Monday, October 12, 2015

75. பொறந்த பொறாப்பு என்றும் விட்டுப் போகாது

சிவஞானம்,காந்திமதி, வைரக்கண்ணு,சண்முகம் 

என்னுடைய வைரப்ப பெரியப்பாவுக்கு இரு மகன்களும் இரு மகள்களும் பிறந்தார்கள். வருமானத்தை பெருக்க பெரியப்பா அடிக்கடி வெளிநாடு சென்றுவிடுவார். அதனால், பிள்ளைகளை வளர்க்க பட்டு பெரியம்மாள் அதிகம் கஷ்டப்பட்டார்.

பெரியக்கா சிவஞானத்தை மிகுந்த சிரமத்திற்கிடையில் உறவினரான ஆதிரங்கம் ராமசாமி என்பருக்கு திருமணம் செய்து கொடுத்தார். அவர்களுக்கு நான்கு மகன்களும், இரண்டு மகள்களும் பிறந்தனர். கணவனும் மனைவியுமாக இரவு பகல் பாராது கடுமையாக உழைத்தார்கள். அதன் விளைவாக வளர்ச்சியும் முன்னேற்றமும் வாழ்க்கையில் அவர்களுக்கு கிடைத்தது.

அனைவருக்கும் பன்னீர் செல்வம், தமிழ்ச் செல்வம், தாமரைச் செல்வம், கலைச்செல்வம் என செல்வமாக பெயர் வைத்து, அவர்ளை படிக்க வைத்து நல்ல செல்வ வாழ்க்கைகையை அமைத்துக் கொடுத்தார்கள். அவர்களும் சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர்.

அதே போல சின்ன அக்காள் காந்திமதிக்கு, பெரியக்காவே வரன் பார்த்து அருகில் உள்ள வடபாதி கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்கிற பாட்டாளிக்கு திருமணம் செய்து வைத்தார்.

சின்ன அக்கா காந்திமதியும் அவரைப் போலவே பாடுபட்டு கடுமையாக உழைத்து வாழ்க்கையில் முன்னேறினார். தனது கொழுந்தன் கணேசன், நாத்தினார் மகன் என பலரை வெளிநாடு அனுப்பி அவர்கள் சம்பாதிக்க உதவியாக இருந்தார்.

அக்காள் தங்கை உறவு விட்டுப் போகக் கூடாது என்று தாய் மாமன் வீட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்வது எங்களில் வழக்கம்.

அப்படி எதிர்ப்பார்து ஏமாந்து போனார் பெரிய அண்ணன் சிவராமன். அவரது மகள் ராணி, எங்க செல்லத்தை, அக்காள் தனது மகன்களில் ஒருவருக்கு எடுத்துக் கொள்வார் என நினைத்தார்.

ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்க எந்த தாயுக்குத்தான் மனம் வரும். மூத்தமகனுக்கு எப்படி வசதியாக பெண் எடுத்தாரோ, அதற்கு குறைவில்லாமல் அனைத்து மகன்களுக்கும் வரன் பார்த்து திருமணம் செய்து வைத்தார்.

அதனால் ஏழையான எங்கள் குடும்பத்தில் அவர் பெண் எடுக்கவில்லை. பெரிய அக்கா பெண் எடுக்கவில்லை என்றால் என்ன? நான் இருக்கேன் என்று உதவ முன் வந்தார், சின்ன அக்காள் காந்திமதி.

வெளிநாட்டில் இருந்து வந்த அவரது கொழுந்தன் கணேசனுக்கு, அண்ணன் மகள் ராணியை திருமணம் செய்து வைத்தார்.

உங்களுக்கு மட்டும்தான் பெரிய மனதா? எனக்கும் இருக்கிறது என்று அண்ணன் மகன் ரமேஷ், மச்சான் சுதாகர் ஆகியோரை வெளிநாட்டுக்கு அழைத்துக் கொண்டார் கணேசன்.

கூரை வீட்டில் இருந்த இவர்கள், இப்போது மாடி வீடு கட்டி உயர்ந்திருக்கின்றனர். தனது மாமனார் மட்டுமல்லாது சின்ன மாமனார் வீட்டு திருமணங்களுக்கு கூட தன்னால் இயன்ற பொருள் உதவிகளை வழங்கியிருக்கிறார் கணேசன்.

ராணி இப்போது மகா ராணியாக இருக்கிறார். எங்கள் ராணி, வெங்கடேஷ், சந்தோஷ் என இரு தங்கங்களை பெற்றேடுத்திருக்கிறது. எங்க தங்கம் பெற்ற தங்கங்கள் ’’டேய் கிழவா’’ என்று என்னை உரிமையோடு அழைக்கிறார்கள்.

ஆனாலும் பெரிய அக்காவுக்கு, சின்ன அக்கா காந்திமதி மீது கோபம் இருக்கிறது. அவர் செய்யாத உரிமையை இவர் செய்து புண்ணியம் கட்டிக் கொண்டார் என்று நாங்கள் நடந்து கொள்வதாக கோபம்.

எங்கள் மீது அன்பு காட்டி எங்களின் கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்த சின்ன அக்கா மீது நாங்களும் அதிக நன்றியோடு இருப்பதால் கூட இருக்கலாம்.

பெரியக்காவை அப்படி நாங்கள் பிரித்து பார்க்கவில்லை. அவரும் எங்க வீட்டு மகள்தான். பொறந்த பொறாப்பு என்றும் விட்டுப் போகாது. அப்படி யாரும் நினைக்கவில்லை. அவர்கள் வீட்டு மருமகள்கள் எங்களுக்கு உறவினர்கள் இல்லை.

அதனால் எங்கள் மகள் வீடு என்று உரிமையோடு அந்த வீட்டுக்கு அடிக்கடி செல்ல வாய்ப்பு இல்லை. அது ஒரு குறையே தவிர மற்றபடி பாசம் குறைந்து விடுமா என்ன?

பெரியக்கா சிவஞானம், சின்ன அக்கா காந்திமதி இருவரையும் நாங்கள் எப்படி பார்க்கிறோம் என்பதை எனது அக்காள் வைரக்கண்ணு அனுபவ ரீதியாக உணர்ந்தவர். அதனால், தனது மகன்களில் யாருக்காவது எனது அண்ணன் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்கிற எண்ணம் அவரிடத்தில் இருந்தது.

எனது அண்ணனை பிடிக்கிற அளவுக்கு என்னுடைய அண்ணியை எங்க அக்காவுக்கு பிடிக்காது. அன்பு காட்டுவதிலும், மரியாதை கொடுப்பதிலும் குறைகள் கிடையாது. அதே சமயம் அவர் எதிர்ப் பார்க்கிற மாதிரி அண்ணி நடந்து கொள்ளவில்லை என்று பெரும் குறை அவரிடத்தில் உண்டு.

என்னுடைய அண்ணி வெளியில் இருந்து வந்தவர் கிடையாது. என்னுடைய அம்மாவின் அக்காள் பேத்தி. எங்களுக்கு அக்கா மகள். இப்படி ஒண்ணுக்குள் ஒண்ணாக இருந்தாலும், அண்ணியிடம் ஒரு வாய் தண்ணீர் கூட வாங்கி அக்கா குடித்தது கிடையாது. காலம் அவரை அவருக்கு சம்பந்தி ஆக்கியது.

அதற்கு நானும், அண்ணனும், தம்பியும், தங்கையும், என் மனைவியும் இருக்கிற நம்பிக்கையே காரணம்

என் உடல் நிலைப் பற்றி விசாரிக்க அண்ணன் வந்திருப்பதை அறிந்து அக்காவும் என் வீட்டுக்கு வந்தார். நலம் விசாரிப்புகளுக்கு பிறகு குமார் - செல்வி திருமணம் பற்றிய பேச்சு ஆரம்பமானது.

என்னைப் போலவே ஏற்கனவே அக்காவும் அந்த எண்ணத்தில் இருந்ததால், எல்லாம் சுலபமானது. தம்பியிடமும் கலந்து பேசிவிட்டு நிச்சயதார்த்திற்கான நாள் குறிக்க ஏற்பாடு செய்யச் சொன்னேன்.

அதே சமயம் மாப்பிள்ளை குமாரிடமும், மகள் செல்வியிடம் திருமணம் செய்து கொள்ள விருப்பமா? என்று கேட்டப் பிறகே முடிவு செய்தேன்.

எங்கள் வீட்டு திருமணம் முடிவான போது, நான் திருவள்ளுவர் கலைக்கூடம் தயாரித்த ’நம்ம வீட்டு கல்யாணம்’ படத்தில் மக்கள் தொடர்பாளராக வேலை செய்து கொண்டிருந்தேன்.

Sunday, October 11, 2015

76. எங்க வீட்டு கல்யாணம்



ஆர்.வி.எஸ்.மாமா
என்னுடைய அம்மாவின் சின்னம்மாள் பெயர் வள்ளியம்மை. அவரை ஒதியடிக்காடு கிராமத்தில் ஆர்.வடிவேலு என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார் எனது தாத்தா. அவர்களுக்கு வைத்திலிங்கம், பக்கிரிசாமி, சுப்பிரமணியன் என்கிற மூன்று மகன்களும், மருதாம்பாள் என்கிற ஒரு மகளும் பிறந்தனர்.

வேலைக்காக எங்களுடைய வடசங்கந்தி கிராமத்திற்கு குடும்பத்தினருடன் வந்துவிட்டார் வடிவேலு. 

என்னுடைய அப்பாவின் தம்பி அரிகிருஷ்ணன். அவருக்கு எனது அம்மாவின் சின்னம்மாள் மகளான மருதம்பாளை திருமணம் செய்து கொடுத்திருந்தனர். அக்காவும், தங்கையும் அண்ணன், தம்பிக்கு வாக்கப்பட்ட மாதிரி.

என்னுடைய சித்தப்பாவிற்கு கௌசல்யா, சுசீலா என்று இரு மகள்களும், முருகேசன், வைரமூர்த்தி என்று இரு மகன்களும் பிறந்தனர்.

இதில் கௌசல்யாவை தனது மைத்துனரான சுப்பிரமணியனுக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார் எனது சித்தப்பா அரிகிருஷ்ணன்.  அதாவது அக்காள் மருதாம்பாள் மகளையே சுப்பிரமணியன் திருமணம் செய்து கொண்டார்.

எங்களில் முதலில் டிகிரி படித்தவர் சுப்பிரமணியன். அவரது படிப்பும், அதன் மூலம் கிடைத்த நட்பும் அவரை உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றது. அவருக்கு நீதித் துறையில் நீதி மன்றத்தின் நிர்வாக வேலை கிடைத்தது. திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நாகப்பட்டினம் போன்ற நீதி மன்றங்களில்  வேலைப் பார்த்திருக்கிறார் அவர்.

குமார் - செல்வி
அவருக்குள் இரு பெரும் கனவு உண்டு. ஒன்று, தனக்கு கிராமத்தில் சொந்தமாக ஒரு மாடி வீடு கட்ட வேண்டும். இன்னொன்று தினமும் வழிப்படுகிற விநாயகருக்கு கட்டிடம் கட்டி அதில் சிலையை வைத்து வழிபட வேண்டும்.

காலம் அவர் விரும்பியதை செய்ய வைத்தது. அதிக பொருட் செலவில் கிராமத்தில் மாடி வீடு ஒன்றை கட்டி முடித்தார்.
அதே போல ஊர் மக்கள் ஒத்துழைப்போடு கீற்று கொட்டகையில் இருந்த விநாயகரை கட்டிடம் எழுப்பி அதில் வைத்து வணங்கி அழகு பார்த்தார்.

மாடி வீடு கட்டி குடி போகிற அன்று, எனது அக்காள் மகன் குமார் – அண்ணன் மகள் செல்வி திருமணத்தை நடத்த வேண்டும் என்று அவர் விரும்பினார்.

சித்தப்பா, சின்னம்மா, அக்கா, மாமா, தம்பி,  அக்கா மகள் 
காலையில் வீடு கிரக பிரவேஷத்திற்கும், மாலையில் அந்த வீட்டு வாசலில் நடைபெறும் திருமணத்திற்கும் உறவினர்கள் வந்திருந்து மகிழ்ந்து செல்வார்கள் என்கிற தனது ஆசையை வெளிப்படுத்தினார்.

மாமாவின் ஆசை எனக்கு பிடித்திருந்தது. முதல் முதலாக கட்டிய வீட்டில் ஒரு நல்ல காரியாம் முதல் நாள் அன்றே நடக்க வேண்டும் என்று விரும்புகிறார். அது பெரிய மகிழ்ச்சி. இன்னொன்று என் தந்தை அந்த இடத்தில்தான் உயிர்விட்டார். அவர் சுவாசம் வெளியேறிய அந்த இடத்தில் திருமணம் செய்து வைப்பது எனக்கு கிடைத்த பெரும் வாய்ப்பாக கருதினேன்.

அண்ணனிடமும், அக்காவிடமும் இதுப் பற்றி ஆலோசனை செய்தேன். அ.தி.மு.க. கட்சியில் ஒன்றிய அளவில் பிரபலமாகி இருந்தார் அண்ணன் சண்முகம். அதனால், ஒன்றிய அளவில் அ.தி.மு.க. பிரமுகர்கள் கலந்து கொள்ளும் விழாவாக நடத்த வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்தார்.

மாமா தி.மு.க., அண்ணன் அ.தி.மு.க. இரு பிரிவுகள் ஆரம்பத்திலே இருந்தது. அதனால், முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல அந்த இடத்தில் திருமணம் நடத்துகின்ற முடிவு மாறிப் போனது.

எனக்கு, என் தங்கைக்கு, என் தம்பிக்கு எடையூர் வெங்கடாஜலபதி கோவில் திருமண அரங்கில் திருமணம் செய்தது போல, இந்த திருமணத்தையும் அங்கு நடத்த முடிவு செய்தேன்.

அண்ணனின் விருப்பபடி அவர் அழைப்பது போல ஒரு அழைப்பிதழும், அக்காள் குடும்பத்தினர் அழைப்பது போல ஒரு அழைப்பிதழும் என இரு அழைப்பிதழ்கள் அச்சடித்து வழங்கப்பட்டது.

அக்காள் குடும்பம் சென்னையில் வசித்ததால் சென்னையில்தான் வீடு இருந்தது. முதல் அழைப்பு, மூன்றாம் நாள் அழைப்பு போன்ற சம்பிரதாயங்களை நடத்த சென்னைக்கும், கிராமத்திற்கும் அலைய முடியாது என்பதால், அழைப்பு சம்பந்தமான வேலைகளை சென்னையில் என் வீட்டில் வைத்துக் கொள்வது என்றும், திருமணம் முடிந்ததும் அன்று இரவே ரயிலில் சென்னை திரும்புவது என்றும் முடிவு செய்து அனைவருக்கும் டிக்கெட் முன்பதிவு செய்து வைத்திருந்தேன்.

6.6.2002 அன்று மாலை நான்கு மணிக்கு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஆர்.கே.பி.விஸ்வநாதன் தலைமையில் திருமணம் நடைபெற்றது. வெகு விமர்சையாக நடந்த அந்த திருமண விழாவுக்கு உறவினார்கள், நண்பர்கள், கிராமத்தினர் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அனைவரையும் சாப்பிட வைத்து சென்னைக்கு வருபவர்களை அவரசரப்படுத்தி அழைத்து வந்து சேர்ப்பதற்குள் எனக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.

எனது தம்பி, தம்பி மனைவி, என் மனைவி என எல்லோரும் இந்த விழாவுக்கு பெரும் ஒத்துழைப்பு கொடுத்தனர். நான் சொன்ன வேலைகளை செய்து கொடுத்தனர். இரு குடும்பத்தினருக்கும் பொது ஆளாக நின்று எந்த குறையும் இல்லாமல் வேலை செய்தேன்.

ஆனால், மாமா ஆர்.வி.எஸ். நினைத்தது போல அவரது வீட்டு வாசலில் திருமணம் நடத்த முடியவில்லை. என் மீது பாசமும், மரியாதையும் கொண்டவர் அவர்.

வீடு மாறி இருந்தால் என் தந்தை பிழைத்துக் கொள்வார் என்று எங்கள் வீட்டை விட்டு வந்து, எனது ஆத்தா வீடு சாய்ப்பில் குடி இருந்தார் அம்மா. ஒரு வருடத்திற்கு பிறகு எனது தந்தையின் உயிர் அங்குதான் போனது.

அதே போல அத்தனை பெரிய வீட்டைக் கட்டிய, என் மாமாவை என் வீட்டில் உயிரை விட வைத்தது காலம். இதை என்னவென்று சொல்வது?

கிராமத்தில் இருந்த போது தினமும் விநாயகரை வழிபட்டு வேலைக்கு செல்வார் என் மாமா.

இப்போது சிரித்துக் கொண்டிருக்கும் ஆர்.வி.எஸ்.. மாமாவின் நிழற்படத்தை தினம் பார்த்து, ‘’வேலைக்கு செல்கிறேன் மாமா’’ என்று கூறிவிட்டு செல்கிறேன்.

வாழ்க்கை பயணம் எத்தனையோ அனுபவங்களை நமக்கு கற்றுக் கொடுக்கிறது.

Thursday, October 8, 2015

77. நம்ம வீட்டு கல்யாணம்

ஜி.பாலன்

திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பில் கே.பார்த்திபன் தயாரித்த படம், ‘நம்ம வீட்டு கல்யாணம்’. இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, மக்கள் இயக்குநர் வி.சேகர் இயக்கினார்.

இந்தப் படத்தில் கதாநாயகனாக ரவி என்கிற கதாபாத்திரத்தில் முரளி நடிக்க, கதாநாயகியாக மீனா என்கிற கதாபாத்திரத்தில் மீனா நடித்தார். செங்கல்வராயன் என்கிற பாத்திரத்தில் வடிவேலு நடிக்க, கோபி என்கிற பாத்திரத்தில் விவேக் நடித்தார். வடிவேலுவுக்கு ஜோடியாக சோனியா, விவேக் ஜோடியாக விந்தியா நடிக்க, மேலும், மனோரமா, லிவிங்ஸ்டன், ராஜீவ், சிந்து, அம்மு, பிரமிட் நடராஜன், ஆர்.சுந்தராஜன், குமரிமுத்து, அனுமோகன், பாண்டு, அஜய்ரத்தினம், மதன்பாப் உட்பட பலர் நடித்தனர்.

இந்தப் படத்திற்கு கவிஞர் அறிவுமதி, பழனிபாரதி, பா.விஜய், தாமரை, கலைக்குமார் ஆகியோர் பாடல்கள் எழுத, இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்தார். ‘மின்னுது மின்னுது’ பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்ரா இருவரும் பாட, ‘என்னடி...’ பாடலையும், ‘நாட்டு சக்கர’ பாடலையும் மனோ பாடி இருந்தார். ‘ஒதடு ஒதடு’ பாடலை கார்த்திக் பாட, ‘வானம் விட்டு’ பாடலை ஸ்ரீநிவாஸ், சுவர்ணலதா இருவரும் இணைந்து  பாடி இருந்தனர். இந்த பாடல்களுக்கு லலிதா மணி, சிவசநகர் நடனம் அமைத்திர்ந்தனர்.

இயக்குனர் வி.சேகர் எம்.ஏ.
பி.எஸ்.செல்வம், ஆர்.மகேந்திரன் இருவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்ய, சண்டைக் காட்சிகளை ஜாகுவார் தங்கம் கவனித்தார். கே.ஏ.பாலன் கலை இயக்குனராகவும், ஏ.பி.மணிவண்ணன் எடிட்டராகவும் பணியாற்ற, கே.தனசேகர், கலைச்செல்வன், கே.ஜீவா மூவரும் திரைக்கதை மற்றும் வாசன உதவியாளர்களாகவும், கே.ஆர்.ராஜா, கே.வைரமணி இணை இயக்குனர்களாகவும், தமிழன், முருகன் ஆகியோர் உதவி இயக்குனர்களாகவும் பணியாற்றினார்கள்.

அலுவலக மக்கள் தொடர்பாளராக நானும், மக்கள் தொடர்பாளராக நெல்லை சுந்தரராஜனும், டிசைனராகவும் மேக்ஸ் பணியாற்ற, ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு துவங்கியது.

ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் பல காட்சிகளையும், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில், விஜிபி போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. ‘‘அந்த வானம் விட்டு வந்த.... ஒரு வானவில்லும் நீ தானே...’’ பாடலை கொடைக்கானலில் படமாக்கினார்கள்.

நம்ம வீட்டு கல்யாணம் - மீனா, வடிவேலு, விந்தியா, விவேக், முரளி 
கொடைக்கானலில் பாடல் காட்சியில் முதல் நாள் நடித்த கதாநாயகன் முரளி, மறுநாள் சொல்லிக் கொள்ளாமல் சென்னைக்கு சென்றுவிட்டார். அவர் படப்பிடிப்பு தளத்திற்கு வருவார் என்று காத்திருந்த படக்குழு, அவர் வரமாட்டார் என தெரிந்த பிறகு, மீனா மற்றும் நடனக்குழுவினர் ஆடிய காட்சிகளை மட்டும் எடுத்துக் கொண்டு சென்னை திரும்பியது.

தனது தவறுக்கு முரளி வருத்தம் தெரிவிக்கும் அளவிற்கு இயக்குனர் வி.சேகர் ஒரு கடிதம் எழுதினர். அந்த கடிதத்தை படித்து ஆடிப்போன முரளி, பிறகு ஒரு நாள் தேதி கொடுக்க, அந்த காட்சிகளை செங்கல்பட்டு அருகே உள்ள மலைகளில் படமாக்கி முடித்தார், இயக்குனர் வி.சேகர்.

2002 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், 27 ஆம் தேதி வெளியானது, நம்ம வீட்டு கல்யாணம்.  

இந்தப் படம், சத்யராஜ் நடித்த மாறன், புதுமுகங்கள் நடித்த ஆஹா எத்தனை அழகு ஆகிய இரு படங்களையும் எனக்கு பெற்று தந்தது. அந்த அனுபவங்களை அடுத்தக் கட்டுரையில் சொல்கிறேன்.


என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...