Sunday, August 23, 2015

42. தயாரிப்பாளரின் கோபமும், தயாரிப்பாளர் சங்கத்தின் அங்கீகாரமும் – ஜி. பாலன்

ஜி. பாலன் 
அந்த காலகட்டத்தில் திரைப் படங்கள் அவுட் ரைட், அல்லது எம்.ஜி. முறையில் திரையிடப்பட்டன. அதற்கு எந்தப் பிரச்சனையும் பெரிதாக இருந்ததில்லை. ஆனால், விநியோக முறையில் திரையிடப்பட்ட படங்களுக்கு பெரும் பிரச்சனை இருந்தது.

தயாரிப்பாளரின் முந்தையப் படம் பற்றிய வரவு செலவு கணக்குகளை உடனுக்கு உடனே தீர்த்து கொள்ளாமல் இருக்கும் தயாரிப்பாளர்கள், அடுத்தப் படத்தின் வெளியீட்டின் போது வினியோகஸ்தரின் பழைய பாக்கியை செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகிவிடுவார்கள்.

பாக்கி தொகையை படம் துவங்கும் போது சொல்லமாட்டார்கள். படம் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகும் போது தெரிவிப்பார்கள். அதனால், ஒவ்வொரு மாவட்ட விநியோகஸ்தர் சங்கத்திற்கும் கடைசி நேரத்தில் நேரில் சென்று பிரச்சனையை தீர்த்துக் கொள்ள வேண்டிய நிலை தயாரிப்பாளர்களுக்கு இருந்தது. இல்லை என்றால், அந்தப் படத்திற்கு ரெட் என்கிற தடை நடைமுறையில் இருந்தது.'

படம் பெற தியேட்டர் அதிபர்களும், படம் வெளியிட தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தகளை நம்பியே இருந்தனர். அதனால், திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கங்கள் ஒவ்வொரு சினிமா மாவட்டத்திலும் வலிமையாக இருந்தன.

தயாரிப்பாளர் - விநியோகஸ்தர் பிரச்சனையை சுமுகமாக தீர்த்து வைக்க படத் தயாரிப்பாளர், தயாரிப்பாளர் சங்கத்திற்கு வர வேண்டும். அதற்கு தயாரிப்பாளர் சங்கம் துணை நிற்கும் என்று தெரிவித்தார் தலைவர் கே.ஆர்.ஜி.

அதே போல, ஒவ்வொரு மாவட்ட விநியோகஸ்தர் சங்கங்களுக்கும் கடிதம் அனுப்பி, தமிழ்ப் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மூலமாகவே பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.

உண்மையாக சொல்வதென்றால் பணம் போட்டு படம் தயாரிக்கும் படத் தயாரிப்பாளர்களுக்கு மரியாதைக் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் கூப்பிட்டு அவர்களை அடிக்காதீர்கள் என்கிற மாதிரியான வேண்டுகோள், அது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வலிமை பெறுவதற்கு முன் அப்படிபட்ட நிலை தாயாரிப்பாளர்களுக்கு இருந்தது என்பதை கண் கூடாகப் பார்த்திருக்கிறேன்.

வேறு ஒருவருக்கு படத்தை விற்றதால், முன்பு படம் வாங்கிய விநியோகஸ்தர்,  மதியம் இரண்டு மணிக்கு ஒரு தயாரிப்பாளரை அவரது அலுவலகத்தில் துணைக்கு வந்த ஆட்களை வைத்துக் கொண்டு அடித்திருக்கிறார். அவர் சங்கத்திற்கு அழுது கொண்டு போன் செய்ததும், உடனடியாக நான் தலைவர் கே.ஆர்.ஜி. கவனத்திற்கு கொண்டு செல்ல, அவர் அதிரடியாக இறங்கி நடவடிக்கை எடுத்தார். அதே போல நிதி உதவி செய்தவர்கள் மிரட்டல், அடி, உதைகள் என பல துன்பங்களை பல தயாரிப்பாளர்கள், அனுபவித்திருக்கிறார்கள்.

நடிக்க முன் பணம் வாங்கிக் கொண்டு கால்ஷீட் கொடுக்காத சில நடிகர், நடிகைகளால் தயாரிப்பாளர்கள் கஷ்டத்திற்கு ஆளானார்கள். அதனால், தயாரிப்பாளர்களுக்கு உதவியாக அவர்களுக்கு பாதுகாப்பு கேடயமாக தயாரிப்பாளர் சங்கத்தின் செயல்பாடு இருக்க வேண்டும் என்று கருதினார் கே.ஆர்.ஜி.

பல வெற்றிப் படங்களை தயாரித்த ஒரு தயாரிப்பாளர் இறந்த போது, அவரது இறுதி காரியத்திற்கு செலவுக்கு பணம் இல்லாமல் இருந்ததை நேரில் கண்டு வேதனைப்பட்டிருக்கிறார். அதனால், தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் தயாரிப்பாளர் சங்கம் இருக்க வேண்டும் என முடிவு செய்தார்.

அப்போது தயாரிப்பாளர் சங்கத்தில் நூற்றி எழுபது உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். அதில் சில உறுப்பினர்கள் சந்தா செலுத்தாமல் கூட இருந்தனர். அதனால், உறுப்பினர் ஆகாமல் வெளியே தமிழ்ப் படம் எடுக்கும் அனைத்து தயாரிப்பாளர்களையும் சங்கத்தில் சேர்க்க வேண்டும் என்று என்னை தினமும் விரட்டினார்.

ஆயிரம் ரூபாய் நன்கொடை, இரு நூறு ரூபாய் ஆண்டு சந்தா, நூறு ரூபாய் நுழைவு கட்டணம் என ஆயிரத்து முன்னூறு ரூபாயில் உறுப்பினர் சேர்க்கை இருந்தது. விண்ணப்ப படிவங்களை கையில் வைத்துக் கொண்டு, படத் துவக்க விழா, பாடல் வெளியீட்டு விழா, பட அலுவலகங்கள் என்று நேரம் காலம் பார்க்காமல் ஓடினேன்.

சிலர் சேர்ந்து கொண்டானர். சிலர் விவாதித்தனர். சிலர் கிண்டல் செய்தனர். சிலர் ஏளனம் செய்தனர். சிலர் ஆயிரத்து முன்னூறு ரூபாய்க்காக பல முறை அலையவிட்டனார். முயற்சிகள் வெற்றி பெரும் என்கிற ஒரே இலக்கோடு ஓடு ஓடு என்றார் விரட்டினார் கே.ஆர்.ஜி.

ஒரு நாள் மதியமே திரும்பி வந்துவிட்டேன்.  ‘’என்ன பாலா... இன்னைக்கு எத்தனைப் பேரைப் பார்த்தே?... ‘’ என்று கேட்டார்,

நான் ஒரு தயாரிப்பாளரிடம் டோஸ் வாங்கி வந்த தகவலைச் சொன்னதும், அதிர்ந்து போனார்.

தயாரிப்பாளர் சங்கம் ஒரு லெட்டர் பேடு சங்கம். அங்கு உறுப்பினராகி என்ன பயன்? படத்திற்கு பெயர் வைத்து பதிவு செய்து சென்சார் கிளியரன்ஸ் பெறுவது என்றால் கூட, பிலிம் சேம்பருக்கோ, கில்டு அமைப்புக்கோதான் செல்ல வேண்டும். அதனால் அவர்களை பகைத்துக் கொண்டு தயாரிப்பாளர் சங்கத்தில் ஏன் உறுப்பினராக வேண்டும் என்பதை கடுமையான வார்த்தைகளால் அந்தத் தயாரிப்பாளர் அர்ச்சனை செய்திருந்தார். அதை அப்படியே சொன்னேன்.

அந்தத் தயாரிப்பாளர் கேட்பதில் நியாயம் இருப்பதை உணர்ந்த தலைவர் கே.ஆர்.ஜி. அவர்கள், உடனடியாக செயற்குழு கூட்டத்தை கூட்டி, அதற்கு தீர்வுகான முயன்றார்.

மூத்த உறுப்பினர் திரு.முக்தா சீனிவாசன் அவர்களை சங்க செலவில் டில்லிக்கு அனுப்பி வைத்து, மத்திய தகவல் மற்றும் செய்தி ஒலிபரப்பு துறை அமைச்சகத்தில் பேச வைத்தார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மூலமாக வரும் பதிவு செய்த படப் பெயர் கடிதம், மற்றும் பப்ளிசிட்டி கிளியரன்ஸ் சான்றிதழ் பெற்றுக் கொண்டு படங்களை தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கும் படி மத்திய தணிக்கைக் குழுவுக்கு உத்தரவிட காரணமாக இருந்தார்.

இந்த உரிமைக்கான முயற்சியும், வெற்றியும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு பெரிய அங்கீகாரமாக இருந்தது. இதை எதிர்பாராத மற்ற அமைப்புகள் ஆடித்தான் போயின.

தயாரிப்பாளர் சங்கத்தில் வேலைக்கு சேர்ந்த அன்று என் மகன் பிறந்தான். அதனால் அன்றே விடுமுறை கேட்க நான் விரும்பவில்லை. உதவி இயக்குநராக ஆர்.கே.செல்வமணியிடம் சேர வேண்டும் என்று நினைத்த நான், மகன் பிறந்து விட்டான். வருமானம் வேண்டும் என்று உதவி இயக்குநர் எண்ணத்திற்கு அப்போது மூட்டைக் கட்டி வைத்தேன்.

தயாரிப்பாளர் சங்கத்தில் நான் கேட்காமலே வேலை கிடைத்திருக்கிறது. அதனால், இப்போது வேலையைப் ஒழுங்காக பார்ப்போம், என்று முடிவு செய்தேன்.

முப்பதாவது நாள் என் மகனுக்கு பெயர் வைக்க முடிவு செய்திருந்தார் அண்ணன் சண்முகம். இப்போதாவது மகனைப் பார்க்க வருவியா என்று கோபப்பட்டார்.

(என் திரையுலக வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்)


Friday, August 21, 2015

41.தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும், நானும் – ஜி. பாலன்

தலைவர்.கே.ஆர்.ஜி.. 
பிலிம் சேம்பர் வளாகத்தின் பின்புறம் அமைந்திருந்த ஒரு பழைய கட்டிடத்தில், மலையாள திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், சேப் யூனியன் ஆகிய சங்கங்களின் அலுவலகங்கள் வரிசையாக இருந்தன.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் உள்ளே, தலைவர் அமர்வதற்கு ஒரு மேஜை நாற்காலியும், ஒரு மடக்கு சோபாவும், மேனேஜருக்கு ஒரு மேஜை, நாற்காலி மட்டுமே இருந்தன.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக கே.ஆர்.ஜி. அவர்கள் வெற்றி பெற்றதும், அவருடன் பொருளாளராக பதவிக்கு வந்திருந்த மறைந்த தரங்கை சண்முகம் அவர்கள், தனது சொந்த செலவில் அலுவலகத்தை வெள்ளை அடித்து, வவுச்சர் மற்றும் ரசீது புத்தகங்களை அச்சடித்து கொடுத்திருந்தார்.

செயலாளருக்கு ஒரு மேஜை நாற்காலியும், செயற்குழு கூட்டம் நடத்த வசதியாக இருபத்தி நான்கு பிளாஸ்டிக் நாற்காலிகளும் அப்போது புதிதாக வாங்கப்பட்டன.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக கே.ஆர்.ஜி. பதவிக்கு வந்த போது, அவரைப் பற்றிய செய்திகளை வெளியிடுவதற்காக எனது குருநாதர் டைமண்ட் பாபு சங்க அலுவலகத்திற்கு செல்வார். அவருடன் நானும் சென்று வருவேன். பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்து மறுநாள் செய்தி வெளிவந்த பத்திரிகைகளை எடுத்துச் சென்று கே.ஆர்.ஜியிடம் காண்பித்து வரவேண்டும். அப்படித்தான் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் எனக்குமான தொடர்பு இருந்தது.

கே.ஆர்.ஜி. பற்றிய செய்தி வந்த ஒரு ஆங்கில வார இதழை எடுத்துக் கொண்டு தயாரிப்பாளர் சங்கம் சென்ற போது, திரு.டைமண்ட் பாபு அவர்களை உடனே தொலைபேசியில் அழைக்க சொன்னார் கே.ஆர்.ஜி
.
மும்பை மற்றும் டில்லியில் ராஜமுத்திரை படத்தின் படப்பிடிப்புக்காக லொக்கேஷன் அனுமதி பெற டைமண்ட் பாபு அவர்கள் சென்று இருப்பதை அவரிடம் தெரிவித்தேன்.

தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர கூட்டமும், அதனை தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பும் நடத்த முடிவு செய்திருந்தார் கே.ஆர்.ஜி.
சிறிது நேரம் யோசித்தவர், ‘பத்திரிகையாளர் கூட்டத்திற்கு நீ ஏற்பாடு செய் என்று கட்டளையிட்டார்.

குருநாதர் இல்லாமல் பத்திரிகையாளர் கூட்டத்திற்கு நான் ஏற்பாடு செய்வதா?: என்று  தயங்கினேன். ஆனால் கே.ஆர்.ஜி. வார்த்தைக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்பதால், மறுக்க முடியாமல் அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டு அந்த பத்திரிக்கையாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தேன்.

பத்திரிகையாளர் கூட்டம் சிறப்பாக நடந்தது. மறுநாள் அனைத்து பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியானது. அந்த பத்திரிகை செய்திகளை எடுத்து கொண்டு திரு.கே.ஆர்.ஜியிடம் காண்பிப்பதற்காக சென்ற போது, அவர் அத்தனை பத்திரிகைகளையும் ஆர்வத்துடன் பார்த்தார். எனது வேலையை பாராட்டினார்.

நான் டைமண்ட் பாபுவிடம் எத்தனை ஆண்டுகளாக உதவியாளராக வேலை செய்கிறேன் என்பதை கேட்டறிந்தவர், பிறகு என்னைப் பற்றியும் என் குடும்பம் பற்றியும் வருமானம் குறித்தும் விசாரித்தார்.

காலையில் இருந்து இரவு வரை நேரம் காலம் பார்க்காமல் சங்கத்துக்கும், உறுப்பினர்களுக்கும் விசுவாசமாக வேலை செய்ய ஒரு ஆள் தேவை. நீ என் கூட இங்கே இரு. நான் டைமண்ட் பாபுவிடம் சொல்லி அவருக்கு வேறு உதவியாளர் வைத்துக்கொள்ள சொல்கிறேன் என்று கூறினார்

அருகில் இருந்த மேனேஜர் சீனிவாசன், செயலாளர் டி.என்.ஜானகிராமன் ஆகியோரிடம் ‘’இன்னையிலிருர்ந்து சங்கத்துக்கு மக்கள் தொடர்பாளராக பாலனை நியமித்திருக்கிறேன். அவனிடம் கடிதம் வாங்கி கொண்டு வேலைக்கு சேர்த்துக் கொள்ளுங்கள்’’ என்றவர், என்னைப் பார்த்து, ‘’உனக்கு நிறைய வேலைகள் இருக்கு. நாளை முதல் அந்த வேலைகளை செய்ய வேண்டும்’’  என்று கூறினார்.

பிலிம் சேம்பர் அளவுக்கு உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். அதற்காக படம் தயாரித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களை நேரில் சந்தித்து அவர்களை தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும்.

செயற்குழு கூட்ட அழைப்பு கடிதத்தை நேரில் சென்று நிர்வாக குழு, மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும். கூட்டம் நடக்கும் போது அங்கு பேசப்படும், விவாதிக்கப்படும் நடவடிக்கைகளை குறிப்பெடுத்து புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும். முக்கிய தீர்மானங்களை உடனடியாக சுற்றறிக்கை மூலம் அனைத்து உறுப்பினர்களுக்கும் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தல், திரைப்பட சம்பந்தமான துவக்க விழா, பாடல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்களை உறுப்பினரிடம் இருந்து பெற்று செயற்குழு உறுப்பினர்களுக்கு நேரில் கொண்டு சேர்த்தல் உட்பட பல வேலைகளை செய்ய எனக்கு உத்தரவிட்டார்.

இப்படித்தான் 1994-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் நான் வேலைக்கு சேர்ந்தேன்.
அன்று மாலை ஊரில் இருந்து தொலைபேசி அழைப்பில் எனக்கு மகன் பிறந்த தகவலை அண்ணன் தெரிவித்தார். 


(என் திரையுலக வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்

Thursday, August 20, 2015

40. திறமை இருந்தாலும் சிபாரிசு வேண்டும் - ஜி.பாலன்


ஜி.பாலன்

என்னுடைய இந்த தொடர் கட்டுரையில் சுவராஸ்யத்திற்காக எதையும் சேர்க்கவில்லை. கற்பனை எதுவும் கிடையாது. நான் வந்த பாதையை கொஞ்சம் திரும்பிப் பார்த்து, அதை அசைப் போட்டு எழுதி வருகிறேன். அவ்வளவுதான். 

சினிமாத்துறையில் இயக்குநராக வேண்டும் என்கிற பெரிய கனவுகளுடன், நிறைய எதிர்ப்பார்ப்புகளுடன் வந்தேன். அதற்கான முயற்சியில் நான் பட்ட கஷ்டங்களை, அந்த அனுபவங்களை  எழுதுகிறேன். இதை எழுதும் போது என் மனதில் சுமை குறைக்கிறது. நிம்மதி அடைகிறேன்.  

கடந்த ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது, நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்து எழுதத் துவங்கினேன்.  இதில் புதுமையோ, எதிர்ப் பார்ப்போ இருக்காது என்பது எனக்கு தெரியும். இருந்தாலும் சில நண்பர்கள் இந்தக் கட்டுரையை படித்து நேரிலும், அலைபேசி வாயிலாகவும் பாராட்டு தெரிவித்தனர். சிலர் கட்டுரையின் இறுதியில் லைக் பொடுகின்றனர். கருத்து தெரிவிக்கின்றனர்.

ஒரு நண்பர் இருபது நிமிடம் பேசியவர், இந்த கதையில் விஷயம் இருக்கிறது. படமாக எடுக்கலாம். திரைக்கதை எழுதி கொடு என்றார். ஒருவர் மெகா தொடர் எடுக்கலாம் என்றார்.

நான் இப்படி எதையும் நினைத்து எழுத வில்லை. உண்மையைச் சொல்லப் போனால், ஒவ்வொரு நாளும் எழுத அமரும் போதுதான் அந்த கட்டுரைக்கான அனுவபம் நினைவுக்கு வருகிறது.  பல சம்பவங்களை ஞாபகப்டுத்திப் பார்க்கும் போது அதில் நிறைய தகவல் கிடைக்கிறது. 

அப்படி ஒவ்வொரு சம்பவத்துக்கும் விவரமாக எழுதினால் சினிமாவுக்கு வந்த அனுபவத்தில் இருந்து விலகி, வேறு ஏரியாவுக்கு சென்றதாகிவிடும். அதனால், திரையுலகிற்கு வந்த அனுபவத்தை மட்டும் சுருக்கி எழுதுகிறேன். 

நேற்று ஒரு நண்பர் அலைபேசியில் அழைத்து, ’’பிளாக் டிக்கெட் விற்றது  கூட எழுதி இருக்கிறீர்களே’’ என்று கேட்டார். 

அதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லையே?. இந்த திரைத் துறைக்குள் வர அந்த வேலையேல்லாம் செய்திருக்கிறேன் என்று சொல்லித்தான் ஆக வேண்டும்! 

யாருடைய சிபாரிசிலும் இந்த இடத்திற்கு நான் வரவில்லை. ஒரு சின்ன குக்கிராமத்தில் இருந்து வந்து, பெரிய படிப்பு எதுவும் இல்லாமல், எந்த புரிதலும் இலாமல், சென்னைப் பக்கமே வந்திராத நான்,  இந்த துறைக்கு வருவது என்பது என்னைப் பொருத்தவரை பெரிய விஷயமே. 

இன்று தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் தெரிந்தவனாக இருக்கிறேன். பிரபல இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், தயாரிப்பாளர்கள் என அனைத்து ஜாம்பவான்களுடன் பேசி பழகிய வாய்ப்பை பெற்றிருக்கிறேன். பிரிண்ட் மீடியா, டி.வி.மீடியா, சினிமா மீடியா என இந்த மீடியாவின் தொழில் அனைத்தையும் அறிந்து வைத்திருக்கிறேன். 

இருபத்தி ஐந்து வருடத்திற்கு முன்பு, நான் முயற்சி செய்த காலத்தில் திரையுலகம் ஒரு இரும்புக்கோட்டை போல இருந்தது. தனுள் நுழைவது கடினமாக இருந்தது.  

உறவினர் மூலமாக வருபவர்களுக்கும், திரையுலக்கினர் வாரிசுகளுக்கும் திரையுலகில் நுழைவது எளிதாக இருந்தது. அதன் பிறகு அவர்கள் திறமையை வைத்து நின்று கொள்வார்கள்.   

நடைமேடை இல்லாத இடத்தில் இருந்து ரயில் ஏற கஷ்டமாக இருக்கும். நடைமேடையில் நின்று ரயில் ஏறினால் ஈசியாக இருக்கும். நடைமேடை போல யாராவது சினிமாவில் இருந்தால், அவர்கள் சிபாரிசு கிடைத்தால்  நாம் உடனே எந்த துறைக்கு செல்ல ஆசைப் படுகிறோமோ, அந்த துறைக்கு ஈசியாக அவர் மூலமாக சென்று விடலாம். 

அதனால், நடைமேடை இங்கு அவசியமாக இருக்கிறது. நடைமேடை போல இங்கு எனக்கு தெரிந்தவர் கிடைத்திருந்தால், நான் எப்பவோ உதவி இயக்குநர் ஆக சேர்ந்து, அனுபவம் பெற்று, இயக்குநர் ஆகி இருப்பேன். 

அப்படி நடைமேடை இல்லாமல் நான்கு ஆண்டுகள் கஷ்டப்பட்டவன் நான்.  சென்னைக்கு வந்து பல நாட்கள் நடைபாதையில் படுத்து உறங்கி வாய்ப்பு தேடி இருக்கிறேன். 

நானே பிளாட்பாரமாக இருந்து கொண்டு சினிமா என்கிற ரயிலில் ஏற பிளாட்பாரம் கிடைக்காமல் கஷ்டப்பட்டிருக்கிறேன். முழுக்க முழுக்க என் முயற்சியால், பல அவமானங்கள், பல வேதனைகள், சோதனைகள் கடந்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். 

அதனால், உண்மையை மறைத்து எழுத விரும்பவில்லை. இது சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளவும் எழுதவில்லை. அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே மனதில் இருந்தது. அதனால், எழுதுகிறேன். 

திரையுலகில் தன்னை வளர்த்துக் கொள்ள வழி தெரியாமல், திரையுலகிற்கு வெளியே சுற்றிக் கொண்டிருக்கும் பலருக்கு, திரையுலகில் எந்த துறையில் வெற்றிபெற வேண்டும் என்று வர விரும்புகிறார்களோ அவர்களுக்கு வழிகட்ட இனி என்னுடைய கட்டுரைகளில் பலன் இருக்கும்.

திரையுலகில் நான் அடியெடுத்து வைத்து இருபத்தி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. ஒரு பத்திரிகை தொடர்பாளனாக, பத்திரிகையாளனாக, எழுத்தாளனாக, இயக்குநராக நான் இருந்து வருகிறேன்.

எனது இந்தப் பயணத்தில் நிறைய அனுபவம் பெற்றேன். அன்று முதல் இன்றுவரை பத்திரிகையாளர்கள், பத்திரிகை தொடர்பாளர்கள் கொடுத்து வரும் ஊக்கத்திற்கும் என்றென்றும் நன்றி கடன்பட்டிருக்கிறேன்.

பத்திரிகை தொடர்பாளர் ’குருநாதர்’ டைமண்ட் பாபு, தயாரிப்பாளர்கள் கே.ஆர்.ஜி., எஸ்.எஸ்.துரைராஜ், வி.சேகர், பார்த்திபன், பங்கஜ் மேத்தா, வெங்கட், சித்ரா லட்சுமணன்,  இசையமைப்பாளர் வீ.தஷி, பத்திரிகையாளர்கள் தேசிங்கு, திருவாரூர் குணா, தமிழ்மகன், சாருப்ரபா சுந்தர், சுந்தர்ராஜன், கடற்கரை, சிவக்குமார், என பலர் எனக்கு வாய்ப்பளித்து என் வளர்சிக்கு உதவியாக இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் என் நன்றியை தனிதனியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

கட்டுரை தொடர் வழக்கம் போல நாளை இடம் பெறும். நன்றி

 (என் திரையுலக வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்)

Wednesday, August 19, 2015

39. உதவி இயக்குநர் வேலைக்கு முயற்சி. - ஜி.பாலன்


ஜி.பாலன்

முதலில் என்னுடைய பெரிய சித்தப்பா மகன் கோவிந்தராசுக்கு தம்பிக்கோட்டை ரெங்கசாமி மகள் விஜயா என்பவரை நிச்சயம் செய்தனர். இரண்டாவதாக சின்ன சித்தப்பா மகன் முருகேசனுக்கு, வடசங்கந்தி வைத்திலிங்கம் மகள் லட்சுமி என்பவரை நிச்சயம் செய்தனர். மூன்றாவதாக எனக்கு பின்னத்துர் தர்மலிங்கம் மகள் தமிழ்ச்செல்வி என்பவரை நிச்சயம் செய்தனர். 

ஆனால், எனக்கு முதலில் திருமணம் நடந்தது. அவர்கள் இருவரின் திருமணத்திற்கு நாங்கள் இருவரும் வாழ்த்த சென்றோம். இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் 1992 ஆம் ஆண்டில் நடந்தது.

கோவிந்தராசுவின் மைத்துனர் சென்னையில் பிராந்திக் கடை பார் நடத்தி வந்தார். அதனால், கோவிந்தராசுக்கும் ஒரு பார் பிடித்துக் கொடுத்து சென்னைக்கு குடும்பத்தையே அழைத்துக் கொண்டார். பார் தொழிலில் நல்ல வருமானம் கிடைத்ததால், தன் தம்பி ரவிக்கு ஒரு பார் பிடித்து கொடுத்து அதைப் பார்த்துக்க சொன்னார் கோவிந்தராசு. 

ரவி, என் தம்பி நமசிவாயத்தை அழைத்துக் கொண்டான். அவனுக்கு உதவியாக இருந்து அந்த பாரை கவனித்துக் கொண்டான் நமசிவாயம். 

அப்போதெல்லாம் சில அண்ணாச்சிகள் பங்குதாரர்களாக இணைந்து பிராந்தி கடையை ஏலத்தில் எடுத்து நடத்தி வந்தார்கள். அவர்களுக்கு விசுவாசமாக இருபவர்களுக்கு பார் நடத்த உதவினார்கள். இதில் இரு அண்ணாச்சிகள் என் தம்பியின் பழக்க வழக்கம் அணுகுமுறை பிடித்துப் போக அவனுக்கும் ஒரு பார் நடத்து உதவினார்கள். 

அவனுக்கு கோடம்பாக்கத்தில் கடை கிடைத்திருந்தது. தனக்கு உதவியாக நான்கு ஆட்களை வைத்துக் கொண்டு பார் நடத்தி வந்தான் என் தம்பி. கிராமத்தில் இருந்து வந்த பார் ஊழியர்களுக்கு ஓட்டல் சாப்பாடு ஒத்துக் கொள்ளவில்லை என்று என்னிடம் தெரிவித்த போது, மூன்று வேலை சாப்பாட்டுக்கு என்ன செல்வாக்கிறதோ, அந்த தொகையை என்னிடம் கொடுத்தால் வீட்டில் இருந்து சமைத்து சாப்பாடு கொண்டு திருக்கிறேன் என்றேன். அதற்கு அவர்கள் சரி என்றார்கள். 

என் மனைவியை சென்னைக்கு அழைத்து வந்து வாடகை வீட்டில் குடி புகுந்த பிறகு டீ மாஸ்டர் வேலையை விட வேண்டியதாகி விட்டது. குருநாதர் டைமண்ட் பாபுவிடம் முழுநேரமாக உதவியாளராக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனக்கு மாதம் முன்னூறு ரூபாய் சம்பளம் கொடுத்தார். 

வீட்டு வாடகை ஐநூறு, குடும்ப செல்வுகள், மருத்துவ செலவுகள் என பண தேவைகள் அதிகமாக இருந்தது. அதனால், பார் ஊழியர்களுக்கு சாப்பாடு கொடுப்பது, குருநாதரின் தந்தை பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள் தரும் வேலைகளை செய்து கொடுத்து அதன் மூலமாக வருமானம் பெறுவது, சிறுகதைகள் எழுதி அதன் மூலம் சன்மானம் பெறுவது, காசி திரையரங்கில் சனி, ஞாயிறு நான்கு காட்சிகளுக்கும் ஐந்து டிக்கெட்கள் முன் பதிவு செய்து, டிக்கெட்டின் விலையைவிட இரண்டு ரூபாய் அதிகம் வைத்து விற்பது என்று சில வேலைகளை செய்து வருமானத்தை பெருக்கினேன்.

வேலைக்கு செல்ல தினமும் பஸ்ஸில் செல்வதால் அதிக நேரம் செலவானது. அதனால், நேர செலவை மிச்சப்படுத்த நானூறு ரூபாயில் ஒரு சைக்கிள் வாங்கினேன். அது என் வாழ்க்கைக்கு பெரிய உதவியாக இருந்தது. 

எனது தம்பி நமசிவாயம் சம்பாதித்த வருமானத்தை சேமித்து, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் தங்கைக்கு சீர்வரிசை கொடுக்கவும், ஐந்துக்கு மருந்து கொடுக்கவும், பிரசவ செலவுக்கு பயன் படுத்தவும் உதவியாக இருந்தது .

இப்படி நான்கு மாதங்கள் ஓடின. பிரசவ காலம் என்பதால் என் மனைவியை அவரது தாய் வீட்டிற்கு அழைத்து சென்றார்கள். என் ஒருவனுக்கு வீடு எதற்கு என்று வீட்டை காலி செய்து, கோடம்பாக்கத்தில் என் தம்பியும், அவனது ஊழியர்களும் இருந்த அறைக்கு சென்று தங்கினேன்.  

ஆர்.கே.செல்வமணி இயக்கிய ராஜமுத்திரை படத்திற்காக புதுடெல்லியில் உள்ள திகார் ஜெயிலில் படப்பிடிப்பு நடத்த, அப்போது சிறைத்துறை அதிகாரியாக இருந்த கிரண்பேடியிடம் அனுமதி பெறவும், மும்பை ரயில் நிலையத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி பெறவும், குருநாதர் டைமண்ட் பாபு வட இந்தியா சென்றிருந்தார். 

திரைப்படத் துறையில் இயக்குநராக சிறக்க வேண்டும் என்று வந்த நான், மக்கள தொடர்பாளரின் உதவி பணியை மட்டுமே செய்கிறேனே?.  குருநாதர் டைமண்ட் பாபு சென்னை திரும்பியதும், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி அவர்களிடம் உதவி இயக்குநராக வேலை செய்ய, வாய்ப்பு ஏற்படுத்தி தரும்படி கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். 

உதவி இயக்குநராக வேலை செய்தால், சம்பளம் எதிர்ப்பார்க்க முடியாது. குடுமப செலவுகளுக்கு என்ன செய்வது என்று ஒரு குழப்பம், பயம், மனதில் உருவானது. 

உதவி இயக்குநர்களுக்கு ஒரு படத்திற்கு என்ன சம்பளம் தருவார்கள் என்று தெரிந்து கொள்ள, செல்வமணி சார் ஆபீஸ் மேனேஜர் ஆன்ரூஸ் அவர்களிடம் கேட்டுக் கொண்டிருந்த போது, அங்கு வந்த புரொடக்‌ஷன் மேனேஜர் மல்லியம்பட்டி மாதவன் என்னை ஏற இறங்க பார்த்தார். 

அதிரடிப்படை இரவு நேர படப்பிடிப்பு தாளமுத்து நடராஜன் மாளிகையில் நடந்த போதும், சைதாப்பேட்டை பாலம் அருகே கட்டிக் கொண்டிருந்த பனகல் கட்டிடத்தில் நடந்த போதும், இந்த எண்ணத்தில் தான் அங்கு வந்தாயா? என்பது போல பார்த்தார்.

என் ஆர்வத்தையும், முயற்சியையும் அவரிடம் சொன்னேன். அதற்கு அவர், குடும்பம், வருமானம் என்று உதவி இயக்குநருக்கு முயற்சி செய்ய கூடாது. ஷாட் எப்படி வைக்கிறார். நடிப்பை எப்படி வாங்குகிறார் என்று தொழிலை கத்துகிற எண்ணத்தில் மட்டும் வரணும். ராஜமுத்திரை படத்திற்கு நிறைய உதவியாளர்கள் இருக்கிறார்கள். அதனால், அடுத்தப் படத்தில் சேர்ந்து கொள்ளலாம் என்றார்.

 (என் திரையுலக வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்)

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...