Monday, July 27, 2015

17. தாம்பரம் ஏர்போர்ட் - ஜி.பாலன்



பொங்கலுக்கு முதல் நாள் போகி அன்று உட்லண்ட்ஸ் திரையரங்கில் மாலை ஆறு மணிக்கு மன்னன் படம் பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. படம் முடிந்த பிறகு ஊருக்கு செல்வதாக இருந்தால் ’சென்று வா’ என்று குருநாதர் திரு டைமண்ட் பாபு தெரிவித்தார்.

அறைக்கு சென்று உடைகளை எடுத்துக் கொண்டு பாரிமுனைக்கு விரைந்தேன். ரயிலில் செல்வதற்கான நேரம் கடந்து விட்டது. அதனால், பஸ்ஸில் செல்லலாம் என அங்கு சென்றால், பஸ்ஸூம் கிடைக்கவில்லை. ஒவ்வொரு ஊராக சென்று மாறி மாறி செல்லலாம் என்றாலும் ஒவ்வொரு பஸ்ஸிலும் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. 

தாம்பரம் ஏர்போர்ட்டுக்கு சென்றால் விடிவதற்குள் ஊருக்கு சென்றுவிடாலாம் என்று என்னோடு பஸ் ஏற முயற்சித்துக் கொண்டிருந்தவர்கள் பேசிக் கொண்டார்கள்.

தம்பரத்தில் ஏர்போர்ட்டா?. மீனம்பாக்கத்தில் தானே இருக்கிறது?  என்று அவர்களிடம் கேட்க நினைத்தேன். 

சென்னைக்கு சரக்கு ஏற்றி வரும் லாரிகள், லோடு இறக்கிய பிறகு தாம்பரம் வழியாக செல்லும். பஸ் கிடைக்காத பயணிகள் குறைந்த செலவில் அதில் பயணம் செய்வார்கள். லாரி நிற்கும் இடம்தான் தாம்பரம் ஏர்போர்ட்.  அதனால், நானும் தாம்பரம் ஏர்போர்ட்டுக்கு சென்றேன். 

அரியலூர், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை என வெவ்வேறு ஊர்களுக்கு செல்லும் லாரிகள் வந்து பயணிகளை அள்ளி சென்றன. திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி என்று எனது ஊர் அருகில் உள்ள நகரத்திற்கு செல்லும் லாரிகள் வரும் என்று காத்திருந்ததில் ஏமாற்றமே மிஞ்சியது. அதனால், இரவு ஒரு மணிக்கு மேல், தஞ்சாவூர் செல்லும் ஒரு லாரியில் ஏறிக் கொண்டேன். 

முப்பது பேர் ஏறியதும் லாரி புறப்பட்டது. லாரியின் வேகத்தில் தள்ளாடியபடி உட்காந்திருதோம். லாரிக்குள் இருந்த தூசி முழுவதும் எழுந்து நாசியை அடைத்தது. வெள்ளை நிற சட்டை அணிந்தவர்கள் பழுப்பு நிற சட்டைக்கு மாறினார்கள். குறைந்த செலவில் செல்வது என்றால் இதையெல்லாம் அனுபவித்துதானே ஆக வேண்டும். 

லாரி கூடுவாஞ்சேரியை கடந்த போது, அங்கு ஒரு குளிர்பான பேக்டரியில் ’மன்னன்’ படத்தின் படப்பிடிப்பு நடந்தது, அங்கு பத்திகையாளர்களை ஒரு வேன் வைத்து அழைத்து சென்றுஇ சந்திக்க வைத்தது, படப்பிடிப்புக்கு வந்த சிவாஜி சாரை கண்டதும் ரஜினி சார் ஓடி வந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டது,  மரத்தில் இருந்தும் கட்டிடங்கள் மீது இருந்தும் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக படப்பிடிப்பை வேடிக்கைப் பார்த்தது என பல நினைவுகள் ஞாபகத்திற்கு வந்து சென்றன.

செங்கல்பட்டு தாம்பரம் இடையே அடிக்கடி விபத்து ஏற்படுவது அதிகமாக இருந்தது. தகவல் அறிந்து அரசு ஆம்புலன்ஸ் பறந்து வந்து அவர்களை எடுத்து செல்லும் வரை உயிருக்கு போராடுவார்களாம். சிலர் செல்லும் வழியிலேயே உயிரை விட்டிருக்கின்றனர். இந்த சம்பவங்களை அறிந்த சிவாஜி சாரின் மூத்த மகன் ராம்குமார், ரோட்டரி கிளப் 3020 தலைவராக இருந்ததால், கூடுவாஞ்சேரி அருகில் இருபத்தி நான்கு மணி நேரமும் காத்திருக்கும் ஆம்புலன்ஸ் ஒன்றை இலவசமாக வழங்கினார். அதற்கான விழாவுக்கும், பத்திரிகையாளர்கள் அழைத்து சென்றது என அந்த மாதத்தில் நடந்த பல சம்பவங்கள் மனதில் ஓடின.

’நாளைய செய்தி’ படத்தின் துவக்க விழாவுக்காக நடிகை சில்க் ஸ்மிதா வீட்டிற்கு அழைப்பிதழ் கொடுக்க சென்ற போது, “என் பேரு ஏன் போடலை பாபு’’ என்று அவர் குழந்தை குரலில் பேசியது இன்னும் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 

ஏவி.எம்.கார்டனில் ’நாளைய செய்தி’ படத்தின் துவக்க விழா பிரமாண்டமாக நடந்தது. பிரபு, குஷ்பு, இயக்குநர் ஜே.பி.விஜய், தயாரிப்பாளர்கள் சிவஸ்ரீ பிக்சர்ஸ் கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

நான் இயக்கும் படத்திற்கும் இதே மாதிரி விழா துவக்க விழா நடக்கும் என மனதிற்குள் எண்ணங்கள் எழுந்தது. ஆனால், ஊருக்கு சென்ற எனக்கு உடனே திரையுலகிற்கு வரமுடியாத சிக்கல் உருவானது. 

அதைப் பற்றி அடுத்தக் கட்டுறையில் பார்ப்போம்.

 (என் திரையுலக வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்)
 

Wednesday, July 22, 2015

16. ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டவர் - ஜி.பாலன்



பட அதிபர் அ.செ.இபராஹிம் ராவித்தர்


அ.செ.இப்ராஹிம் ராவுத்தர். 

புலன் விசாரணை, கேப்டன் பிராபாகரன், என் ஆசை மச்சான், என ஏராளமான படங்களை தயாரித்தவர். விஜயகாந்தின் நண்பர். விஜயகந்தின் வெற்றிக்காக பல ஆண்டுகள் அவரோடு இணைந்து பயணித்தவர். கஷ்ட நஷ்ட காலங்களில் அவரோடு இருந்தவர். நட்புக்கு உதாரணமாக திகழ்ந்த அந்த மாமனிதர் நேற்று காலை இயற்கை எய்தினார். 

அவரைப் பற்றி நினைக்கும் போது பல சம்பவங்கள் ஞாபகத்திற்கு வருகிறது.

நண்பருக்கு அஞசலி செலுத்தும் விஜயகாந்த்
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் திரு.கே.ஆர்.ஜி அவர்கள் தலைவராக இருந்த போது, அச்சங்கத்தின் கௌரவ ஆலோசராக இருந்தார் இப்ராஹிம் ராவுத்தர். ராவுத்தர் பிலிம்ஸ், சேரநாடு மூவி கிரியேஷன்ஸ், ஆண்டாள் அழகர் என சில பட நிறுவனங்களை உருவாக்கி பலபடங்களை தயாரித்தவர். 

தொடர்ந்து மூன்று முறைக்கு மேல் ஒரு பதவியை வகிக்க கூடாது என்கிற சூழல் எழுந்த போது, சுயநலமின்றி தயாரிப்பாளர்களுக்கு சர்வீஸ் செய்ய எந்த தயாரிப்பாளர் சரியாக இருப்பார் என்று தலைவர் திரு.கே.ஆர்.ஜி. அவர்கள் சிந்தித்துக் கொண்டிருந்த நேரம்.

தயாரிப்பாளர் சங்கத்தை பலமாக உருவாக்கிய அவர், அதற்கு சரியான தலமையை கொடுத்து செல்ல வேண்டும் என்கிற கவலையில் இருந்தார். பலரை எழுதிப் பார்த்து, கடைசியில் இப்ராஹிம் ராவுத்தரை முடிவு செய்திருக்கிறார்.  

வெளியில் சென்றிருந்த நான் அப்போதுதான் அலுவலகத்தில் நூழைந்தேன். அப்போது நான் தயாரிப்பாளர் சங்கத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக இருந்தேன். ‘’பாலா இங்கே வா’’ என்று அழைத்த திரு. கே.ஆர்.ஜி. அவர்கள், என்னிடமும் அதனைப் பற்றி விவாதித்தார். 

கடைசியில் ‘’ராவுத்தர் எப்படிடா’’ என்று கேட்டார். உங்கள் யோசனை சரியாக இருக்கும் முதலாளி என்று பதில் சொன்னேன்.

நாம் முடிவு செய்தால் மட்டும் போதாது. அவர் இந்தப் பதவியை ஒப்புக் கொள்ள வேண்டும். கடைசியில் மறுத்துவிட்டால் அந்த சமயத்தில் வேறு ஒருவரை முடிவு செய்ய முடியாது என்று அவரிடம் இதுப் பற்றி கேட்டு வர அனுப்பினார். 

நான் ராவுத்தரின் உதவியாளர், குமார் அண்ணன் அவர்களை தொடர்பு கொண்டு ‘’ராவுத்தர் சார் எங்கே இருக்கிறார்?’’ என்று விசாரித்தேன். ‘’வீட்டில் இருந்து கிளம்புகிறார். நூறடி ரோடு அலுவலகம் செல்கிறார்’’ என்று தெரிவித்தார் குமார். 

நான் ராவுத்தர் பிலிம்ஸ் அலுவலகத்திற்கு சென்றேன்.

‘’வா... பாலா’’ என்று அன்போடு அழைத்தார். 

அவரிடம் கே.ஆர்.ஜி. அவர்களின் எண்ணத்தை சொன்னேன். 

தலைமை பதவி என்பது ரொம்ப முக்கியமான பொறுப்பு. கொஞ்சம் அசைந்தால் கூட தலையில் ஏறி உட்கார்ந்து கொள்வார்கள். அனைவரையும் அனுசரித்து அன்புகாட்டி அடக்கி வைக்கும் குணம் உள்ளவர்கள்தான், அந்தப் பதவியை வகிக்க முடியும். அது என்னால் முடியாது பாலா, என்று சொன்னவர், பிறகு, ‘’அறக்கட்டளையில் என்னதான் பிரச்சனை’’ என்கிற கேள்வியை எழுப்பினார். 

அறக்கட்டளை உருவானது. அதற்கு திரு.கே.ஆர்.ஜி. திரு.கேயார், திரு.டி.ஆர்.ராமண்ணா ஆகியோர் அறங்காவலராக இருந்தது, பிறகு டி.ஆர்.ராமண்ணா மறைவுக்கு பிறகு, திரு.கே.பாலசந்தர் அவர்களை  செயற்குழுவில் தேர்வு செய்தது, நமக்கு இந்த பதவி கிடைக்கும் என்று ஆசைப்பட்டவர்கள் ஏமாந்து, குழு மனப்பான்மையோடு செயல்படுவது என அன்றைய உண்மை நிலவரத்தை சொன்னேன். 

எல்லாவற்றையும் கேட்டு தெரிந்து கொண்டவர், பிறகு சிந்தித்தார். அரை மணி நேரத்திற்கு பிறகு, ‘’தலைவரிடம் சென்று நான் சம்மதித்துவிட்டேன்’’ என்று நல்ல பதில் சொல்லி அனுப்பி வைத்தார்.

அதே போல கே.ஆர்.ஜி.க்கு பிறகு, தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்று, அவருக்கு கிடைத்த அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் செயலாற்றினார். 

அவரைப் பற்றி எழுத நிறைய அனுபவங்கள் இருந்தாலும், ராவுத்தர் என்று நினைக்கும் போதெல்லாம் தெரிவது அவரது முகமும், தர்மமும்தான். 

தி.நகர் அலுவலக வாசலில் மதியம் பனிரெண்டு மணி ஆனால் பெரும் கூட்டம் கூடிவிடும். அலுவலக வேலைகளை முடித்து விட்டு வெளியே வரும் ராவுத்தர், அங்கு இரண்டு கூடைகளில் இருக்கும் உணவு பொட்டலங்களை அந்த பசித்திருக்கும் மக்களுக்கு வழங்குவார். 

பெண்மணிகள், ஆண்கள், வேலை தேடி அலைந்து வரும் இளைஞர்கள் என அந்த ஏழைகளுக்கு அப்போதைய பசியை போக்குவார்.

சுமார் இரு நூறு பொட்டலங்கள் விநியோகமாகும். சில நேரம்  பத்தவில்லை என்றால், உடனே ஓட்டலில் வாங்கி வந்து அவர்களுக்கு வழங்க சொல்லி, அதன் பிறகே சாப்பிட செல்வார்.  மதிய நேரம் அங்கு பசியோடு வந்து திரும்பியவர்கள் இருக்க மாட்டார்கள். அப்படி மற்றவர்கள் பசியை போக்கிவிட்டு பிறகு சாப்பிடச் செல்லும் அற்புதமான மனிதர் அவர். 

சில சமயம் உதவி கேட்டு வருபவர்களுக்கு, அவர்களுடைய நிலை அறிந்து உதவுபவர். இப்படி ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்ட அந்த மனிதாபிமானி, இன்று அவருடைய அலுவலகத்தில் பேச்சு மூச்சு இன்று ஏசி பேட்டியில் படுத்திருக்கிறார்.

என்னைக் கண்டதும், ‘’வா பாலா’’ என்று உரிமையோடு அழைக்கும் அந்த பெரிய மனிதர், இன்று நான் அருகில் சென்று பார்க்கும் போது நித்திரையில் இருக்கிறார். மனம் கணக்கிறது.

 (என் திரையுலக வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்)

15. திரையுலகில் என் தாய்வீடு - ஜி.பாலன்



’கலைமாமணி’ பிலிம் நியூஸ் ஆனந்தனுடன் நான்
அன்று நடந்த அனைத்து சம்பவங்களும் கனவு போல இருந்தது. இரவு தூக்கம் வரவில்லை. காலையில் ஆரம்பித்தது முதல், இரவு திரும்பும் வரை என்ன நடந்தது என்று ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்து மனதில் அசைப்போட்டபடியே படுத்திருந்தேன். 

காலை எழுந்ததும், படப்பிடிப்பில் பார்த்த சம்பவங்களை சுவராஸ்யமாக எழுதினேன். அதை திரு.டைமண்ட் பாபு அவர்களிடம் படித்துக் காட்டிய போது, அருமையாக இருக்கிறது. இதை, நாளை மன்னன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடக்கும் போது கொடுத்துவிடாலாம் என்று கூறினார். 

சிவாஜி பிலிம்ஸ் அலுவலகத்திற்கு சென்றோம். பத்திரிகையாளர் சந்திப்பு விஷயமாக திரு.ராம்குமார் அவர்களிடம் பேசிய அவர், பிறகு திரு.ராம்குமார் அவர்களிடமும், சிவாஜி பிலிம்ஸ் குமார்  அவர்களிடமும் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்.  

பிறகு, தி.நகர் பசுல்லா சாலையில் இருந்த அன்னலட்சுமி அலுவலகத்திற்கு சென்றோம். அங்கு கார்த்திக், பானுப்பிரியா நடிப்பில் ராஜேஸ்வர் இயக்கிய அமரன் படத்தின் வேலைகள். அங்கிருந்து ராவுத்தர் பிலிம்ஸ் அலுவலகம்.
 
திரைப் படத் துறையில், மக்கள் தொடர்பாளர் என்கிற பணியை துவங்க காரணமாக இருந்தவர் திரு.பிலிம் நியூஸ் ஆனந்தன். அவருடைய மூத்த மகன் இந்த டைமண்ட் பாபு. வங்கியில் வேலைக்கு சேர்ந்தவரை, திரையுலகிறகு அழைத்து வந்தவர் திரைப்படத் தயாரிப்பாளரும், பாடலாசிரியருமான ஆபாவணன். 

திரைப்படக் கல்லூரி மாணவர்களை திரையுலகம் திரும்பிப் பார்க்க வைத்த ஊமைவிழிகள் படத்தை தயாரித்தவர் திரு.ஆபாவணன். இந்தப் படத்தில் பல தொழில் நுட்பக் கலைஞர்களை, வாரிசுகளாக அறிமுகப் படுத்தியவர், மக்கள் தொடர்பாளரும் வாரிசாக இருக்க வேண்டும் என்று திரு.பிலிம் நியூஸ் ஆனந்தன் மகனான, திரு டைமண்ட் பாபு அவர்களை மக்கள் தொடர்பாளராக ஊமைவிழிகள் படத்தில் அறிமுகப்படுத்தினார்.

ஊமைவிழிகள் படத்தில் விஜயகாந்தின் நட்பு கிடைக்க, தொடர்ந்து விஜயகாந்த் படங்கள், பிரபு, கார்த்திக் என அன்றைய முன்னணி நடிகர்கள், முன்னணி இயக்குநர்கள், முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் என, அவரது மக்கள் தொடர்பு பணி பெருகி வளர்ந்து, திரையுலகில், முன்னணி மக்கள் தொடர்பாளராக விளங்கினார். 

அவருடைய அலுவலக முகவரி போல சிவாஜி பிலிம்ஸ், ராவுத்தர் பிலிம்ஸ், கலைப்புலி இண்டர்நேஷனல் அலுவலகங்கள் இருந்தன. காலை பதினொரு மணி வரை சிவாஜி பிலிம்ஸ், மதியம் இரண்டு மணிவரை ராவுத்தர் பிலிம்ஸ் அலுவலங்களில் அவரை சந்திக்கலாம். 

தினமும் என்னுடைய வேலையும் அவரை சார்ந்து இருந்ததால், இந்த அலுவலகங்கள் திரையுலகில் என்னுடைய தாய் வீடு போல ஆனது. 

பெரும்பகுதி நேரத்தை இங்கு கழிப்பதால், அங்கு வேலைப் பார்க்கும் மேனஜர், ஊழியர், டிரைவர்கள் என்று அனைவருடனும் பேசி பழகும் வாய்ப்பு கிடைத்தது. திரையுலகையும், பத்திரிகையுலகையும் இணைக்கும் வேலை என்பதால், எனது வேலைக்கு மதிப்பும் மரியாதையையும்  அதிகமாக இருந்தது. 

ராவுத்தர் பிலிம்ஸ் அலுவலகம்தான் திரு.விஜயகாந்துக்கும் அலுவலகம். படப்பிடிப்பு இல்லை என்றால் திரு.விஜயகாந்த்தும் வந்து விடுவார். அவரைப் சந்திக்கவும், திரு.இப்ராஹிம் ராவுத்தரை சந்திக்கவும், இயக்குநர்கள் திரு ஆர்.சுந்தராஜன், திரு.ஆர்.கே.செல்வமணி, திரு.லியாகத் அலிகான் என பல இயக்குநர்கள் வருவார்கள். அப்போது வெற்றிகரமாக கேப்டன் பிரபாகரன் படம் ஓடிக் கொண்டிருந்தது.

திரு டைமண்ட் பாபு அவர்களிடம் எந்த வேலையை கொடுத்தாலும் முடியாது என்று சொல்லமாட்டார். எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார். அதனால், வேலைப் பளு அவருக்கு அதிகம் இருந்தது. 

திரையுலகில் திரு.டைமண்ட் பாபு அவர்களிடம் உதவியாளராக சேர்ந்து வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்பதை எனது தம்பி சிவாவுக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தேன். 

’’நீ இல்லாமல், தீபாவளி - பொங்கல் போன்ற பண்டிகையை பல வருடங்கள் வீட்டில் மகிழ்சியாக கொண்டாடியதில்லை. அதனால், பொங்கலுக்கு ஊருக்கு வந்துவிடு’’ என்று பதில் கடிதம் எழுதி இருந்தான் சிவா. 

பொங்கலுக்கு அமரன், மன்னன் படங்கள் வெளியாவதால், பத்திரிக்கையாளர்களுக்கு சிறப்பு காட்சி திரையிட வேண்டும். அதனால், பொங்கலுக்கு போக முடியாது என்று கூறிவிட்டார் திரு.டைமண்ட் பாபு. 

(என் திரையுலக வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்)
 

Tuesday, July 21, 2015

14.முதல் செய்தியும், முதல் படப்பிடிப்பும் - ஜி.பாலன்




Mr.Diamond Babu Film PRO
நான் நம்பிக்கையோடு வருகிறேனா? அல்லது ஆசையில் வந்து கேட்கிறேனா? என்பது போல எனக்கு தேர்வு வைத்தார் திரு.டைமண்ட் பாபு. இரண்டு முறை அவர் சொன்ன நாளில் சரியாக சென்று எதிரில் நின்றேன். 

ஒரு நாள் வீட்டுக்குள் அழைத்து அமரச் சொன்னவர், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் மன்னன் படத்தின் படப்பிடிப்பு செய்தியும், துவங்க உள்ள பிரபு நடிக்க இருந்த நாளைய செய்தி படத்தின் செய்தியும் எழுதச் சொன்னார். 

அவர் சொல்ல சொல்ல நான் எழுதினேன். பிறகு படித்துக் காட்டச் சொன்னார். படித்துக் காட்டியதும் வாங்கிப் பார்த்தவர், நான் எழுதி இருந்த அந்த முறை அவருக்கு பிடித்திருந்தது. பாராட்டினார். 

பிறகு ஒரு ஆட்டோ பிடித்து ராயப்பேட்டையில் உள்ள சிவாஜி பிலிம்ஸ் அலுவலகத்திற்கு அழைத்து சென்றார். அங்கு அலுவலக நிர்வாகி பெரியவர் மாணிக்கவாசகம் அறையில் என்னை அமரவைத்தார். நடிகர் திலகத்தின் மூத்த மகன் திரு.ராம்குமார் அவர்களை சந்திக்க மாடிக்கு சென்றார். 

ரஜினியுடன் ஜி.பாலன்
என்னைப் பற்றி மாணிக்கவாசகம் விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது சில சம்பவங்களை தனது அனுபத்தில் இருந்து எடுத்துச் சொன்னார் மாணிக்கவாசகம். உதவி இயக்குனர் வேலைக்கு மட்டும் முயற்சி செய்யாமல், பொதுஜன தொடர்பாளர் வேலையையும் கற்றுக் கொள். அது உன் வாழ்க்கைக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று ஆலோசனையாக கூறினார். 

சிறிது நேரத்தில் திரும்பிய டைமண்ட் பாபு அவர்கள், என்னை அழைத்துக் கொண்டு மீண்டும் ஒரு ஆட்டோ வாடகைக்கு பிடித்துக் கொண்டு ஆழ்வார்பேட்டை சென்றார். இப்போது நடிகர் கமல் அலுவலகம் இருக்கும் அதே இடத்தில், அப்போது சிவஸ்ரீ பிக்சர்ஸ் அலுவலகம் இருந்தது. 

அங்கு நாளையசெய்தி படத்தின் செய்தியை காட்டி ஒப்புதல் வாங்கிக் கொண்டு, அதே ஆட்டோவில் தினத்தந்தி, மாலைமலர், ராணி, ஹிந்து, தினமணி, ஸ்கிரீன், அதிர்ஷ்டம், தினமலர், மாலைமுரசு, தேவி, தினகரன், தினத்தூது, குங்குமம், வண்ணத்திரை, மக்கள் குரல் போன்ற பத்திரிகை அலுவலகங்களுக்கு சென்று செய்தியை வழங்கினார். 

முதலில் அவருக்கு உதவியாளராக இருக்க வேண்டும் என்றும், நல்ல வாய்ப்பு வரும்போது உதவி இயக்குநராக சேர்த்துவிடுவதாகவும் கூறிய அவர், ஒவ்வொரு அலுவலகம் செல்லும் போதும், இந்த அலுவலகத்தை சரியாக பார்த்துக் கொள். இனிமேல் நீதான் எனக்கு பதில் இங்கு செய்தி கொடுக்க வரவேண்டும் என்று தெரிவித்தார். 

எழும்பூரில் உள்ள பெரிய ஹோட்டல் ஒன்றில் என்னை சாப்பிட வைத்து அழகு பார்த்தார். ஏன் இப்படி சொல்கிறேன் என்றால், எனக்கு விருப்பமான உணவு கொண்டு வர வைத்து, என்னை சாப்பிட வைத்து பார்த்துக் கொண்டிருந்தார். எந்த நேரமும் வேல வேலை என்று ஓடும் அவர் மதிய நேரங்களில் சாப்பிடுவதில்லையாம். 

அவர் நினைத்திருந்தால், அப்போதே கழட்டிவிட்டு, ‘நாளை வா என்று சொல்லி என்னை அனுப்பிவைத்திருக்கலாம். அவர் அப்படி செய்ய வில்லை. உதவியாளரை விருப்பமான உணவை சாப்பிட வைத்து, வேறு என்ன வேணும் என்று கேட்டு ஆர்டர் கொடுத்துக் கொண்டிருந்தார்.  

தான் சாப்பிடவில்லை என்றாலும் உடன் இருப்பவரை பசி நேரத்தில் சாப்பிட வைக்க எவ்வளவு பெரிய மனசு வேண்டும். மனசுக்குள் உயர்ந்து நின்றார்.

‘’வாங்க பாலன்’’ என்று எப்படி அன்று அழைத்தாரோ, அதே அழைப்பு விசாரிப்பு இன்று இருபத்தி ஐந்து ஆண்டுகள் ஆன பின்னும் தொடர்கிறது. செல்போனில் அழைத்தால் கூட ‘’சொல்லுங்க பாலன்’’ என்று எதிர்முனையில் கேட்பார். நல்ல பண்பாட்டுக்கு சொந்தக்காரர் திரு டைமண்ட் பாபு. 

அவர் காபி மட்டும் குடித்தார். பிறகு ஒரு ஆட்டோ பிடித்து சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவுக்கு சென்றார். ஒரு ஃப்ளோரில் பிரமாண்டமான செட் அமைத்து அங்கு ரஜினியும், விஜயசாந்தியும் மோதிக் கொள்வது போல நடனமாடிய ‘’மன்னார் மன்னனே... எனக்கு கப்பம் காட்டு நீ’’ என்கிற பாடலை நடன இயக்குநர் டி.கே.எஸ்.பாபு நடனம் அமைக்க படமாகிக் கொண்டிருந்தது. 

முதல் நாளே சினிமா உலகிற்குள் நுழைந்துவிட்டோம் என்கிற பெருமை தாங்க முடியவில்லை. பிரமாண்ட வியக்க வைக்கும் அரங்கு, அங்கு பரபரப்பான சூழலில் பெரிய நட்சத்திரங்கள் நடிக்க... அடடா.. 

இதற்காக தானே ஆசைப்பட்டாய் பாலா.... 

அதிசயத்திலும், வியப்பிலும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 

(என் திரையுலக வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்)

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...