியிடம் கூறி விட்டு, என் எதிரே வந்து நின்று மற்றவர்களின் நலனை விசாரித்தாள்.

மகள் திருமணம் பற்றி அவள் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்பினேன். 

நேரடியாக பெண் தருவீர்களா என்று கேட்பதற்கு பதிலாக, எனக்கு பல இடங்களில் இருந்து வரன் வருகிறது. இன்று கூட தேவதானத்தில் இருந்து பத்து மா  பொண்ணோட பெயரில் நிலம் எழுதி வைத்து, சில்லறை நகைப் போட்டு எனக்கு கல்யாணம் செய்து வைக்கிறேன் என்கிறார்கள். 

அதனால், உங்கள் மாமியாரிடம் அதைப் பற்றி ஆலோசனை கேட்டு போகலாம் என்று வந்தேன். உங்க மாமியார் முத்துப்பேட்டை போயிருக்காராமே? என்று சொல்லி, அவரது முகத்தைப் பார்த்தேன். 

உனக்கு பத்துமா நிலத்தோடு சம்பந்தமா? என்று விழித்தவர், பிறகு ‘’அப்படியா தம்பி... நல்ல சம்பந்தமா இருந்தால் செய்யலாமே’’ என்று ஆலோசனை கூறினார்.  

‘’ஓ நீதான் சூத்தரதாரியா?’’ என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டேன்.
உள்ளே இருந்து காபி வந்தது. 

குடிக்க மனம் இல்லை. 

மரியாதைக்காக வாங்கி வைத்தேன். பிறகு கடமைக்கு குடித்தேன். இனிப்பு அதிகமாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாத பதிலால் காபி கசந்தது.
சிறிது நேரத்திற்கு பிறகு விடைபெற்று கிளம்பினேன். அடுத்த முக்கால் மணி நேரத்தில் முத்துப்பேட்டையில் இருந்தேன்.

நான் ஒரு ஓடுகாலி?

சினிமா சினிமா என்று அலைபவன்?

சென்னைக்கு சென்றவன் திரும்பி வரவில்லை என்றால் யார் பெண்ணை சுமப்பது?

அவனோ அக்காள்கள் திருமணத்தை முடித்துவிட்டு வசதியாக இருக்கிறான். இவனோ தங்கை திருமணம் நடத்த வேண்டிய சூழ் நிலையில் இருக்கிறான்?. இருக்க கூட வீடு இல்லை?

எத்தனையோ குறைகள் எடையில் தெரிந்ததால், என் உயரம் குறைந்து போனது

பெண்ணின் தாயுக்கு என் சித்தப்பார் மகனுக்கு பெண் கொடுக்க ஆசை. பெண்ணின் பாட்டிக்கு எனக்கு பெண் கொடுக்க ஆசை. போட்டியில் தாய் முடிவு ஏற்றுக் கொள்ளப்பட்டு, பாட்டி கோவத்தில் இங்கு வந்து இருக்கிறார். இதுதான் பதில் என்று அவரது கண்ணீர் மட்டுமே சொல்லியது. 

என் வீட்டு பெண் அழுதாள் என் மனம் என்ன பாடுபடும்?. அதுவரை இருந்த கோபம், அவரது கண்ணீரைக் கண்டு கரைந்து போனது.

நீங்கள் அழக் கூடாது? என்று அவருக்கு ஆறுதல் சொன்னேன். 

ஆனால், என் சித்தப்பா மகன் அவனுடைய மாமன் மகளை திருமணம் செய்து கொள்ளப் போவது அப்போது அவர்களுக்கு தெரியாது?

(என் திரையுலக வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்)

Sunday, August 2, 2015

23. என்னுள் இறங்கியவள் - ஜி.பாலன்



கிராமத்தில் தங்கி விவசாய வேலை செய்து கொண்டு, வீடு கட்டும் வேலையிலும் இருந்ததால், எனக்கு பெண் தருவதற்கு சிலர் பேசி இருக்கிறார்கள். அதில் வேப்பஞ்சேரி முருகேசன் மாமா, தேவதானம் கிராமத்தில் இருக்கும் ஒரு பெண் பற்றி அண்ணனிடம் சொல்லி இருக்கிறார். அதுப் பற்றி என்னிடமும் தனியாக அழைத்து தெரிவித்தார். 

தங்கை திருமணம் முதலில் நடக்கட்டும். அதன் பிறகு நான் சினிமாவுக்கு சென்று படம் இயக்கி வந்த பிறகே திருமணம் செய்து கொள்வேன் என்பதை தெரிவித்து, எனது தந்தை வழி உறவில் எனக்கு பெண் தருவதாக சொல்லி இருக்கிறார்கள் என்பதையும் அவரிடம் கூறினேன். 

அதற்கு அவர், ‘’உனக்கு அந்த விஷயமே தெரியாதா?. நீ சினிமா சினிமான்னு ஓடுவதால் அந்த பொண்ணை உனக்கு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். உங்க சித்தப்பார் மகன் முருகேசனுக்கு அந்தப் பெண்ணை கொடுக்க விரும்புகிறார்கள். அதனால், உனக்கு வேறு வரன் பார்க்கிறார் உங்க அண்ணன்’’ என்று பதில் சொன்னார். 

அந்த வார்த்தைகளை கேட்டதும் எனக்கு பெரிய அதிர்ச்சி. என் நெஞ்சை பிடுங்கி வெளியே வீசியது போல இருந்தது. அவரிடம் அதைக் காட்டிக் கொள்ளாமல் அங்கிருந்து புறப்பட்டேன். 

பக்கத்து கிராமத்தை சேர்ந்த என் தந்தை வழி உறவில் பிறந்திருந்தால் அவள். பார்க்க செக்க செவேல்ன்னு குள்ளமாக இருந்தாள். சிறு வயதில் என்னோடுதான் விளையாடுவாள். பள்ளிக்கு விடுமுறை விட்டால் அவள் வீட்டில்தான் நான் இருப்பேன். 

எங்க வீட்டுக்கும் அவளை அழைத்து வந்திருக்கிறேன். ஆற்றை கடக்கும் போது அவளை உப்பு மூட்டை சுமந்து வந்திருக்கிறேன். பல வருடம் பாசமாக பழகி இருக்கிறேன். சிறு வயதில் பார்த்த அவள் முகம் நினைவில் இருந்தது. பெரியவள் ஆன பிறகு எப்படி இருப்பாள் என்று கூட எனக்கு தெரியாது.


முதலில் ஊருக்கு வந்து போது, அவளை திருமணம் செய்ய வேண்டும் என்பதை மனதில் வைத்து, என்னை சென்னைக்கு செல்ல கூடாது என்று தடுத்தார் அண்ணன். 

சித்தப்பா வீட்டில் பல முறை அவர்களிடம் சென்று பொண்ணு கேட்டதற்கு, நீ எப்படியாவது எங்கே இருந்தாவது வந்து விடுவே என்று அவள் வீட்டில் பதில் சொன்னார்கள். அவர்கள் நம்பிக்கை வீண் போகவில்லை. நீ நல்லபடியாக வந்து விட்டாய். அதனால், அவளை திருமணம் செய்து முடிக்கும் வரை நீ இங்குதான் இருக்க வேண்டும் என்று என் தங்கை பிடிவாதமாக எடுத்துச் சொன்னார். 

எனது ஊரைச் சேர்ந்த வாத்தியாரைப் பார்த்த போது, அவரும் அப்படித்தான் சொன்னார்.  

என் வகுப்பில் மாணவியாக இருந்தாள். அப்போது ஒவ்வொரு மாணவியையும் அடுத்து என்ன படிக்கப் போகிறீர்கள் என்று கேட்டேன். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக பதில் சொன்னார்கள். ஆனால், அவள் பத்தாவதுக்கு மேல படிக்க மாட்டேன் என்று சொன்னாள். ஏன் என்று கேட்டதற்கு, நீ பத்தாவதுக்கு மேல படிக்கவில்லை என்று, அவளும்
படிக்க மாட்டேன் என்று சொன்னாள். அவளது பதிலைக் கேட்டு மற்ற மாணவ மாணவிகளும் சிரித்தார்கள் என்று வேடிக்கையாக சொன்னார், அவர். 

என்னையும் ஒருத்தி நினைக்கிறாளா? என்னால் நம்ப முடியவில்லை?!.

சிறு வயதில் அவளது தாய் வழி உறவினர் வீட்டுக்கு அவள் விருந்தினராக செல்லும் போது, அவளுடைய மாமன் மகன் அவளை அடித்து விட்டால், ‘’எங்க பாலு புள்ளைக்கிட்டா சொல்லி... திருப்பி அடிக்க சொல்வேன்’’ என்று சொல்வாளாம். 

‘’நீ கட்டிக்கப் போறவன்தானே அடிக்கிறான்’’ என்று அவளது மாமி முறை உள்ளவர் கேட்டதற்கு, ‘’நான் பாலு புள்ளையைத்தான் கட்டிக்குவேன்’’ என்று சொல்லி அழுது அடம்பிடிப்பாளாம். 

அதெல்லாம் அப்போது கேள்விப்பட்டது. 

ஒரு முறை அவளுடைய அக்காள் கணவனிடம் பேசிக் கொண்டிருந்த போது ‘’என்ன தம்பி... நீதான் எனக்கு சகளப்பாடியா வரப் போறியாமே’’ என்று சாடை மாடையாக கேட்டார். 

மறுபடியும் எங்கேயும் போகாமல் ஊரோடு இருங்கள் என்று சொல்லி ஒரு வெட்கம் கலந்த சிரிப்பை உதிர்த்தார் அவளுடைய தந்தை. 

இப்படி பலருடைய எண்ணமும் வெளிப்பாடும், அவள் எனக்குத்தான் சொந்தம் என்று மனதிற்குள் விழுந்தாள். 

சினிமாவில் வெற்றிப் பெற்றதும், ஒரு வெற்றியாளனாக வந்து அவளை வெகு விமரிசையாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது என் கனவு.
 
எனது சித்தப்பா மகள் கௌசல்யாவின் திருமண ஆல்பத்தில் சிறுமியாக இருந்தாள் அவள். அந்தப் போட்டோவை பிய்த்து எடுத்து மனிபார்சில் வைத்துக் கொண்டேன். 

சமோசா கம்பெனியில் இருந்த போதும், சென்னையில் பட வேலையாக இருந்த போதும் அவள் போட்டோவை பார்க்காமல் ஒரு நாள் கூட இருந்தது கிடையாது. ஒரு நாளைக்கு நாலைந்து முறைப் பார்த்து சிரித்துக் கொள்வேன். தனியாக இருக்கும் போது அந்த நிழற் படத்தோடு பேசிக் கொண்டிருப்பேன். இவளை திருமணம் செய்து கொள்ளும் போது நான் வசந்த காலத்தில் இருப்பேன் என்று நம்பியிருந்தேன். 

இப்படி ஓராண்டுக்கும் மேலாக மனதில் கலந்து என் சிந்தனையில் வாழ்ந்து கொண்டிருந்தவள், எனக்கு இல்லை என்றதும் அதிர்ச்சியாகமல் எப்படி இருக்க முடியும்

(என் திரையுலக வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்)

22. தங்கைக்கு வந்த வரன் - ஜி.பாலன்

மண்ணுக்குமுண்டான் கிராமத்தில் இருக்கும் எனது சித்தப்பா மகள்  சுசிலா, பழைய வீடு ஒன்றை வாங்கி, அந்த இடத்தில் புதிதாக ஓட்டு வீடு ஒன்றை கட்டப் போவதாகவும், பிரித்த அந்த பழைய வீட்டில் நல்ல நல்ல கம்புகள் இருப்பதாகவும் கேள்விப்பட்டு, அண்ணன் ஒரு சிறு தொகையை கொடுத்து அதை வாங்கி வந்தார். 

ஆரியலூர் மற்றும் வடசங்கந்தியில் கொஞ்சம் புதிய மூங்கி மரங்களையும்  தில்லைவிளாகத்தில் கீற்று கட்டுகளும் வாங்கி வந்து கொடுத்தார் அண்ணன். கூரை வேலை மளமளவென நடந்தது. 

அப்போது தங்கைக்கு ஒரு வரன் வந்தது. 

குன்னூரில் சொந்தமாக ஒரு ஓட்டு வீடு, பதினாறு மா நிலம், இது தவிர பைனான்ஸ் விடும் வேலை செய்யும் ஒரு பையன் இருக்கிறான். உங்களுக்கு பிடித்திருந்தால் பாருங்கள், என்று வலிவலம் வெங்கடாசலம் மாமா சொல்லி அனுப்பியதாக சொன்னார்கள். 

கிருஷ்ணமூர்த்தி பெரியப்பா தலைமையில் அந்த வாரமே மாடு வாங்குவது போல பையனையும், வீட்டையும் பார்த்து வந்தார் அண்ணன்.
எனக்கு மாப்பிளையை பிடித்திருக்கிறது. மாமியார், நாத்தினார் இல்லை. தந்தையும், மகனுமாக பொங்கி சாப்பிடுகிறார்கள். பொண்ணு கொடுத்தால் மட்டும் போதும் என்கிறார்கள். ஜாதக பொருத்தம் சரியாக இருக்கிறது.  என்று அண்ணன் சொன்னதும், எனக்கு ஒன்றும் புரியவில்லை. 

இப்படியெல்லாம் கூட நம்ம சாதியில் இருக்கிறார்களா? என்று கேள்வியை எழுப்பினேன். 

மறுநாள் பெண் பார்க்க மாப்பிள்ளை உட்பட ஐந்து பேர் ஊருக்குள் வந்தனர். 

வீடு கட்டும் வேலையில் பிஸியாக இருந்த என்னை அழைத்து சென்று மாப்பிளையிடம் பேச வைத்தார் அண்ணன். 

கல்யாணத்திற்காக ஆயிரம் பொய் சொல்வார்கள். எனக்கு பொய் சொல்ல தெரியாது. அதனால் உண்மையை சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தேன். 

எங்களிடம் கையில் பணம் இல்லை. இருந்ததை வைத்தும் கடன் வாங்கியும் வீடு கட்டிவிட்டேன். எங்களிடம் நான்கு மா நிலம் இருக்கிறது. அதில் மூன்று மா பெந்தகத்தில் இருக்கிறது.  அதை திருப்பி என் தங்கை பெயரில் எழுதி தருகிறேன். அதற்கு ஒரு வருடம் ஆகும். திருமணத்தை நீங்கள் செய்து கொள்ள வேண்டும் என்று மனதில் இருப்பதை தெரிவித்தேன். 

ஆரம்பத்தில் பதினைந்து பவுன் நகை கேட்டவர்கள், பிறகு பனிரெண்டு பவுனுக்கு இறங்கி வந்தார்கள். நான் என்னுடைய நிலையில் இருந்தேன். பதில் சொல்கிறேன் என்று சென்றவர்கள் மறுபடியும் ஒரு வருடம் கழித்துதான் வந்தார்கள்.

அதற்குள் எனக்கு திருமணமாகிவிட்டது?
அது எப்படி நடந்தது என்பதை அடுத்தக் கட்டுரையில் சொல்கிறேன். 

 (என் திரையுலக வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்)

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...